ஹைக்கூ உலா நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் பேராசிரியர் மித்ரா

ஹைக்கூ உலா !


நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !



நூல் விமர்சனம் : பேராசிரியர் மித்ரா !



226, இரண்டாவது கிழக்கு குறுக்குத் தெரு, அண்ணாமலை நகர், முத்தையா நகர், சிதம்பரம் – 608 002.




வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.

தொலைபேசி : 044 24342810, 24310769

விலை : ரூ. 80.



******

சங்க இலக்கியத்தில் புன்னை, ஞாழல் இருப்பை, ஓமை, தேக்கு, பனை, இலவம், முருக்கு, தாழை, வெதிர், வாகை, வேங்காய், மரா, பாதிரி, மிடவம், கொன்றை, நெல்லி, காயா போன்ற எண்ணிலா மரங்கள் இருந்ததை அறியலாம்.



கவிஞர் இரா. இரவி தமது ஹைகூவில் கொடிய கருவேலமரத்தைக் குறிப்பிட்டு விட்டு அம்மரம் கோடையில் நுங்கு தந்து உடல்நலம் காப்பதைக் குறிப்பிட்டு விட்டு, யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இழந்தாலும் ஆயிரம் பொன் என்னும் பழமொழியைச் சொல்லும் இரவியின் ஹைக்கூ,



“யானை போன்று

ஆயிரம் பொன்

பனைமரம்”.
(ஹைக்கூ உலா ப. 37)

என வந்துள்ளதாகும்.

சங்க இலக்கியத்தில் முருங்கை,

“நெடுங்கால் முருங்கை வெண்பூ” (அகம்)

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முருங்கைப் பூவின் காம்பு நீட்சியும், அம்மலரின் நிறமும் குறிப்பிடப்பட்டுள்ளது. முருங்கை மரம் பூ, காய், இலை அனைத்தும் பயன்தரத்தக்கவை என்பதனைக் கவிஞர் நன்கறிந்து.



“பூ காய இலை

முழுவதும் பயன்படும்

முருங்கை மரம் !
(ஹைக்கூ உலா ப. 37)



தாமரையை மேய்ந்து, எருமை அறுத்து விட்ட பலாமரத்து நிழலில் தூங்கியதை



“தட மடுப்பு எருமை தாமரை முனையின்
முடமுதிர் பலவன் கொழுநிழல் வறியும் (அகம்)

கவிஞர் இரா. இரவி, மனித உணர்வில் ஏற்றிச் சொல்வதை,



“புறம் முள்ளாக

அகம் இனிக்கும் சுளையாக
பலா !

(ஹைக்கூ உலா ப. 37)



என்னும் ஹைக்கூவால் அறியலாம்.



இவை போல நீண்ட காலம் வாழ்ந்து பயன்தரும் தேக்கு, அழகாக இருந்தும் பயனில்லாத மனிதர்களைப் போன்ற விசிறி வாழை, கோடை மழையில் மகிழும் மரங்களை, மரம் நட்டால் மட்டும் போதாது, நீர் ஊற்றமும் வேண்டும், இல்லையேல் கருகும் என்பதனை, மரங்களை நட்டாலும் சிலர் அவைகளை பராமரிப்பதில்லை, போலி மரத்தின் பயன்இன்மையை கவிஞர் இரவி ஹைக்கூவாக்கியுள்ள விதம் பாராட்டத்தக்கது.



சங்க இலக்கியத்தில், தினைப்புனம் காத்த மகளிர்

வள் இதழ்

ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் நாட் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,
நந்தி, நறுவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,

(குறிஞ்சிப்பாட்டு 60 – 95



என்று தொணணூற்று ஒன்பது மலர்களைக் கவிஞர் குறிப்பிட்டு விட்டு இன்னும் பல மலர்களையும் தலைவி, தோழி ஆகியோர் பறித்து மாலையாக்கி அணிந்ததாகக் கூறினார்.



கவிஞர் இரா. இரவியும் மண்ணில் மலர்ந்த, மலரும் மலர்களைக் கணக்கிட இயலாதவை என்கின்றதை,



“எண்ணிலடங்காதவை

எண்ணம் கவர்ந்தவை

மலர்கள்”

(ஹைக்கூ உலா ப. 40)

என்ற ஹைக்கூவால் அறியலாம்.



