வெங் கனல் கதுவியது ஒப்பன

பிரிட்டன் வந்த புதிதில் யுனியன் ஜாக் கொடியைப் பார்க்கும் போதெல்லாம் வில்லன் கொடி என்றே தோன்றும். இது கீழே இறங்கியபின்தானே இந்திய மூவர்ண கொடி மேலே ஏறி பட்டொளி வீசிப் பறக்கும்…பின், போகப்போக, கொடிகளின் அரசியல் புலம் மறைந்து அதன் நிறங்களை பற்றி எண்ணங்கள் ஓடின…நிறங்களில் முக்கிய நிறங்கள் மூன்று. நீலம், சிவப்பு மற்றும் பச்சை. அதில் இரண்டை கொண்டிருக்கிறது யுனியன் ஜாக்.

என்ன பளீர் வர்ணங்கள் என்று நினைத்துக்கொண்டேன். ப்ரெஞ்ச் கொடியிலும் இதே நிறங்கள். ஒரு மிகப்பெரிய அரங்கிலோ, மாபெரும் அணிவகுப்புகளிலோ (உதா: ஒலிம்பிக்ஸ்) இந்நிறங்கள் கண்களை ஈர்க்கும் திறன் கொண்டவை…

கம்பராமாயணப் பாடல்களை தொடர்ந்து வாசிக்கையில் பாடல்களில் படிந்திருக்கும் வர்ணங்கள் ஈர்க்க ஆரம்பித்தன. அதன்பின் நிறங்களை கவனிப்பது வாடிக்கையாயிற்று.

பாடல்கள் வாசிக்க, வாசிக்க, அச்சித்திரங்கள் உயிர் பெற்று வருவதற்கு அவ்வர்ணங்களும் ஒரு முக்கிய காரணம் என்று உணர ஆரம்பித்தேன்.

வர்ணங்களைப் பற்றி குறிப்பிட இக்கட்டுரையில் நான் தேர்ந்தெடுத்திருக்கும் பாடல்கள் அயோத்திய காண்டத்தில், சித்திரகூடப் படலத்தில் இருப்பவை. இவை மிகச்சிறிய உதாரணங்கள்தான், ஒரு நீண்ட பொன் கடற்கரையை நெருங்கும் போது மாலைக் காற்றில் நம் முகத்தில் ஒட்டும் பொன் துகள்கள் போல.

~oOo~

இராமனும், சீதாதேவியும் மற்றும் லஷ்மணனும் யமுனை நதியைக் கடந்து, ஓர் பாலை நிலத்தையும் கடந்து போகும் போது சித்திர மலையைக் காண்கிறார்கள். மலை எப்படித் தோன்றுகிறது, அவர்களுக்கு?

இளம் சந்திரனை தன் நீர் கர்ப்ப வயிற்றில் ஒளித்து வைத்திருக்கும் பிளிறுகின்ற மேகத்தை பெண் யானை என்று நினைத்து, ஓர் ஆண் யானை தன் பனை மரம் போன்ற நீண்ட கையை நீட்டுவது போல் போல் தோற்றமளிக்கிறதாம் சித்திர கூட மலை.

வெளிறு நீங்கிய பாலையை
மெல்லெனப் போனார்
குளிரும் வான் மதிக் குழவி தன்
சூல் வயிற்று ஒளிப்ப
பிளிறு மேகத்தைப் பிடி எனப்
பெரும் பளைத் தடக் கை
களிறு நீட்டும் அச் சித்திர
கூடத்தைக் கண்டார்

இப்படி ஆரம்பிக்கிறது சித்திரக்கூடக் காட்சிகள்.

ராமன், சீதைக்கு சித்திர கூட மலையின் அழகை காண்பித்து தருகிறான். அவற்றில் ஒன்றை நான் கீழே குறிப்பிட்டிருக்கிறேன். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வர்ண கலவைகளை பின் வரும் பாடலில் கவனியுங்கள்.

சீலம் இன்னது என்று அருந்ததிக்கு
அருளிய திருவே
நீல வண்டினம் படிந்து எழ,
வளைந்து உடன் நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள்.
பொன் மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன
நிகர்ப்பன – காணாய்

அழகிய வேங்கை மரத்தின் பூங்கிளைகளின் மேல் – பொன் நிற மலர்களைக்கொண்டவை – நீல நிறமான வண்டுக்கூட்டங்கள் உட்கார்ந்து எழுவதால் அக்கிளைகள் கீழே வளைந்து பின் நிமிர்கின்றன. அதனால் பொன்நிற மலர்கள் உதிர்ந்து சீதா பிராட்டியின் திருவடிகளை அடைவது, தொழுவதைப் போல் இருப்பதைக் காணாய்!

