நான்தான் உன் தொலைபேசி

என்னில் நீ தோன்றவில்லை..
என்னை நீயேதான் தோற்றுவித்தாய்..

தோற்றுவித்த உன்னை..
ஏற்றுவிக்கவே மண்ணில்
உனக்காய் வந்தேன்
உள்ளங்கைக்குள்ளே..!!

உலகில் நீ உச்சம் தொட-என்
உதவியெனும் எச்சம் தந்தேன்..!!
எச்சந்தந்த எனைமெச்சி-உனை
சொச்சம் மதித்தவரையும்..
துச்சமென மிதித்தாய் நீ-துளியும்
மிச்சமில்லாமல்..!!

என்னால் நீயில்லை..!!
என்
கரம் பற்றி
கற்க
கதைபேச
களிக்க-நீ வந்தாய்..!!

என்னால் உன்னில் போர்களம்..!!
என்மத்தமே உன்மனமாய்..
உன்சித்தமே வீண்கணமாய்..
என்னிலுன் எதார்த்தம் அழிந்து..
என்னாலுன் ஏகாந்தம் சிதைந்து..
என்னில் ஏழுலகமும் கண்டு..
என்னால் நீ எல்லோரையும் வெகுண்டு..
என்னில் எதார்த்தத்தை மறந்து..
என்னால் எல்லோரையும் துறந்து..
என்னில் என்றும் உரையாடி..
எதிர்நின்று உறவாட பிழைகோடி..
உன்னைக்கண்ட நான் திகைக்க..
என்னைக்கண்டு நீ தகிக்க..

என்னுள் ஏன்
எண்ணற்ற
உன் உணர்வு பரிமாற்றம்..!!!
உரிமைத் திண்டாட்டம்..!!

பாசமோ பகையோ- என்றும்...!!!!
கண் பார்த்தே கதை பேசு..!!

முகம் பார்த்தே
முழுவதும் உளறு-என்றும்
அகம் பார்த்தே
அன்பை அறிந்துகொள்..

கொல்லுமளவு
கோபமா..???
கொட்டித்தீர்த்து
ஆதங்கம் அடக்கிக்கொள்..


நடுவில்
நான் எதற்கு..???

நான் சொல்வதை கேள்..!!

உறவாடு நீ முகம் பார்த்து..!!
உதைத்தெரிந்துவிடு எனை..
உன் உறவுகள்முன்..!!
உலகம் அறிய
உரியவை கற்க
உபயோகி..!!!
ஊரார் முன்
உன் மொழியால் உறவாடு..!!
என் மொழியை
ஊமையாக்கு..!!

உன்னில் நான்
உபயோக பொருளே..!!

உண்மை
உன் உள்ளந்தவழும்
உரிமை மொழிகளே..!!

நான்-பொய்..!!
நீயே-உண்மை..!!

புரிந்ததா மகளே..???


-இங்ஙனம்(regards)
தொலைபேசி

எழுதியவர் : பகவதி லட்சுமி (8-Feb-18, 3:33 pm)
சேர்த்தது : பகவதி லட்சுமி
Tanglish : naan solvathai kel
பார்வை : 418

மேலே