எருக்கம் பூ என்றாலே அழகற்றவை, எருக்கஞ் செடியின் பால் பெண்குழந்தைகளை கொன்றிடவே என்னும் கருத்து நம்மில் நிலவும் போது அதன் அழகை இரசிக்கும் கவி மனதை,



“இரசித்துப் பார்த்தால்

(அழகோ அழகு)
எருக்கம் பூக்கள் !

(ஹைக்கூ உலா ப.41)



என்ற ஹைக்கூவால் அறியலாம்.



சங்க இலக்கியத்தில் மயில், கிளி, புறா, குயில், அன்றில், நீர்க்கோழி, காட்டுக்கோழி, நாரை, கோட்டான், வண்டு, குறும்பூழ், பருந்து, அரும்பு, கொக்கு, காக்கை, கழுகு, எருவை, சிரல், ஈயல், தும்பி, வாவல் போன்றவையாகும் என்கின்றார் ரெ.சுமதி.



கார் காலத்தில் மயில்கள் ஆடத் தொடங்குவதை,



“....................... நறுந்தண் புறவின்
நின்னே போல மஞ்ஞை ஆல” (ஐங் : 413)

“அணிநிற இரும்பொறை மீமிசை
மணிநிற உருவின் தோகையும்
நின்னே போல மஞ்ஞை” (ஐங் : 492)



என்னும் செய்யுட் தொடர்கள் கூறுகின்றன.



கவிஞர் இரா. இரவி, மயிலின் தோகையை வரைந்திட்ட ஓவியர் யாரோ என்று வியப்பதை,



“வரைந்திட்ட

ஓவியர் யாரோ

மயில் தோகை
(ஹைக்கூ உலா ப. 46)

என்னும் ஹைக்கூவால் அறியலாம்.

யா மரத்தின் தளிரின் தோற்றம் போல சேவலின் தாடி இருந்ததை,



“மனையுறை கோரி அணல் தாம்பு அன்ன
சுவை கண் ஒளிர கருங்கால் யா” (அகம் : 181)

என்னும் இலக்கியம்.

விடிந்த பின்பும் கூவாத சோம்பேறி சேவல் எங்கின்றார், அதனை,



“விடிந்து வெகுநேரமாகி

கூவியது

சோம்பேறி சேவல் !
(ஹைக்கூ உலா ப. 45)



என்னும் ஹைக்கூ கூறுகிறது.



இவை போல வண்ணத்துப் பூச்சியின் போராட்டத்தை, பறக்கும் பறவைகட்கு, சிறகுகள் பாரமாவதில்லை என்பதினை, சிறகுகள் இருந்தும் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் சோதிடக் கிளியை, புறாக்களின் கருப்பு வெள்ளை நிறத்தை, வட்டமிடும் பருந்தைப் பார்த்து அஞ்சும் குஞ்சுகளை, கடவுச்சீட்டு இல்லாமல் நாடுகளைக் கடந்து செல்லும் பறவைகளை, கர்வமில்லாது பறக்கும் புறாவை, நிறம் பற்றி வருந்தாத காக்கையை, பிடிபடாமல் செல்லும் வண்ணத்துப் பூச்சியைக் கவிஞர் ஹைக்கூவாக்கி உள்ள கவிஞனின் கவித்திறம் நூலில் கண்டு மகிழலாம்.



‘மது’ என்னும் ஹைக்கூ பகுதியில் கள்ளின் இயல்பினைக் கவஞர் கூறியுள்ளார். கள்ளின் செயல்பாடு யாதெனில், கள் உண்பார் உணர்விழந்த நிலையிலும் மீண்டும் அதனையே உண்ணும் விருப்பம் கொண்டிருப்பதனை,



“மகிழ்ந்ததன் தலையும் நற் உண்டாங்கு” (குறுந். 165-1)

என்னும் பாடலடி கூறுகின்றது.



இதனைக் கவிஞர் ,



“மகிழ்ச்சி என்று தொடங்கி .

துன்பத்தில் முடியும்

மது”

(ஹைக்கூ உலா ப.48)

என்கின்றார்.



