எதையோ தேடியபடி -2 ஸ்மைலி

தேடுகிறேன் தேடுகிறேன்
மகிழ்ச்சியைத் தேடுகிறேன்
இந்த பிறைநிலவு
உதட்டு வளைவுகள்
முற்றிலும் மறந்திட்ட
புன்னகைச் சுழிகளைத்
கண்ணாடியில் தேடுகிறேன்

பொன் வாயும்
பூப்போன்ற இதயமும்
கூட்டுச் சேர்ந்துகொண்டு
தினம் காரணமில்லாமல்
வீட்டுச் சுவரெல்லாம்
அதிர சிரித்திட்ட
வெடி சிரிப்பு
சத்தம் எல்லாம்
இப்போது பண்டிகைக்கு
ஒருமுறை வெடிக்கும்
பட்டாசு சத்தம்போல
எப்போதாவது எங்காவது
தன்னைமறந்து மட்டும்
வந்து போகிறது

என்னருகில் நின்று
என்னோடு நடந்து
என்னோடு விளையாடி
என்தோள் சேர்ந்து
என்னோடு கலந்திருந்தது
எந்தன் சிரிப்பொலியோடு
அன்னிச்சை அதிர்வலையாய்
அழகாய் சேர்ந்து
அலையோடு சேர்ந்த
அந்த இரைச்சலாய்
ஒட்டிக்கிடந்த
சிரிப்புச்சத்தத்தை
கொஞ்சமும் எனக்குத்
திருப்பித் தந்துவிடமுடியாமல்
முகத்தை ஆட்டியபடி
கண்ணை உருட்டி
உதடு சுளித்து
வளைத்துக் கொண்டிருக்கும்
வாட்ஸாப்ப் ஸ்மைலியில்
கடந்தகாலத்தோடு
கடந்து போன
மகிழ்ச்சியை ஏக்கத்தோடு
தேடுகிறது மனசு

தோற்றுப் போன
தேடலோடும்
நேற்று கிடைத்த
வேற்று மணிதெரெல்லாம்
முகநூல் நண்பர்களாகி
முகமற்ற கூட்டத்தில்
காற்று போல
பரவி விரிகிறது
ஸ்மைலி எறும்புகள்
சாரை சாரையாய்

சிரிக்க மறந்த
கூட்டம் எல்லாம்
உதடும் இதயமும்
இறையால் சிரிக்க
உருவாக்கப்பட்டன
என்று மறந்து
விரல்களுக்கு சிரிக்கத்
தெரியும் என்ற
புது கண்டுபிடிப்புப்போடு
குடு குடு விரல்கள்
வழியாக ஒவ்வொரு
ஸ்மைலியாக பொருக்கி
அனுப்பி அனுப்பி
சிரித்துப் பார்க்கிறது

அது சிரிப்பல்ல
என்று தெரியாமல்
இன்னொரு விரல்
எதிர்முனையில் இருந்து
ஸ்மைலி கூட்டத்தில்
இருந்து இன்னொன்றை
பொறுக்கித் திருப்பி
அனுப்புகிறது

சிரிக்கிறார்களா அல்லது
போர் செய்கிறார்களா
என்று தெரியாமலே
வேகமாக விரலென்னும்
வாட்கள் வீசப்படுகின்ற்றன
வார்த்தைகள் பலநேரம்
சலித்துக்கொண்டு தூரம்
போய் விடுகின்றன

அலைபேசியும் கணினியும்
குசுகுசுவென பேசிச்
சிரிக்கின்றன சத்தமாய்
மிஷன் சக்ஸஸ்
மனிதன் சிரிப்பை
தொலைக்கும் நாட்களை
எட்டிவிட்டோம் என்று!

இந்தச் சிரிப்பு
ஸ்மைலி சிங்காரி
அதிக ஒப்பனை
தீட்டிய அசிங்க
முகம்போல சில
நேரம் தெரிகிறது
கண்ணாடி பார்க்கும்வரை
ஒப்பனை அழகுக்காரி
கர்வமாய் நடப்பதைப்போல
எல்லாப்பக்கமும்
சுற்றித் திரிகிறாள்
ஸ்மைலி அழகி

ஒப்பனை அழகுக்காரியை
உண்மை அழகுக்காரி
என்று நம்பி பின்னால் அலையும்
வயதுகோளாறு கொண்ட
இளைஞனைப்போல
அலையுது மனிதனின்
அற்ப அதிசய மனசும்
பாழாய்ப்போன கண்களும்

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (9-Feb-18, 4:09 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 91

மேலே