கோமானைக் கூடஎன வேட்டாங்குச் சென்றஎன் நெஞ்சறியாள் – முத்தொள்ளாயிரம் 55

நேரிசை வெண்பா

கோட்டெங்கு சூழ்கூடல் கோமானைக் கூடஎன
வேட்டாங்குச் சென்றஎன் நெஞ்சறியாள் - கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள். 55 முத்தொள்ளாயிரம்

தெளிவுரை:

தேங்காய்களைக் கொண்டுள்ள தென்னை மரங்கள் சூழ்ந்துள்ள கூடல் மாநகர வேந்தனாகிய பாண்டியனைக் கூடுதற்கு விரும்பி அங்குச் சென்ற என் நெஞ்சத்தை என் அன்னை அறியமாட்டாள்;

காடையைக் கூட்டிலிருந்து பறக்கும்படி (அறியாமல்) விட்ட வேடன் வெறுமையான கூட்டைக் காவல் செய்வது போல், (காடை போன்ற) என் நெஞ்சம் பாண்டியனிடம் பறந்து சென்று விட்ட பின்பும் என் வெறும் உடல் கூட்டினைக் காவல் கொண்டுள்ளாள்.

கோள் – கொள்ளல், தேங்காய்களைக் கொண்டிருத்தல்,

கூடல் – மதுரை மாநகரம், வேட்டு – விரும்பி,

கூட்டே – கூட்டினின்றும், குறும்பூழ் – காடை, வெறுங்கூடு – வெற்றுடம்பாகிய கூடு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-18, 6:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 99

சிறந்த கட்டுரைகள்

மேலே