கண்ட நாள் முதலாய்-பகுதி-43

....கண்ட நாள் முதலாய்.....

பகுதி : 43

அனைத்தையும் கேட்டு விட்டு கீழே திக்பிரம்மை பிடித்தவன் போல் வந்து சேர்ந்தவன்,தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே புரியாமல் குழம்பி நின்றான்...அர்ஜீனின் வாய் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்தான் அவனுக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது...

அரவிந்தனால் அப்போதைக்கு எதையுமே யோசித்துக் கொள்ள முடியவில்லை...அவனது மனம் இரண்டு கோடுகளிற்கு நடுவில் நின்று போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது...முதலெல்லாம் சிறிதாக தெரிந்த விடயங்கள் அனைத்தும் அப்போது அவனிற்கு பெரிதாகத் தோன்றி தலை வலியை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன...

அதற்கு மேலும் அங்கே இருந்தால் தன் தலையே வெடித்துவிடும் என்ற அளவிற்கு அவனை அத்தனையும் ஒன்று சேர்ந்து துரத்தியடிக்க..அங்கிருந்து முதலில் கிளம்ப வேண்டுமென்று முடிவு செய்து கொண்டான்...ஆனால் அதற்குள்ளாகவே அவனை வந்து பிடித்துக் கொண்ட பரத்தின் தந்தை..அவனை மணமேடையில் விட்டுச் சென்றார்...

அவரின் இழுப்பிற்கு பின்னாலேயே சென்றவன்,மண மேடையில் ஓர் சிலை போலே ஓரமாக நின்று கொண்டான்...முன்னே நடந்து கொண்டிருந்த சடங்குகள் ஒன்றும் அவன் மனதில் பதியவில்லை...அவனது மனம் முழுதும் துளசியையே சுத்திச் சுத்தி வந்து கொண்டிருந்தது...

அரவிந்தனின் நிலைமை இவ்வாறிருக்க...அர்ஜீன் பவியின் ஆறுதலில் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை சமாதனம் செய்து கொண்டு மீண்டும் தொடர்ந்தான்...ஆனாலும் அப்போதும் பவியின் கரம் அவனிடத்தில் இருந்து மீளவில்லை...அவனும் தனது கரத்தை அவளிடத்தில் இருந்து எடுக்க வேண்டுமென்று நினைக்கவில்லை...

"துளசியை நான் காதலிச்சேன் என்கிறது எவ்வளவு உண்மையோ...அதே அளவுக்கு இப்போ அவங்க மேல அண்ணி என்கிற மரியாதை வச்சிருக்கிறதும் உண்மை...அதைத்தவிர இப்போ என் மனசில எதுவுமேயில்லை...அவங்க என் அண்ணாவோட மனைவி...எனக்கு அண்ணி...இந்த உறவு மட்டும்தான் எங்களுக்குள்ள..."

"அதனால என்னால ஏதும் பிரச்சினை வந்திடுமோன்னு நீங்க பயப்பிடத் தேவையில்லை...இதை எல்லாம் ஏன் உங்ககிட்டத் தெளிவுபடுத்துறேன்னா...எனக்கு உங்ககிட்டயிருந்து தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விசயமிருக்கு..."என்று கேட்டுக் கொண்டே வந்தவன் அவளது முகமாற்றத்தைக் கண்டு அவள் பேசுவதற்கான இடைவெளியைக் கொடுத்தான்...

"என்கிட்ட இனியும் கேட்க என்னயிருக்கு...அதுக்கு அவசியமில்லாம எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும்தான் நீங்களே சொல்லிட்டீங்களே...??..."

"இருக்கு...என்னோட காதலைப்பத்தி என்னோட அண்ணாக்கு எதுவுமே தெரியாது...ஏன் என் காதல்பத்தி துளசிக்கே தெரியாது...அவங்களை நான்தான் அன்னைக்குப் பார்த்தேனே தவிர அவங்க என்னைப் பார்க்கல..."

"ஆனால் நீங்க அன்னைக்கே என்னை கவனிச்சிருக்கீங்கன்னா...இதைபத்தி துளசிக்கிட்ட ஏதும் சொல்லியிருக்கீங்களா...??..."

அவன் பயப்படுவது அவளுக்குப் புரிந்தது...அவனால் அவர்களுக்குள் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாதென்று நினைக்கிறான்...அவனை இங்கே கண்டதுமே அவளுக்குள்ளும் அந்த பயம் தோன்றியதுதானே...அன்றைய சூழ்நிலை வேறாக இருந்திருந்தால் நிச்சயமாக அவள் இதை துளசியிடம் கூறியிருப்பாள்தான்...