பொன் நிற மலர்கள் கொண்ட மரக்கிளைகளில் நீல வண்டுகளின் கூட்டம்…மரக்கிளைகள் வளைந்து நிமிர்கின்றன….மலர்கள் உதிர்வது பொன் துகள்கள் உதிர்வது போல்…

என்ன வர்ணக்கலவை!

~oOo~

அடுத்தப் பாடலுக்குச் செல்வோம்.

தினையை கவர வருகின்ற குருவிக்கூட்டங்களை விரட்ட குறவ மகளிர், குருவிந்தக் கற்களை வீசுகின்றனர்.

அந்தக் கற்கள் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் போன்று மின்னி வீழ்வன காணாய் என்று ராமன் சீதைக்கு காண்பித்துக்கொடுக்கிறான்.

குருவிந்தக் கற்கள் எனில் செந்நிறமுடைய குருவிந்த மணிக்கற்கள். நீல ஆகாயத்தில் எரிகற்கள் போன்று பறந்து வீழ்கின்றன; அல்லது கரு மேகங்கள் சூழ்ந்திருக்கும் ஆகாயமெனில் இன்னும் சிறப்பு.

வில் கொள் வாள் நுதல், விளங்கு இழை,
இளந் தளிர்க் கொழுந்தே
எல் கொள் மால் வரை உம்பரின்,
இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து
எறி குருவிந்தக்
கற்கள், வானிடை மீன் என
வீழ்வன காணாய்

குரீஇ இனத்து எறி – (தினையைக் கவரவருகின்ற) குருவிக் கூட்டத்தின்மேல் வீசி எறிகின்ற;

குருவிந்தக் கற்கள் –(செந்நிறம் உடைய) குருவிந்த மணிக் கற்கள்;

ஆங்காங்கே செந்நிறப்புள்ளிகளாய் மின்னி மறையும் பூச்சிகள் கொண்ட நீல அல்லது கருநீல ஆகாயம்!

இந்தப் பாடலின் வர்ணச்சித்திரம் வாசகரை புன்னகை பூக்கவைக்குமெனில் அடுத்தப் பாடல், நிச்சயம் மேலும் என்று உற்சாகமாக சொல்வேன்.

மஞ்சு அளாவிய மாணிக்கப்
பாறையில் மறைவ,
செஞ்செவே நெடு மரகதப்
பாறையில் தெரிவ.
விஞ்சை நாடியர் கொழுநரோடு
ஊடிய விமலப்
பஞ்றசு அளாவிய சீறடிச்
சுவடுகள் – பாராய்

செம்பஞ்சுக்குழம்பு தீட்டப்பெற்ற (கடும் சிவப்பு மருதாணி என நான் எடுத்துக்கொண்டேன்) கோபத்தில் நடக்கும் மலை/குற மகளிரின் பாத சுவடுகள், மேகங்கள் விளவும் மலையின் மாணிக்கப்பாறைகளில் தெரிவதில்லை; கடும் பச்சை நிறம் கொண்ட மரகதப் பாறைகளில் பளீரென தெரிகின்றன…

காரணம் மிக எளியதுதான். செம்மை நிறம் கொண்ட பாத சுவடுகள் செம்மாணிக்க நிறமுடைய பாறைகளில் தெரியாது. அதே சமயம், பச்சை நிறமுள்ள பாறைகளில் நன்கு தெரிகின்றன. பச்சை பாறைகளில் சிவப்பு பாதச் சுவடுகள்! கவரும் அடர் வர்ணக்கலவைகள்…இடை இடையே இருக்கும் மாணிக்கப் பாறைகளில் மறைந்தும் பின் வரும் பச்சைப் பாறைகளில் தொடர்ந்தும்!

விமலப் பஞ்சு அளாவிய சீறடிச் சுவடுகள் – (கோபத்தில்நடந்த) அவர்களது குற்றமற்ற செம்பஞ்சுக் குழம்பு தீட்டப் பெற்ற சிறிய பாதங்களின் சுவடுகள்;

மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவ – மேகங்கள் நெருங்கியுள்ள மலைமேல் உள்ளமாணிக்கப் பாறைகளில் மறைகின்றன;

செஞ்செவே நெடு மரகதப் பாறையில் தெரிவ – செம்மையாக நீண்ட பச்சை நிறமுள்ள மரகதப் பாறைகளில் நன்கு தோன்றுகின்றன.

~oOo~

ஒரு விஷயம் குறிப்பிடவேண்டும்.

