கற்கை நன்றே கற்கை நன்றே

நக்கீரன்
தமிழர்கள் அன்றும் சரி இன்றும் சரி முன்னுரிமை கொடுத்து வந்துள்ளார்கள். கல்வி கற்பதை வலியுறுத்தும் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் நிறைய உண்டு.
கல்வியின் மாட்சியுணர்ந்த பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் உள்ளது. அந்தப் பாடல் இது:
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே (புறம் 183)
நெடுஞ்செழியன் என்ற பெயரோடு பல மன்னர்கள் இருந்ததால் இவனை அடையாளம் காட்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனப் புலவர்கள் அழைத்தனர். நாடு எத்தனை வளமுடையதாக இருந்தாலும் கல்வி வளம் இல்லாதாயின் அநத நாடு நலிவுறும் என்று இந்த மன்னன் உணர்ந்திருந்தான் என்பது தெரிகிறது.

கல்வி வளங்கும் ஆசிரியனுக்கு ஒரு ஊறுபாடு உற்றவிடத்து அதனைத் தீர்த்தற்கு உவந்து உதவ வேணடும். வேண்டுமளவிற்கு மிகவே ஆசிரியனுக்குப் பொருள் வழங்குதல் வேண்டும். மிக்க பொருள் கொடுத்த வழியும் ஆசிரியனை வழிபடுதற்கு, வெறுப்படைதல் ஆகாது. இவ்வாறெல்லாம் செய்து கல்வி கற்பது நன்று எனத் தொடங்கி, இப்பாட்டின் கண், கல்வியில்லாற்குத் தான் பிறந்த குடும்பத்திலே தன்னைப் பெற்ற தாயாலும் சிறப்பளிக்கப்பட மாட்டாது என்றும் அவன் நாட்டு அரசு முறையும் கல்வி அறிவுடையோனையே துணையாகக் கொள்ளுமே தவிரக் கல்லாதானை ஏற்காதென்றும், கற்றோன், கீழ் நிலையிற் பிறந்தானாயினும் அவற்குத் தலைமையுண்டாகும். மேல் நிலையிற் பிறந்தோனும் அக் கீழ்ப்பிறந்தான் தலைமையிற்றான், அக் கல்வி குறித்து வழிபட்டொழுக வேண்டுமென்றும் இவ்வாற்றால் குடும்பமும் சமுதாயமும் அரசியலும் யாவையும் கல்வி நலத்தால் சிறப்படைதலால் கற்றல் நன்று என்று ஆணையிடுகிறான்.
“வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” என்று சொன்னதன் மூலம் கடைக் கழகத்தின் இறுதிக காலத்தில் பிராமண, சத்திரிய, வைசிக, சூத்திரர் என்ற மனுசாத்திர நால்வருண வேறுபாடு தமிழகத்தில்; புகுந்து விட்டதைக் காட்டுகிறது. மனுசாத்திரம் ஓதல், ஓதுவித்தல் பிராமணர்களுக்குரிய தொழிலாக வரையறை செய்து ஏனையோர்க்கு ஓதல், ஓதுவித்தலை மறுத்துவிடுகிறது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலை அதிவீரராம பாண்டியர் தாம் பாடிய வெற்றி வேற்கை என்ற நூலில் அப்படியே எடுத்தாண்டுள்ளார். இவர் பாண்டிய நாட்டு கொற்கையை 450 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட சிற்றரசனன் ஆவார். வரதுங்கபாண்டியர்க்கு இளவல். நைடதம், கூர்ம புராணம், இலிங்க புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி முதலிய பிற நூற்களையும் இயற்றியுள்ளார்.

“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
கல்லா ஒருவன் குணநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதரா கும்மே.
நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயின் கீழிருப் பவனே
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்
அற்வுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

பிச்சை புகினும் கற்கை நன்றே என்றால் பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே இப்படிச் சொல்லியுள்ளார். கல்வியை நல்லாசிரியரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே இதன் உண்மையான பொருள்.

ஆண்பெண் இருபாலரும் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை நாலடி நானூறு விளக்குகிறது.

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்ச ளழகும் அழகல்ல – நெஞ்சகத்து
நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு.

பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இதன் பெயரினால் குறிக்கப்படுவதுபோல இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ் நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவது மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றது.

சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது, கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று, சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் பாடல் இது.

சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

இனியவை நாற்பது போல இன்னா நாற்பது பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இதனை இயற்றியவர் கபில தேவர். ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு ஒவ்வொன்றையும் ‘இன்னா’ என எடுத்துக் கூறுதலின் ‘இன்னா நாற்பது” எனப் பெயர் பெற்றது.

குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா
நலத்தகையார் நாணாமை இன்னா ஆங்கு இன்னா,
கலத்தல் குலம் இல் வழி.

நீதிநெறி விளக்கம் என்ற நூலை இயற்றியவர் குமரகுருபரர். இதில் கல்வியின் பயனை ஒரு பாடலில் கூறியிருக்கிறார்.

அறம்பொருள் இன்பம் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும் – உறுங்கலொன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை.

கற்றலின் மூலம் அறிவின் திறமுயர்ந்து அதனால் விளையும் பயன்பாட்டுநிலையை குறிப்பதாகவே எண்ண வேண்டியிருக்கிறது. எனவே அறிவின் ஊற்று நூல்களில் இருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்.

கலிவியின் அருமை பெருமை பற்றி ஏனைய புலவர்களைவிட திருவள்ளுவர் மின அழுத்தவமாக அறிவுறுத்தியிருக்கிறார். வள்ளுவர் எந்தக் பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில் படித்தார் என்பது தெரியவில்லை.

கி.பி. 470ஆம் ஆண்டு, தமிழகம் வந்த சீனப் பயணியான யுவான் சுவாங், தன் பயணக் குறிப்பில், சென்னையில் உள்ள திருவொற்றியூர், காஞ்சிபுரம், புதுவைக்கு அருகில் உள்ள பாகூர் ஆகிய மூன்று ஊர்களில் உள்ள வேதப் பாடசாலைகளில் மட்டுமே ஏறத்தாழ 5000 பிராமண மாணவர்கள், சமஸ்கிருதம் படித்துக் கொண்டிருந்த செய்தியை எழுதி வைத்திருக்கிறார்.

பிற்காலப் பாண்டியர், சோழர் ஆட்சியிலும் இந்நிலை தொடர்ந்தது. குறிப்பாக, இராசராசசோழன் காலத்தில், சமஸ்கிருதம் அறிந்தவர்கள் மட்டுமே அரசனின் மதிப்பைப் பெற்றனர். கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரிய உரிமையாக ஆக்கப்பட்டது.

தமிழ் அரசர்கள் யாராவது பள்ளிகள் கட்டினார்கள் என்றோ அங்கே தமிழ்ப் புலவர்கள் தமிழ் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள் என்றோ எந்த வரலாற்றுக் குறிப்பு மருந்துக்கும் இல்லை. பின் எப்படி நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ, வான்புகழ் வள்ளுவர், கல்வியில் பெரிய கம்பன் தோன்றினார்கள் என்பது வியப்பாக இருக்கிறது!

எழுதியவர் : (18-Feb-18, 3:48 pm)
பார்வை : 17999

சிறந்த கட்டுரைகள்

மேலே