ஆனால் அன்று இதைப்பற்றி கூறும் மனநிலையில் அவளும் இருக்கவில்லை...அதைக் கேட்டுக் கொள்ளும் மனநிலையில் துளசியும் இருக்கவில்லை...சில வேளைகளில் சில நிகழ்வுகள் நடப்பதற்கு பின்னால் ஏதாவது ஒரு காரணம் இருக்குமென்று சொல்வார்கள்...அது உண்மைதான் என்பதை இப்போது இந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டாள் பவி...

அவளது அந்த சிறிது நேர மௌனம் அர்ஜீனுக்குள் இன்னும் பதற்றத்தை உண்டு பண்ண,

"என்னங்க அமைதியாயிட்டீங்க...??.."

அவன் கேட்டதும்தான் யோசனைகளிலிருந்து விடுபட்டுக் கொண்டு வந்தவள்,

"இல்லை அர்ஜீன்...இதைப்பத்தி துளசிக்கு எதுவும் தெரியாது...நான் எதுவுமே அவள்கிட்ட சொன்னதில்லை...இனியும் இதைப்பத்தி நான் எதுவும் சொல்லப் போறதுமில்லை...என் மூலமா இந்த விசயம் துளசிக்கிட்ட போகாது...நீங்க என்னை நூறு வீதம் நம்பலாம் அர்ஜீன்..."

அவளிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்ட பின்புதான் அவனது முகத்தில் பழைய வெளிச்சம் வந்தது என்றே சொல்ல வேண்டும்...

"என் மூலமாயும் அவங்களுக்குள்ள எந்தப் பிரச்சினையும் வராது...என்னையும் நீங்க நூற்றுக்கு நூறு வீதம் நம்பலாம்..."

அவனும் அவளைப் போலவே சொன்னதில் அவளின் உதட்டோரமாய் புன்முறுவல் பூத்தது...அந்தப் புன்னகை எதிரில் நின்றவனையும் தொற்றிக் கொள்ள...இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்தோடு புன்னகைத்துக் கொண்டார்கள்..

"சரி...இனி நாம கீழே போலமா...??.."

"ம்ம்...போலாமே என்று குறும்பாகச் சிரித்தவன்,அவனது கரத்தினைப் பற்றியிருந்த அவளின் கரத்தினைப் பார்த்தான்...அவனின் பார்வை போகும் திசையையே தானும் பார்த்தவளிற்கு...அப்போதுதான் தான் தனது கையினை இன்னும் அவனிடத்தில் இருந்து எடுக்கவில்லையென்பதே புரிந்தது...

ஒருவிதக் கூச்சம் அவளுள் தோன்ற தனது கரத்தினை உடனேயே அவனிடமிருந்து எடுத்துக் கொண்டாள் பவி...அவள் கையினை அவனிடத்திலிருந்து எடுத்துக் கொண்ட வேகத்தில் அவனின் புன்னகை மேலும் விரிந்தது...

கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தன்னோடு சரிக்கு சமமாக நின்று சண்டை போட்டவள் இவள்தானா என்ற சந்தேகம் அந்த நொடியில் அர்ஜீனிற்கு வந்தது...அவளின் சின்னச் சின்ன அசைவுகளைக் கூட அவள் அறியாமலேயே ரசிக்கத் தொடங்கினான் அவன்...

"என்ன இவன் போலாம் என்று சொல்லிவிட்டு அசையாமல் அப்படியே நிற்குறானே...??.."என்ற கேள்வியோடு அவனைத் திரும்பிப் பார்த்தவள்...அவனது பார்வையில் தெரிந்த வித்தியாசத்தில் மொத்தமாகவே தடுமாறிப் போனாள்...ஏற்கனவே அவனது அருகாமையில் தன்வசத்தினை இழந்து தவியாய் தவித்துக் கொண்டிருந்தவள்...இப்போதோ அவனது விழிகள் கூறிய புது மொழிகளில் மொத்தமாகவே அவனிடம் தன்னை இழக்கத் தொடங்கினாள்...

