வினோத கானம்

வினோத கானம்

இந்தக் குயில்
விடியலில் கூவவில்லை
விடியலுக்காகக் கேவுகிறது
விடியாத இரவை
விரட்டிட முடியாமல்
வெள்ளைப்புறா பாடும்
வினோத கானம் இது

மணிப்புறாவின் சாதி என்றால்
மணாளன் மாண்டவுடன் மாண்டிருப்பேன்
நான் மனிதப்பிறவி ஆகிவிட்டேன்

மனைவி மட்டும் இறந்துவிட்டால்
மறுமாதம் மணநாள்தான் ஆடவர்க்கு
மணாளன் இறந்துவிட்டால்
திருநாளும் வெறும்நாள்தான் மங்கையர்க்கு

மணமாகி மறுமாதம் மண்டான் கணவன்
நான் பள்ளிக்குச் செல்லாமல்
பட்டம் பெற்றேன் விதவை என்று

வாசமுடன் பூத்த மலரை
வாசலிலே வீசிவிட்டார்கள்
இன்றளவும் வாடுகிறேன்
இனிமையைத் தேடுகிறேன்

என் வயதுப் பெண்களெல்லாம்
இனிமையில் திளைத்திருக்க
நான் மட்டும் ஏனோ
தனிமையில் விழித்திருக்க

தங்கை தன் கணவனுடன்
தணிவாய்ப் பேசும் சத்தத்திலும்
தவறுதலாய் என் கண்ணில்படும்
இளசுகளின் பகல் முத்தத்திலும்

என் மனம் படும் பாட்டை
எவ்வாறு வெளியில் சொல்ல?
இரவினில் என்னைத் தனிமை கொல்ல
எப்படி நான் இரவை வெல்ல?

வீட்டிற்கு வெளியில் சென்றால்
விலை கேட்கும் இளவட்டம்
இதை வெளியில் சொன்னால்
தே(ள்) மொழியில் சில பட்டம்

பருவகாலத்தில் சருகாய்ப் போன
என் வாழ்வின் ரணங்களை
கண்ணீர் உறிஞ்சிய தலையணைதான் அறியும்
என் போன்ற விதவைகள் வாழ்வு
என்று தான் விடியும்?

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (18-Feb-18, 11:13 pm)
Tanglish : vinotha kaanam
பார்வை : 118

மேலே