வரதா மணிநீ - தர்பாரி கானடா

திருப்புகழில் உள்ள அருணகிரிநாதர் இயற்றிய ’வரதா மணி நீ’ - திருப்புகழ் 194 - என்ற சந்தப் பாடலை நெய்வேலி திரு.சந்தானகோபாலன் சென்னை மார்கழி உதசவத்தில் (2017) தர்பாரி கானடா இராகத்தில் பாடினார். யு ட்யூபில் இப்பாடலைக் கேட்டேன்; இனிமையாக இருந்தது.

பாடல் - வரதா மணி நீ (பழநி)

தனனா தனனா ...... தனதான
தனனா தனனா ...... தனதான

......... பாடல் .........

வரதா மணிநீ ...... யெனவோரில்
வருகா தெதுதா ...... னதில்வாரா(து)

இரதா திகளால் ...... நவலோக
மிடவே கரியா ...... மிதிலேது

சரதா மறைஓ(து) ...... அயன்மாலும்
சகலா கமநூ ...... லறியாத

பரதே வதையாள் ...... தருசேயே
பழனா புரிவாழ் ...... பெருமாளே.

பொருளுரை:

வரதா! வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும், கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும் நீதான் என்று ஆராய்ந்து பார்த்தால் கைகூடாதது எது உண்டு? எந்தக் காரியம்தான் அவ்வாறு துதித்தால் நிறைவேறாது?

பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும் ரசவாத வித்தை மூலம் ஒன்பது லோகங்களை* இட்ட கூட்டுறவால் இறுதியில் கரியாகும். இதனால் வேறு பயன் ஏது?

சத்திய சொரூபனே! வேதம் ஓதும் பிரமனும் திருமாலும் எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய குழந்தாய்! பழனியம் பதியில் வாழ்கின்ற பெருமாளே.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Feb-18, 11:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 118

சிறந்த கட்டுரைகள்

மேலே