"இவன் வேற...நம்ம நிலைமை புரியாம இப்படிப் பார்த்து வைக்கிறானே...??...இப்ப பார்க்குற பார்வையை இவன் மட்டும் அன்னைக்கே என்னைப் பார்த்து தொலைச்சிருந்தா...இன்னைக்கு இவனும் நானும் சேர்ந்து டூயட் பாடியிருக்கலாம்...அன்னைக்கு பெரிய இவன் மாதிரி என்னை அக்கினிப் பார்வை பார்த்திட்டு இப்போ வந்து மன்மதன் ரேஞ்சுக்கு பார்த்துத் தொலைக்குறியேடா...உன்னை என்னதான் செய்யலாம்...??..."என்று அவள் மனதிற்குள்ளேயே அவனை திட்டித் தீர்த்துச் சண்டை பிடித்துக் கொண்டிருக்க...அவனோ அவள் மனதில் கேட்ட கேள்விக்கு வெளியில் விளக்கம் கொடுத்து அவளுக்கு மயக்கமே வர வைத்துவிட்டான்...

"என்ன வேணும்னாலும் செய்யலாம்.."

"என்ன...என்னது...??.."என்று உளறிக் கொட்டியவாறே அதிர்ந்து போய் நின்றாள் பவி...அவன் மனதில் நினைத்ததை கண்டுபிடிக்கும் வித்தைக்காரானாக இருப்பான் என்று அவளென்ன கனவா கண்டாள்...அவன் போட்ட போட்டில் அவளது இருதயம் தடக் தடக்கென்று அடித்துக் கொண்டது...

அவளின் அந்த தடுமாற்றத்தை உள்ளூர வெகுவாகவே ரசித்துக் கொண்டான் அர்ஜீன்...அவளிற்கும் அவனுக்குமான இடைவெளியைக் குறைத்து அவளுக்கு நெருக்கமாகிக் கொண்டவன்,அவளின் காதோரமாய் ரகசியம் பேசினான்...

"என்னை நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம்...அந்த உரிமை இனி உனக்கு மட்டும்தான் இருக்கு..."என்று அவன் கூறிய வார்த்தைகள் அவள் மனதில் பதியும் முன்னே அவன் அங்கிருந்து சென்றுவிட்டிருந்தான்...

அவன் கூறிச் சென்றதையே மீண்டும் மீண்டும் மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டிருந்தவள்,நடப்பவை எல்லாம் கனவா இல்லை நனவா என்ற குழப்பத்தில் அப்படியே அசைவற்று நின்றாள்...துளசி வந்து அவள் முதுகில் ஒன்று வைக்கும் வரை அவள் அப்படியேதான் நின்றாள்...

"ஆஆஆ...இப்போ எதுக்குடி அடிச்ச...??.."என்று முதுகைத் தடவிக் கொடுத்தவாறே அவளிடம் பாய்ந்தாள் பவி..

"ஏன்டி இப்படிப் பேயறைஞ்ச மாதிரி போஸ் கொடுத்திட்டு இருந்தா...அடிக்காமா...கொஞ்சுவாங்களா...??.."

அவளின் அந்தக் கேள்வி பவிக்கு அன்றைய நாள் உணவகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவுபடுத்திச் சென்றது...அன்றும் இதே போல்தானே அவளும் துளசிக்கு அடி வைத்தாள்...அன்று தன்னை அவளிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காய் தான் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளப் பட்ட பாட்டை இன்று நினைத்துப் பார்க்கையில் அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது...

"பவி...உனக்கு என்னதான்டி ஆச்சு..??...உனக்கு நீயே சிரிச்சிட்டிருக்க...??.."

அவள் அப்படிக் கேட்டதும் அன்றைய நாளினை அவளோடும் மீண்டும் பகிர்ந்து கொள்வதற்காய் வாயைத் திறந்தவள்,திடீர் ஞானம் பெற்றவளாய் வாயை இறுகவே மூடிக் கொண்டாள்..

"இப்போதான் அர்ஜீனோட பேசி ஒரு விசயத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க...இதில பழசை வேற மறுபடியும் கிளறி அந்த இன்னொருத்தனோட ஞாபகத்தையும் துளசிக்கு கொண்டு வரனுமா..??.."

"அர்ஜீனுடைய காதல்பத்தி துளசிக்கு எதுவுமே தெரியாது...அதனால் அவனோடயே அது முடிஞ்சுது...ஆனால் இந்த விசயம் அப்படியில்லையே...அர்ஜீனாச்சும் தூரமா நின்னுதான் காதல் செஞ்சான்...ஆனால் அன்னைக்கு துளசியோட மோதிச் சென்றவன் அப்படியில்லையே..இவளுக்குள்ளேயும் அல்லவா காதலை விதைத்துச் சென்றுவிட்டான்..."