மதுவினால் அரசிற்கு நிரம்ப வருமானம் கிடைக்கிறது. அது வருமானம் அல்ல, உண்மையிலே அவமானம். சாதிக்க விரும்பும் மனிதன் மதுவினைக் குடித்தலாகாது. மது உண்மையிலேயே நட்பையோ, மனித நேயத்தையோ வளர்க்காது. சண்டை, சச்சரவு, அடிதடி, வெட்டு, குத்து, சாவு என்னும் நிலையில் வன்முறையை வளர்க்கிறது. மொத்தத்தில் குடி குடியைக் கெடுக்கும் என்னும் ஹைக்கூக்களை கவிஞர் ஹைக்கூகளாக்கி உள்ளார்.



‘அலைபேசி’ என்றும் ஹைக்கூ பகுதியில் அலைபேசியும், தொலைக்காட்சியும் நேரத்தை வீணடிப்பதினை,



நேரம் விழுங்குகிறது

அன்று தொலைக்காட்சி

இன்று அலைபேசி”

(ஹைக்கூ உலா ப. 96)

என்கின்றது ஹைக்கூ..



“இயற்கை தன் ஆற்றலால் மனித வாழ்க்கையைக் கவரவும், மாற்றவும் வல்லது” என்பர் கவிஞர்.



இயற்கையின் சீற்றம் உதாரணத்துக்கு சுனாமி. அதனால் எத்தனை எத்தனையோ உயிர்களையும் ஊர்களையும் விழுங்கியது. அதன் சோக நிகழ்வுகள் மாறவோ, மறையவோ இல்லை என்பதனை



“வழிவகுக்கும்

அழிவிற்கு

இயற்கையின் சீற்றம்!

(ஹைக்கூ உலா ப. 29)

என்னும் ஹைக்கூ சொல்லும்.



புவி வெப்பமயமாதல் சுனாமிக்கு அறிகுறி என்பதனை,

“அறிகுறி

சுனாமிக்கு

வெப்பமயமாதல்”

(ஹைக்கூ உலா ப. 30)



என்னும் ஹைக்கூ சொல்லும்.



இயற்கை, மலை முதலாக கடல் இறுதியாகவும் மண் முதல் வானம் இறுதியாகவும் பரந்து விரிந்து கிடக்கிறது, அதனை.



“மழை கடல் மேகம்

தொடர் பயணம்

இயற்கை”
(ஹைக்கூ உலா ப. 29)



என்னும் ஹைக்கூவால் அறியலாம்.



கூதிர் காலத்தில் ஆற்று நீர் நிரம்பிய நிலையில் மண்ணொடு கலங்கித் தோன்றும் – கோடையில் பனிபோல் தெளிந்து ஒழுகும். அதனை,



“கூதிர் ஆயின் தன் கவிழ் தந்து
வேனி லாயின் மணி நிறம் கொள்ளும்
யானு.” (ஐங். 45)



என்னும் இலக்கியம்.



மழை இன்மையால் ஆறு குளிர்காலத்திலும், கோடை காலத்திலும் நீர் இன்றி வறண்டு கிடப்பதால் விவசாயம் நன்று நடைபெறாத நிலையில் உழவன் வருந்துவதை,



“வருத்தத்தில் விவசாயி

மகிழ்வில் மணற் கொள்ளையர்
வறண்ட ஆறு”

(ஹைக்கூ உலா ப.34)



என்னும் ஹைக்கூ கூறுகிறது.



வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் எதிர்காலம் குறித்த சிந்தனை இருக்கும். எதிர்காலம் எவ்வாறு இருக்குமோ என்று கைரேகை, சோதிடம் போன்றவற்றைப் பார்ப்பர். இவையனைத்தும் மூட நம்பிக்கையின் செயல்பாடு. உழைப்பால் வாரா உறுதிகள் உளவோ’ என்றும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கேற்ப கைகளில் மட்டுமே எதிர்காலம் உள்ளது என்பதனை,



“கைரேகைகளில் இல்லை

கைகளில் உள்ளது /
எதிர்காலம் !

(ஹைக்கூ உலா / ப. 19)



என்னும் ஹைக்கூ கூறுகிறது.



