இன்னும் அழுதுகொண்டிருக்கிறது என் பேனா

இன்னும் அழுதுகொண்டிருக்கிறது
என் பேனா. ஆம் !
விதி என்ற பெயர்தனிலே
தங்கள் சதிகட்குக் கால் முளைக்கவிட்டு
சாதி என்று பெயருமிட்டு
இணையத் துடித்த இருமனங்களைப்
பிரித்து எரியூட்டி மகிழ்ந்த
அவர்களின் ஈனச் செயலுக்காக
இன்னும் அழுதுகொண்டிருக்கிறது
என் பேனா.

மாற்றான் தெரு நாயொன்று
மார்கழியில் இங்கு வந்ததென்று
கட்டிவைத்துக் கொல்லும்
கண்மூடிகளுக்கு எப்படித் தெரியும்
காதலின் அருமை

திருமணப் பத்திரிகை அச்சிட
வேண்டிய பெற்றோரே
அவளை ஏனோ
தினசரிப் பத்திரிகையின்
செய்தியாக்கிவிட்டார்கள்

இறந்துபோன இந்தக் காதலர்கள்
இன்றும் என் கிராமப் பிஞ்சுகளுக்கு
எச்சரிக்கை மணி
அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்

அந்தக் காதல் புறாவின்
சிறகொடித்து அவளை
சிறைப்படுத்தியதால் மட்டும்
சிதைந்து போய்விடவில்லை அவள்

அவசர அவசரமாய்
அம்மான் ஒருவனுக்கு
நிச்சயிக்கப்பட்டதால்தான்
மரணம் அவளுக்கு
நிர்பந்திக்கப்பட்டது

மனதிலே அவனிருக்க
மாமன் தரும் பட்டாடை
மயிலுக்கு விருப்பமில்லை
அதனால்தான் அவன்தந்த
அரக்கு நிற தாவணியில்
விதி முடித்துக்கொண்டாள்

ஆண்பறவை இறந்து போனால்
இரைகூட உண்ணாமல்
இறந்திடுமாம் அன்றில் பறவை
இங்கு நடந்தது வேறு
இந்தப் பெண்பறவை இறந்ததால்தான்
அவன் இறந்துவிட்டான்
உணவாக நஞ்சருந்தி

கோழையின் செயலென சிலர்
பேசிக்கொண்டார்கள்
முட்டாளின் முடிவென சிலர்
முடித்துக்கொண்டார்கள்
இனிவரும் காதலர்களுக்கு
எச்சரிக்கை என சிலர்
மார்தட்டிக்கொண்டார்கள்

இன்னும் அழுதுகொண்டிருக்கிறது
என் பேனா... .... ஆம் !
இன்றும் அழுதுகொண்டிருக்கிறது
என் பேனா...

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (18-Feb-18, 10:57 pm)
பார்வை : 83

மேலே