"இந்த இரண்டிலுமே நடந்த நல்லதென்றால் துளசி அர்ஜீனையும் சரி...மோதிய மற்றவனையும் சரி பார்க்கவில்லை என்பது மட்டும்தான்..அந்த வகையில் உள்ளூரக் கொஞ்சம் சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..."என்று தனக்குள்ளேயே பேசி முடித்தவள்,துளசியை சமாளித்துக் கொள்ளும் வேலையில் இறங்கினாள்...

"என்னடி துளசி....இன்னைக்கு உன் ப்ரண்டை இப்படி வைச்ச கண் வாங்காம பார்த்திட்டிருக்க..??.."

"ம்ம்...உன்னை இப்படிப் பார்க்கனும்னு எனக்கு வேண்டுதல் பாரு...ஏன்டி தனியா சிரிக்கிறாய்னு கேட்டா...அதுக்கு பதிலை சொல்லாமா உனக்குள்ள நீயே பேசிட்டிருக்க...லண்டன் போனதும் போன ஆளே ஒரு மார்க்காமாத்தான்டி இருக்க...ஸ்வியோட கல்யாணம் முதல்ல முடியட்டும் அப்புறம் உன்னைக் கவனிச்சுக்குறேன்..."

"ஏன் சொல்லமாட்ட....உனக்கென்னமா கவலை...நீ பாட்டுக்கு அரவிந்தன் கூட கூலா டூயட் பாடிட்டு இருக்க...இங்க நான் ல அதுவான்னும் புரிஞ்சுக்க முடியாமா..?..இதுவான்னும் தெரிஞ்சுக்க முடியாமா தத்தளிச்சிட்டிருக்கேன்...அவனாச்சும் ஒழுங்கா சொன்னானா..??...உனக்குத்தான் உரிமையிருக்கு கடமையிருக்குன்னு சொல்லிட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான்...இதில இருந்து நான் என்னத்ததான் புரிஞ்சுக்கிறது..."என்று தன் நிலைமையை எண்ணி இப்போதும் மனதிற்குள்ளேயேதான் பொருமிக் கொண்டாள் பவி...

பவி பாட்டிற்கு மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டிருக்க,அவள் எதிரேயே நின்று கொண்டு அவளிடமிருந்து ஏதாச்சும் பதில் வருமா என்று காத்துக் கொண்டிருந்த துளசிதான் கொதித்துப் போய்விட்டாள்...

"இப்போ எதுக்குடி இப்படி முறைக்கிற...??..."

"என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது...??...நான் கேட்குற ஒன்னுக்கும் நீ வாயே திறக்க மாட்ட...நீ கேட்குற எல்லாத்துக்கும் நான் மட்டும் பதில் சொல்லிட்டே இருக்கனுமாக்கும்..."

"ஸ்விய மணமேடைக்கு நானும் நீயும்தான் அழைச்சிட்டுப் போகனும்...அதான் உன்னைக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்...நீ வாரன்னா வா...இல்லைன்னா இங்கேயே நின்னு உன்பாட்டுக்கு பேசிட்டேயிரு..."என்றவள் விறுவிறுவென்று அங்கிருந்து சென்றுவிட்டாள்..

மறுபடியும் பேசிக்கொள்ளத் திறந்த மனதினை மூடிக் கொண்டவள்...அதற்கு மேலும் தாமதிக்காமல் அவள் பின்னேயே சென்றாள்...ஆனால் அன்று முழுவதுமே அவள் மனதிற்குள்ளேயேதான் பேசியாக வேண்டுமென்று கடவுள் விதித்துவிட்டார் போலும்...

யாரை அவள் மீண்டும் துளசிக்கு நினைவுபடுத்திவிடக் கூடாதென்று நினைத்தாளோ...அவன் அவளிற்கு அடுத்த கணமே மணமேடையில் வைத்து தரிசனம் கொடுத்தான்...அவனைக் கண்ட அதிர்ச்சியில் அவளின் இதழ்கள் மூடிக் கொள்ள,மனம் மீண்டும் அவளைத் தன்னிடம் பேச அழைத்துக் கொண்டது..காலம் தன் விளையாட்டை நிறுத்திக் கொள்ளாமல் மீண்டும் தொடங்கி வைத்ததில் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி நின்றாள் பவி...


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (6-Feb-18, 10:07 pm)
பார்வை : 563

மேலே