மகள் அந்தாதி

மலரின் மணமாய் மனத்தி லுறைந்தாய்
நிலவி னொளியாய் நிறைந்தாய் - சலன
மகற்றித் தெளிவு மமைதியுந் தந்தாய்
மகளே!நீ வாழ்வின் வரம் . 1.

வரமாய்க் கிடைத்த மழலை விருந்தை
விரும்பிச் சுவைத்து வியந்தேன் ! - கரும்பின்
இனிப்பாய்ப் பரவ இதயம் குளிரக்
கனிந்து வனைந்தேன் கவி . 2.

கவியின் கருவாய்க் கமழ்ந்து கலந்தாய்
தவித்த மனத்தைத் தணித்தாய்! - செவியில்
குயிலாய் ஒலித்தாய்! குரலால் கவர்ந்தாய்!
உயிரே!நீ தானென் உலகு . 3.

உலகி லுனைவிட வொன்றுமுயர் வில்லை
மலைத்தேன்நீ யென்றே மலைத்தேன்! - நிலவும்
குனிந்துனைப் பார்த்துக் கொடுத்தனுப்பும் முத்தம்
பனித்துளி யாகப் பறந்து. 4.

பறக்கு மியல்பைப் படைத்தவன் தந்தால்
சிறகு விரித்தழைத்துச் செல்வேன் !- உறங்கும்
பொழுது மடியிலிட்டுப் பொன்போல்தா லாட்டிப்
பொழிவேன் கவியால் புகழ்ந்து. 5.

புகழில் மயங்கிடாப் புத்தி யுடனே
மகளே! புவியில் வளர்வாய் !- முகத்தில்
அறிவொளி வீச அமைதி தவழ
சிறப்புற வாழ்வாய் தெளிந்து .6.

தெளிந்த மதியொடு தீந்தமிழ் கற்றுக்
களிப்பாய்! அழியாமல் காப்பாய் ! - துளியும்
தயக்க மிலாதுநம் தாய்மொழி பேணி
மயக்கம் தவிர்த்து மதி . 7.

மதிப்பொடு நட்பை வரமாய் நினைப்பாய்
நதிபோல் வளைந்து நகர்வாய் ! - எதிலும்
பொறுமை யுடனே புரியும் செயலால்
சிறுமை யொழித்துச் சிதை. 8.

சிதைய விடலாமா செம்மொழிப் பற்றை
எதையும் துணிவாய் எதிர்கொள் ! - விதைப்பாய்
மனத்தினு ளன்பை! மடமை தகர்க்க
முனைந்துநீ செய்து முடி . 9.

முடியுமென்றே நம்பி முயன்றால் முடியும்
விடியல் பிறக்கும் விரைவில் ! - துடிப்பாய்ச்
செயலாற்றி என்றென்றும் திண்மையுடன் நெஞ்சில்
மயலகற்றிக் கொள்கை மலர்த்து. 10.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Mar-18, 12:47 am)
Tanglish : magal anthathi
பார்வை : 307

மேலே