தன்னம்பிக்கையை சிறந்த சொத்து. காலம் பொன் போன்றது. தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தால் வெற்றி கிட்டும். மதத்தை மறந்து மனிதனை நினைக்க வேண்டும். உயர்வுக்கு வழிவகுப்பது நல்லதை மட்டும் நினைத்தலாகும். முயன்றால் வாழ்வில் முடியாதது ஏதுமில்லை என்னும் உன்னதக் கருத்துக்களைக் கவிஞர் ஹைக்கூக்களில் பதிவு செய்துள்ள திறம் காணலாம்.



தமிழகம் வீரத்துக்கு பெயர் போனது காளைகளை அடக்கும் வீர இளைஞனை குறிஞ்சிக் களி பேசும். அச் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தபோது மெரினாவில் திரண்ட வீர இளைஞர்கள் அதை எதிர்த்து வெற்றி கண்டார். ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்த நடுவணரசு ஒப்புதல் தந்தது. அண்டை மாநிலங்களும் ஜல்லிக்கட்டு நடந்த தமிழக ஜல்லிக்கட்டு வழிவகுத்தது. அதனை,



“படைத்தனர் மாணவர்கள்

புதிய வரலாறு

ஜல்லிக்கட்டு தடை தகர்ந்தது”



(ஹைக்கூ உலா ப.54)



என்னும் ஹைக்கூவால் அறியலாம்.



ஒரு மொழி வைத்து உலகாண்டவன் தமிழன். உலகின் முதல் மொழி தமிழ். உலகில் தமிழினமே மூத்த இனம். தமிழே முதன் மொழி அதனை,



“முதல் மொழி மட்டுமல்ல

முதன்மை மொழி
தமிழ்”

(ஹைக்கூ உலா. ப 26)

என்னும் ஹைக்கூ,



அதே போல் திருக்குறள், ஆத்திசூடி, நாலடியார், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் அருமை, பெருமைகளை கவிஞர் ஹைக்கூக்களில் எடுத்தியம்பி உள்ளார். ஊடகங்கள் தமிழைக் கொலை செய்வதனைக் கவிஞர்.



“பயிற்றுவிக்கின்றன /

ஊடகங்கள்

திமிங்கிலம்”
(ஹைக்கூ உலா ப.28)

என கவிதையாக்கி உள்ளார்.



அம்மா என்னும் பகுதியில் அம்மா என்பவள் உணர்வில், உயர்வில் உயர்ந்து நிற்பவள், உயிர் தந்து, தியாகத்தில் முடிந்து, பொறுமை காத்து, பெருமை சேர்த்தவரும் அவளே. தாயின் அன்பிற்கு ஈடு இணை இல்லை என்னும் கவிஞனின் பாசநெஞ்சை பறைசாற்றுகின்றது.



இவ்வுலகம் இன்றளவும் நிலைத்து நிற்க காரணம் மனிதநேயமே. தனக்கென வாழாது பிறர்க்காக வாழும் மனிதநேயம் மனிதனிடம் இருப்பதால் மனிதம் அழகோச்சுகிறது என்பதனை,



“மனிதனுக்கு

அழகு

மனிதநேயம்”

(ஹைக்கூ உலா. 52)



என்னும் ஹைக்கூ சொல்கிறது.



இவ்வாறு கவிஞர் இரா.இரவி எல்லாவற்றையும் ஹைக்கூவாக்கி வியக்க வைக்கிறார். நாளுக்கு நாள் ஹைக்கூகள் மெருகூட்டுகின்றன. அறிவும், ஆற்றலும், அடக்கமும், பொறுமையும் உடைய இரா. இரவி எல்லா வளமும் நலமும் பெற்று கவிதை உலகில் நிலைத்து நிற்க வாழ்த்துகின்றேன்.



சான்றோர் நட்பும் இரா. மோகனை ஆசானாகவும் பெற்றுள்ள இரா. இரவி கவித்திறம் பெற்று திகழ்வதில் மேலும் அவருக்கு பெருமை சேர்க்கின்றது. ஹைக்கூ உலகில் மேலும் உலா வர வாழ்த்துகின்றேன்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (12-Feb-18, 7:24 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 180

மேலே