பொழுதுகள் விற்கப்படுவதில்லை

இளைஞனே
விழித்துக்கொள்
காற்றுள்ளப்போதே
தூற்றாமல்
நேற்றையப்பொழுதை
வீனாக தொலைத்து
இன்று வருந்தி என்ன பயன்

இளமையில் கல்
என்பதனை மறந்து
இளமையில் கள்
என்று பாழாகிவிட்டு
முதுமை சுகப்படலே
என அங்கலாய்ப்பதில்
என்ன பயன்

பொழுதுகள்
விற்கப்படுவதில்லை
வாங்கப்படுவதுமில்லை
கொடுக்கப்பட்ட பொழுதுகள்
உனக்கும் எனக்கும்
பொதுவானதே
என் பொழுது விடிந்தப்பின்
நான் சிலையானேன்
நீயோ கல்லாகவே இருக்கிறாய்

மாற்றங்களும்
ஏற்றங்களும்
உருவாவதில்லை
உருவாக்கிக்கொள்வது
மாறினால் தான்
வாழ்க்கை தரம்
ஏறும் என்பதை மறந்தும்
இருந்திடாதே
வாழ்க்கை சூன்யமாகிவிடும்

நாட்டு நடப்பை
கவனித்திருக்கிறாயா
ஒன்றும் தெரியாதவன்
வெறும் வாய் வேட்டுக்களிலே
கோட்டையை பிடிக்கிறான்
அனைத்தும் அறிந்தவன்
அவனுக்கு சாமரம் வீசுகிறான்

பார்வைக்கு
கடிவாளம் போடு மேயவிடாதே
செவிகளை
வடிகட்டியால் மூடு
நல்லதை மட்டும் உள்ளனுப்பு
உணர்ச்சிகளை
கட்டுக்குள் அடக்கு
வாயைமட்டும் பூட்டாமல்
உலகத்தை விலைப்பேசவிடு
நாளைய உலகம் உன்கையில்..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (16-Feb-18, 4:20 am)
பார்வை : 566

மேலே