நன்கறிவு இல்லான் வீட்டின் நெறிசொல்லும் ஆறே – வளையாபதி 69

கலி விருத்தம்

அந்தகன் அந்தகற்(கு) ஆறு சொலலொக்கும்
முந்துசெய் குற்றங் கெடுப்பான் முழுவதும்
நன்கறி(வு) இல்லான் அஃதறி யாதவற்(கு)
இன்புறு வீட்டின் நெறிசொல்லும் ஆறே. 69 வளையாபதி

பொருளுரை:

முற்பிறவியில் செய்த தீவினையை முழுவதும் அழித்தற்குக் காரணமான நிலையான இன்பமளிக்கும் வீடுபேற்றினையடையும் நன்னெறியினை, நன்கு அறிதலில்லாத மூடன் ஒருவன்,

அந்நன்னெறியினை முன்பே அறிந்திலாத மற்றொரு மூடனுக்கு அறிவுறுத்தும் செயல்,

ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு நெறி கூறுதலையே ஒக்கும் என்பதாம்.

விளக்கம்:

அறிவிலார் அறிவில்லாதவர்க்கு நன்னெறி கூறுதல் குருடன் குருடனுக்குச் சொல்லும் நெறியினைக் கூறுதலையே ஒக்கும்.

எனவே நல்லறங்களை அறிய முற்படுவோர் நல்லாசிரியரிடம் சென்று அவர் வாயிலாகவே அறிதல் வேண்டும் என்பது கருத்தாயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-18, 10:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62
மேலே