நாட்டுக்குக் கோன்காப்பே நல்லவணி – அணியறுபது 24

நேரிசை வெண்பா

நாட்டுக்குக் கோன்காப்பே நல்லவணி; நாட்டிவந்த
ஈட்டுக் கணிநுகர்ந் தீதலே; - பாட்டுக்குக்
கேட்டவுடன் இன்பங் கிளத்தலணி; கேள்பயிர்க்குப்.
பாட்டமே பாகார் அணி, 24

- அணியறுபது, கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரசனது பாதுகாப்பே நாட்டுக்கு அழகு; உழைத்து ஈட்டிய பொருளை அனுபவித்து ஈதலே செல்வத்திற்கு அழகு; கேட்டவுடன் இன்பத்தை ஈதலே பாட்டுக்கு அழகு; பருவ மழையே விளையும் பயிர்க்கு அழகு.

நாடு, பொருள், பாட்டு, பயிர் என்பவை உரிய தன்மைகள் தோய்ந்து வரும் அளவே நன்மைகளாய்ப் பெருமை பெறுகின்றன.

நாடு வளம் பெற ஆட்சியாளர்கள் தகுந்த திட்டங்கள் வகுத்து சுயநலமின்றிப் பாடுபட்டால் மக்கள் பல நலங்கள் பெற்று இன்புறுவர்.

உரிய சமயத்தில் பெய்கிற மழை பாட்டம் என வந்தது; மனிதன் பலவிதமாய் உழைத்துப் பொருள் ஈட்டுகிறான். உடல் வாழ்வை மட்டுங் கருதாது உயிர் வாழ்வைக் கருதி நல்ல பல நலங்களைச் செய்து வருபவர் மெய்யறிவாளராய் உய்தி பெறுகின்றார்.

ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
சே’ர்’தற்குச் செய்க பெருநூலை - யாதும்
அருள்புரிந்து சொல்லுக சொல்லையிம் மூன்றும்
இருளுலகம் சேராத ஆறு. 90 திரிகடுகம்

துன்பம் யாதும் தோயாமல் இன்ப உலகம் சேர்ந்து இனிது வாழ உரிய வழியை மேலேயுள்ள பாடல் விளக்குகிறது;

அறநெறியும், அருள் ஒளியும் மருவி வருபவர் இருளுலகம் ஒருவி இன்பம் பெறுகின்றார்.

நல்வழியில் ஈட்டிய பொருளை தகுந்த வழியில் அனுபவித்து பிறர்க்கும் அளித்து உதவி செய்வதே வாழும் வாழ்க்கை அழகாகும்;

உயிர்கள் உவந்து வர அருளோடு உணர்ந்து உதவி புரிந்து வருபவர் உயர்ந்து மேலான நிலை அடைகின்றார்.

இனிமையான இசையைக் கேட்பது இன்பம் தருகிறது. அது போல, பருவத்தில் பெய்யும் மழை விளையும் பயிர்கள் வளர பெரிதும் உதவுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-18, 7:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64
மேலே