வரம் தருவாய் எந்தன் ஈசா

கண்ணியம் தவறவிட்ட கலாச்சாரம் தேவையில்லை
எண்ணியல் பார்த்துப் பழகும் உறவுகள் தேவையில்லை

கடமைகள் கைவிட்டு சேர்க்கும் உடமைகள் தேவையில்லை
மடமையை வார்த்திடும் பக்திமார்க்கங்கள் தேவையில்லை

சடங்குகள் பெயரால் நிகழும் சங்கடங்கள் தேவையில்லை
மடங்குகளாய்ப் பெருகும் பேதச்சங்கங்கள் தேவையில்லை

முண்டியடிக்கும் அவசர வாழ்வு தேவையில்லை
அண்டிப்பிழைக்கும் அடிமைத்தனம் தேவையில்லை

பற்றற்ற பாசாங்காய் போலிஆன்மீகம் தேவையில்லை
புற்றீசலாய் கிளம்பும் வெற்றுத் தலைமைகள் தேவையில்லை

ஊருக்கு அப்பாலோர் ஓலையில் வேய்ந்த குடிசை
உறவுகள் கூடிமகிழ முற்றத்தில் சிறிய திண்ணை

ஆவினங்கள் மேய்ந்துத்திரிய அடர்ந்த பசும் புல்வெளி
அந்தில்கள் பாடிக்களிக்க ஊஞ்சலிடும் தென்னங்கீற்று

சாதிமதம் துறந்த அன்பில் கட்டிய ஆலயம்
சாஸ்திரம் சடங்குகள் மறுத்த தமிழிசை தேவகானம்

உண்ணக் காய்கனிகள் உறங்க பசும்புல் தரை
எண்ண விண்மீன்களோடு உரையாடிப்பின்
நித்திரை

வரம்புக்கு மீறிய வரவுகள் கடுகளவும் வேண்டாம்
இருப்பதை பகிர்ந்துவாழும் இன்முகத் துணைமட்டும் போதும்

பொல்லாப்பு பொறாமையற்று போதுமென்ற சிந்தையோடு
வாழ்ந்திட எமக்கு ஆசை வரம் தருவாய் எந்தன் ஈசா...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (28-Feb-18, 9:26 pm)
பார்வை : 67

மேலே