முதல் குடை

முதல் குடை

சோதரர்களின்
தோழமையும்
பாச நெகிழ்வும்
இளமை முதல்
வாழ்நாள் முழுதும்
நூல்மேல்.

சின்னச் சின்ன
மோதல்கள்
நெருடல்கள்
வந்து போகும்
என்றாலும்
விட்டுக்கொடுத்தலை
விட்டுவிடாமல்.

ஒவ்வொரு தம்பிக்கும்
அண்ணணே
முதல் குடை.

ஒவ்வொரு அண்ணனுக்கும்
தம்பியே
முதல் நிழல்.

வயல்வெளிகள்
மலைமுகடுகள்
ஆற்றங்கரைகள்
பேசும்
பேசிக் கழித்த நாட்களை.

காக்கைகள் மட்டும்
பகிர்ந்துண்ணும்
என்பர்
அண்ணன் தம்பிகளோடு
பிறவாதவர்.

ஆயிரம் கோபதாபங்கள்
இருப்பினும்
அண்ணனை எவரேனும்
காயப்படுத்தினால்
தம்பி எரிமலை
ஆவான்.

தம்பி துரும்பு
பட்டாலும்
அண்ணன்
தும்பி
போல் பறந்து
இமை ஆவான்.

தம்பி உடைய
படை
தோற்பதும்
இல்லை.
அண்ணன் கொண்ட
கொடை
வீழ்வதும்
இல்லை.

புதுப்புது
நட்புகள்
உறவுகள்
வந்து கொண்டே இருக்கும்.

அண்ணன் தம்பியின்
அன்பு மட்டும்
மாறாத நிதர்சனம்.

ஒருவர் வயிறு
காயும் போது
மற்றொருவரும்
காயவிடுவர்.

சொத்துகளால்
சொந்தம்
வெந்து வேகும் போது
இவர்களிடையே வரும்
எங்கிருந்தோ வரும்
பனிக்கட்டி
உருகும்
உருக்கும்.

தங்கள் வாரிசுகள்
முட்டிக் கொள்கிறபோது
முட்டிக் கொள்ளும்
கண்ணீர்.

தந்தையின்
மறைவுக்குப் பின்
தம்பிக்கு
அண்ணனே
தந்தை.

ஒரு தாய்
தன் வாழ்நாளில்
மகிழ்வு கொள்ளும்
ஒரே தருணம்
தன் வளர்ப்புகள்
கொட்டிக் கொடுக்காவிட்டாலும்
ஒன்றாய் இருக்கும்
பொழுது மட்டும்.

ஒரு தந்தை
எப்போதும்
பெருமிதம் கொள்வது
தன் தோள்மீது
நடந்த தன் மகன்கள்
அவர்கள்
தோள் மீது
தோள் போட்டு நடக்கும்
பொழுதுகளை மட்டும்.

தாய் - தந்தை
கணவன் - மனைவி
அக்கா- தங்கை
உறவுகளுக்கு
சற்றும் குறைவில்லாதது
அண்ணன் - தம்பி
உறவு.

இவர்களோடு
முடிந்து விடுவில்லை
இந்தப் புரிதல்.
பெரியப்பா
சித்தப்பா என
நெகிழ்ந்து
வணங்குகின்றன
வாரிசுகள்
வாழ்நாள் முழுதும்
மனித
இறைகள் என.

- சாமி எழிலன்

27 02 2018

எழுதியவர் : சாமி எழிலன் (27-Feb-18, 5:56 am)
Tanglish : muthal kudai
பார்வை : 38

மேலே