சேர்த்து வைத்த கனவு
வறுமையால வாடிய சின்ன வயசுல
ஆயிரம் கோடி கனவுதான் மனசுல
பள்ளிக்கூடம் அனுப்ப யாருக்கும் முடியல
என்னாசை பூர்த்தியாக்க யாருக்கும் தெரியல
மாடுகள் ஆடுகள் மேய்த்திடும் நேரமும்
படிப்பினை பற்றியே சிந்தனை வந்திடும்
பைகளைச் சுமந்து செல்லுவோர் கண்டிட
எனக்கேனோ வாய்ப்பில்லை எனமனம் வெம்பிடும்
நாட்களும் நகர்ந்தது காலமும் போனது
வயதான காலத்தில் வேலையும் கிடைத்தது
வைத்திருந்த கனவெல்லாம் வாடித்தான் போனது
நினைத்திருந்த ஒன்றுமட்டும் தானாக நடந்தது
இப்போது பள்ளிக்கு தினம்தினம் போகிறேன்
புத்தகம் சுமக்காமல் ஒருபாடம் படிக்காமல்
ஏதோ ஒருவழியில் என்கனவு நிறைவேற
நானும் ஆகிவிட்டேன் பள்ளியின் காவல்காரன்