கதவம் துளைதொட்டார்க்கு என்னைகொல் கைம்மாறு இனி – முத்தொள்ளாயிரம் 53

வல்லின மெய் 'ப்' 'க்' எதுகையமைந்த நேரிசை வெண்பா

காப்படங்கென் றன்னை கடிமனை இல்செறிந்து
யாப்படங்க ஓடி அடைத்தபின் – மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க்கு
என்னைகொல் கைம்மா றினி. 53 முத்தொள்ளாயிரம்

தெளிவுரை:

‘பாதுகாப்புக்குள் அடங்கி இரு’ என்று என் தாய் காவல் பொருந்திய வீட்டினுள் சேர்த்து, கதவு பொருந்தும்படி ஓடி வந்து அடைத்தபின், விரைவாக ஓடும் குதிரையை உடைய கடுங்கோன் என்னும் பாண்டிய மன்னனின் நல்லழகைக் காணுமாறு கதவில் சாவி நுழைக்கும் துளை தோண்டியவர்களுக்கு இனி என்ன கைம்மாறு செய்வேன்? என்று பருவப்பெண் மகிழ்கிறாள்.

அரசர்கள் தெருவில் சென்றால் பருவம் எய்திய அழகிய பெண்களை அரசர் காணாதவாறு வீட்டிற்குள் அடைத்து, பருவப் பெண்களும் ஊர்வலத்தைக் காணாதவாறு பாதுகாத்தல் மரபு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-18, 5:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே