மரமாபிமானம்-7

மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்தது நாள். சுற்றிலும் இருந்த விவசாய நிலங்களையெல்லாம் சரபேஸ்வரன் ஏற்கனவே வாங்கிவிட்டதால் எந்த ஒரு நிலக்கிழாரும் அந்த விடியற்காலை வேளையில் அவரவர் நிலங்களுக்கு நீர்பாய்ச்சவோ அல்லது பயிர்களை பார்வையிடவோ அங்கு வரவில்லை. மணி சுமார் 7.30 இருக்கும். எலிகள் குதறிய அந்த மனிதனின் உடலிலிருந்து வீரியமாக வீசத்தொடங்கிய பிணவாடையை ஏந்திக்கொண்டு மெல்ல எழுந்து பறக்கத்துவங்கியது ஈக்கள்… ஊருக்குள் சென்று அவனின் இறப்பு செய்தியை அனைவருக்கும் தெரிவிக்க.
அதில் ஒருசில ஈக்கள் மரநேசனின் வீட்டிற்கும் சென்று துக்க செய்தியை ஓதிக்கொண்டிருந்தன. செவியருகே ரீங்காரமிட்டும் நாசித்துவாரங்களில் பிணவாடையை தெளித்தும் நெடு நேரமாக மரநேசனை எழுப்ப முயன்றுகொண்டிருந்தன அந்த ஈக்கள். மெல்ல கண்விழித்த மரநேசன்..படுக்கையில் இருந்து மெல்ல எழுந்து தூக்க கலக்கத்தில் நடந்து சென்று தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்தை அடைந்தான். ஒரு குடுவையில் நீரெடுத்து தன் முகத்தில் அடித்து தூக்கத்தை ஓட்டினான். மெல்ல மெல்ல தூக்கக்கலக்கம் அவனை விட்டு பிரிந்துபோகும் அதே நேரத்தில் ஊர்மக்களின் காலடி சத்தங்கள் அவன் காதில் கேட்கத்தொடங்கியது.

கையில் வைத்திருந்த குடுவையை தொட்டியில் போட்டுவிட்டு மரநேசன் சத்தம் கேட்கும் திசை நோக்கி வேக வேகமாக நடந்துவந்தான். அங்கே ஊர்மக்கள் இறந்துபோன அந்த மனிதனின் சடலத்தை ஒரு கோணிப்பையில் சுற்றி அவன் வீட்டிற்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். எதிர்திசையில் இருந்து வாயிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு இறந்துபோன அந்த மனிதனின் மனைவியும் மகனும் ஓடிவந்துகொண்டிருந்தார்கள்.

குழப்பம், பயம், சோகம் மற்றும் குற்ற உணர்ச்சி ஆகிய அனைத்தும் கலந்த பாவனையுடன் மரநேசன் அந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்தான்.

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (23-Feb-18, 2:19 am)
பார்வை : 50

மேலே