தமிழ் சூழலில் சில சொற்களை அபரிதமாக உபயோகித்து, அவற்றை தேய்ச் சொற்களாக மாற்றிவிட்டோம். பொன், முத்து, மாணிக்கம் இல்லாத வர்ணணைகள் குறைவு என்று சொன்னால் கிட்டதட்ட அது மிகை வாக்கியம் கிடையாது!

(இதை எழுதும் போதே “பொன்னெழில் பூத்தது புது வானில்” என்று எங்கோ தொலைக்காட்சி ஒலி கேட்கிறது!)

ஆனால் தவறு அச்சொற்கள் மீதில்லை அல்லவா! எத்தனை தடவை “தேய்த்தாலும்” நம் இலக்கியங்களில் உபயோகித்த விதத்தில் அவை பளீரிட்டு மின்னிக்கொண்டிருக்கின்றன.

அடுத்தப் பாடலோ, படிக்கும் போதே கண்கள் கூசுகின்றன! அத்தனை பிரகாசம்!

தினம் தினம் பூத்தாலும் புத்தம் புதியதாகவே பூக்கும் காலை போல் ஒவ்வொரு பாடலிலும் சீதாவை விளித்தாலும் ஒவ்வொன்றும் புத்தம் புது காலை!

இந்தப் பாடலில் சீதை பின்வருமாறு விளிக்கப்படுகிறார்.

நுண் துளைகள் கொண்ட புல்லாங்குழல் இனிய ஓசையை விடவும் கைவிரல்களால் வருடி எழுப்படுகின்ற குளிர் இனிய யாழ் ஓசையை விடவும் இனிய சொற்களைப் பேசுகின்ற கிளியே!

குழவு நுண் தொளை வேயினும்,
குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும்
இனிய சொல் கிளியே
முழுவதும் மலர் விரிந்த தாள்
முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெங் கனல் கதுவியது
ஒப்பன பாராய்

முற்றிலும் விரிந்த மலர்கள் கொண்ட, நெருக்கமாக நெருக்கமாக இருக்கும் முருக்க மரங்கள் கொண்ட காடு, தகிக்கும் நெருப்பு பிடித்தது போல் இருப்பதைக் காண்…

முருக்க மலர் செஞ்சிவப்பு அல்லது கடுமையான மஞ்சள் நிறம் கொண்டவை – இரண்டில் எதை வைத்துக்கொண்டாலும் சரி.

இப்படிப்பட்ட மலர்கள் கொண்ட மரங்கள் நெருக்கமாக கொண்ட வனமே தீப்பிடித்து எரிவது போன்ற தோற்றம் மனதில் விரிவது எளிதில் நடக்கிறது, கண்கள் கூசுகின்றன!

பல வருடங்களுக்கு முன் The Abyss என்ற ஹாலிவுட் திரைப்படத்தைப் பார்த்து அரங்கத்தை விட்டு வெளியே வந்த பின்னும் ஆழ்கடலின் கருநீலம் எங்கும் தெரிந்துகொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது. இன்றைய தொழில் நுட்பமோ எங்கோ போய்விட்டது. பிரமாண்ட திரையில் எத்தனையோ சாத்தியங்களைக் காட்ட முடிகிறது. அவைகளிலும் வர்ணங்களின் கலவை பிரம்மிக்க வைக்கிறது.

பிரபல ஹாலிவுட் திரைப்படங்கள் Finding Nemo, Kung Fu Panda போன்ற திரைப்படங்களானாலும் சரி, இது போன்ற துண்டு வீடியோ படங்களானாலும் சரி, வர்ணக்கலவைகள் அற்புதமாக இருக்கின்றன.

பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடல்களிலேயே இப்படி வர்ணக்கலவையைக் காட்ட முடிகிறது என்றால் மனிதனின் கற்பனாசக்தியை வியந்தோதுவதை தவிர வழியில்லை!

அதாவது நம்மை நாமே!

முகப்பில் குறிப்பிட்டது போல் இப்பாடல்கள் கம்பராமாயண நதிப் பயணத்தில் முகத்தில் தெறிக்கும் சிறுதுளிகள் மட்டுமே.

சிவா கிருஷ்ணமூர்த்தி

Meenakshi Balganesh said:
மிக அழகான சொல்லோவியம். கம்பனை எல்லோரும் தான் படித்திருக்கிறோம். ஆனாலும் கி. வா. ஜ. அவர்கள் எடுத்துக் காட்டியதால் பல பாடல்களை ரசிக்க முடிந்தது (அழியா அழகு எனும் புத்தகம்). இதுவும் அதுபோன்றது தான். மிக அருமை. அடுத்தடுத்த சொல்லோவியங்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

எழுதியவர் : (20-Feb-18, 5:34 pm)
பார்வை : 40

மேலே