என் இதயத்தில் நீ பிறந்த நாள் -4 - எனக்கான என்னவன்

அது கனவுகளை
சுமந்து திரிந்த
காலம் அது

எப்போதும் ஒரு
கனவு இருக்கும்
எல்லாப் பெண்களுக்கும்
எனக்கான என்னவன்
எப்படி இருக்க
வேண்டுமென்று
என்ற எண்ணம்
அது எல்லையில்லாத
சிறகுகளோடு எங்கோ
எப்போதாவதாவது அவள்
இதயத்தில் எதோ
ஒரு வடிவத்தில்
வந்து மணிஅடித்துக்
கொண்டுதானிருக்கும்
கட்டாயமாய் கட்டாயமாய்

உயரமாய் ஒருவனை
ஒளிந்துகொண்டே
மெல்ல நிமிர்ந்து
எட்டிப் பார்க்கும்போது

தாடிக்காரன் ஒருவனின்
அளவான அடர்ந்த
கூந்தல் காட்டைக்
கடந்து செல்லும்போது

கலகலவென சிரித்து
வாய்மூடாமல் எதையாவது
பேசிக் கொண்டே
எல்லோரையும் எப்படியாவது
சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும்
ஒருவனை ஒருமுறை
என்றாலும் ரசித்து
பார்க்கும் போது

அடுத்தவர் மேலே
அதிக அக்கறைகாட்டி
அச்சச்சோ சொல்லி
நின்றுவிடாமல் அப்படியே
கைகொடுத்து உதவும்
நல்லெண்ணம் கொண்ட
ஒருவனைக் கடந்து
செல்லும் போது

அதிகம் அலட்டிக்கொள்ளாமல்
அடக்கமாய் அந்நியோன்யமாய்
எளிமையாய் பழகிடும்
கண்ணியமான ஒரு சக மனிதனைக்
கடந்து செல்லும்போது

இப்படி எப்போதாவது
ஒரு தருணத்தில்
ஒரு நிழற்படம்
ஒரு நகலாய்
கண்முன் வந்துபோகும்
ஏன்

விழிஈர்ப்பு விசையை
விழிகொண்டு அந்த
விவரம் தெரியாத
வயசிலே இதயத்தில்
விதையாய் வீசிச்சென்ற
வினோதமான பார்வைகளை
கடந்து வந்த
விந்தையான பருவம்
தொடங்கி அந்த
ஆசையின் மணி
அவ்வப்போது அடித்து
கேட்கும் தனக்குள்ளாகவே
எனக்கான என்னவன்
எப்படி இருப்பானோ என்று

பெண்கள் அதிகம்
விரும்புவதில்லை
ஒருவேளை அவர்கள்
சொல்லிக்கொள்ளலாம்
அப்படி என்று
ஒருவேளை நீங்கள்
நினைத்துக் கொள்ளலாம்
அப்படித்தான் என்று

பெண்கள் நிஜத்தில்
அதிகம் விரும்புவதில்லை
அவள் விரும்புவது
என்னவோ அவன்
அவனோடு ஒட்டி நிற்கையில்
அவன் அவளுக்கானவன்
என்று நான்குபேர்
சொல்லிவிட வேண்டும்
அவன் அவளின்
அப்பாப் போல
இல்லை இல்லை
அப்பாவாகவே மாறி
அவளை அரவணைத்திட
வேண்டும் என்றுதான்
ஆசைப்படுகிறாள்

என் அப்பாபோல
என்னைப் பார்த்துக்கொள்ளும்
ஒருவன் வேண்டும்
என்றுதான் யாசிக்கிறாள்


அவள் அவனில்
காதலனை மட்டும்
தேடுவதில்லை
அவள் தந்தையைத்
திரும்ப தேடுகிறாள்

அந்த தேடல்
ஒரு பருவம்தொட்டு
அவள் இதயத்தில்
உதயம் கொண்டு
ஓயாத அலையென
வருவதும் போவதுமாய்
இருந்து கொண்டிருந்தாலும்
திருமண பருவத்தில்
அதிகமாக ஒருவித
சுனாமியாகி அவளை
அலைக்கழித்துப் போடுகின்றது

அப்படி ஒருவனுக்காக
என் ஆத்மாவுக்கான
என்னிதய இசைக்கான
என்வாழ்வின் ராகத்துக்கான
தேடலில் அந்த
அலைக்கழிப்பில் நானும்
என்னிதயமும் அப்போது

என் எல்லாமுமாய்
ஆகப்போகிற அவன்
இரவுகளில் நிசப்தத்தில்
விழிமூடுமுன்னும்
இமைத்திறக்கும் முதல்
பார்வையின் விடிகாலையிலும்
என் கண்முன்னே
தப்பாமல் வந்து நிற்க
தொடங்கினான் ...

நிழல் உருவமாய்
அந்த நிழலின்
கனவுகளின் உருவை
கற்பனைதந்த அவனின்
நிஜத்தைத் தேடி
தவிப்போடு கடந்து
கொண்டிருந்தது வரன்
பார்க்க தொடங்கியிருந்த
காலகட்டங்கள்
கட்டெறும்பிடம் கடிபட்ட
கணுக்காலாய் தவி
தவித்த இதயத்தோடும்
வண்ணத்துப்பூச்சியின்
வன்னச் சிறகுகளை
வாங்கிக்கொண்டு
வனத்தில் திரியும்
தேவதையாகவும்
மாறி மாறி வேடம்பூண்ட
(சோ)சுகமான காலமது .....

என் இதயத்தில் நீ பிறந்த நாள் தொடரும்

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (21-Feb-18, 4:19 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 152

மேலே