வீடுகள் பேசிடும் மௌன மொழிகள்

வீடுகள் இடிந்து விழும் ஓசைகள் கேட்டுள்ளீர்களா? வாடகை வீடுகளில் வசிப்போர், ஒவ்வொரு வீட்டை விட்டு பிரியும்பொழுதும், வீடுகள் கதறி அழுவதை கேட்டுள்ளீர்களா?


வீடுகள் மனித வாழ்வின் பெரும் அங்கமாக இருக்கின்றன. வீடுகளுக்கு உணர்ச்சிகள் உண்டு என்பது மிகைச்சொல் அன்று. நமது எண்ண ஓட்டங்களை அவை எளிதாக புரிந்து கொள்கின்றன. மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்திருக்கையில் நம்மோடு சேர்ந்து நடனங்கள் ஆடிடும் சுவர்களின் முகங்களின் வழிந்தோடும் பொலிவு பெரும் அழகு. மறுபுறம், கடின காலங்களில் நம் கண்ணீரைத் துடைத்திட கரங்கள் இல்லாத காரணத்தினால், நம் அருகில் அமர்ந்து செய்வதறியாமல் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. எதுவாயினும், நம் அந்தரங்கங்களை வெளி உலகின் (பேரார்வம் கொண்ட) கண்களிடமிருந்து காக்கும் கடமையில் இருந்து வீடுகள் பெரும்பாலும் தவறுவதேயில்லை.


மனிதர்களை போலவே, வீடுகளுக்கும் மூப்புநிலை உண்டு. வீட்டில் வாழும் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகள் அவரகளது இனத்தில் நண்பர்கள் சேர்த்துக்கொள்வதுண்டு. ஆனால், வீடுகள் எப்பொழுதும் தனியாகவே வாழ்கின்றன. அவை முழுக்க முழுக்க மனிதர்களோடு மட்டுமே நட்பு பாராட்டுகின்றன. பெரும் நகரங்களில் அடுக்கு மாடி கட்டிடங்களிலும் கூட, ஒவ்வொரு வீடுகளும் தனித்தே இருக்கின்றன. மூப்பு நிலை அடைந்த வீடுகள் வயது முதிர்ந்து தனிமையில் உழலும் முதியோர்களை மனதில் நிறுத்திச் செல்கின்றன. சொல்ல முடிய சோகம் ஒன்று அந்த சுவர்களுக்கு பின்னால் ஒளிந்திருப்பது போல் தோன்றுகின்றது. தன் வாழ் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பது அந்த வீடுகளுக்கு தெரியுமா?


வீடு என்பது அப்பாவின் உழைப்பின் அடையாளமாக போற்றப்படுகின்றது. வீட்டின் அளவு, தன்மை இவை பொறுத்து குடும்பத் தலைவரின் நிர்வாகத் திறன் மதிப்பீடு பெறுகின்றது.


சிறு வயதில், அரசாங்கத்தால் கட்டி கொடுக்கப்பட்ட ஓடுகள் வேய்ந்த வீடு ஒன்று எங்களுக்கு இருந்தது. மழை வரும் நாட்களில், அந்த வீடு அங்கங்கே ஒழுகும். அத்தகைய சமயங்களில், அப்பா பழைய நாட்காட்டி அட்டைகளை எடுத்து ஓடுகளுக்கு நடுவே சொருகி, மழை நீர் வீடுகளுக்குள் வராமல் தடுக்க முயற்சிப்பார். அப்பா வீட்டில் இல்லாத சமயங்களில், அம்மா சின்ன சின்ன அலுமினிய பாத்திரங்களையும், தட்டுகளையும் மழை ஒழுகும் கோட்டிற்கு நேர் கீழே வைத்து மழை நீர் வீடெங்கும் ஓடிவிடாமல் தடுப்பார். நான் அந்த பாத்திரங்கள் அருகே அமர்ந்து, மழை நீர் சொட்டுகள் பாத்திரத்தில் மோதி ஏற்படுத்தும் ஒலியை கேட்டு ரசித்துக் கொண்டிருப்ப்பேன். அதில் ஏனோ ஓர் அலாதி பிரியம்; ஏனென்று இது நாள் வரை தெரியவில்லை. அப்பாவும், அம்மாவும் ஒரே நேரத்தில் வெளியே போயிருந்த சமயங்களில் வரும் மழை, அந்த வயதில் ஒரு வகையான பயத்தையும் சேர்த்து கொடுத்துச் சென்றது. வீடெங்கும் வழிந்தோடும் மழை நீரை என்ன செய்வதென்று தெரியாமல் நானும், அக்காவும் ஒரு வித நடுக்கத்துடன் அமர்ந்திருப்போம்.


இப்போது பெரிய வீடு கட்டிய பின்னர், மழை நீர் சாளரத்தின் வெளியில் மட்டுமே வேடிக்கை காட்டிச் செல்கிறது. யாரேனும் சன்னலை மூடிட சொன்னால், நான் என் காதுகளில் எதுவுமே விழாதது போல அமர்ந்திருக்கின்றேன்.


எனது தெருவின் நடுவே, மூப்பு நிலை அடைந்த வீடொன்று இருந்தது. எழுபதை கடந்த தாத்தா ஒருவர் அங்கே வசித்து வந்தார். குழந்தைகள் இல்லை. அவரது மனைவி சில வருடங்களுக்கு முன்னதாக இறந்து போனதாக சொன்னார்கள். ஒரு நாள் மழையில் அந்த வீட்டின் கிழக்கு புற சுவர் இடிந்து விழுந்தது. பக்கத்துக்கு வீடுகளில் இருந்து நான்கைந்து பேர் ஓடி சென்று, இடிபாடுகளை இடையில் இருந்த பெரியவரை வெளியில் இழுத்து வந்தார்கள். பெரிதாய் காயங்கள் ஏதுமில்லை.

வெளியில் வந்த பின்னரும், அவர் அந்த சுவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலின் அர்த்தங்கள் எனக்கு விளங்கவில்லை. அவர் எதுவும் வாய் திறந்து பேசவில்லை. ஆனால் அங்கே, அவருக்கும், இடிந்து விழுந்த சுவர்களுக்குமிடையே ஏதோ ஒரு வகையான எண்ண பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை என்னால் உணர முடிந்தது.


இதையெல்லேம் தூரத்தில் இருந்து பார்த்தபடி, என் வீட்டின் முன்னர், ஒரே குடையின் கீழ், அப்பாவுடன் நான் நின்றிருந்தேன். அப்பாவின் முகம் பார்த்தேன். வயது முதிர்ந்து இடிந்து விழும் வீடுகளை காப்பாற்றிட, சில அப்பாக்களால் கூட முடிவதில்லை.

எழுதியவர் : (18-Feb-18, 2:26 am)
சேர்த்தது : தமிழ் பித்தன்
பார்வை : 131

மேலே