நிலவு மனிதன் - 2

நிலவு மனிதன்
2
ஒரு புதிய பயணம்
காலை 7.30 மணி. புலித்தோலின் நிறமுடைய ஒரு பட்டாம்பூச்சி ஒன்று அங்கு ஏற, இறங்க பறந்துக்கொண்டிருந்தது. தூரத்தில் இருந்த மரங்கள் காற்றின் தழுவலில் ஏற்பட்ட மகிழ்வில் தனது கிளைகளால் நடனம் ஆடின. “பாஆஆங்” என்ற சத்தத்தோடு ஒரு ரயில் இஞ்சின் சற்றுதொலைவில் ஊர்ந்துக் கொண்டு இருந்தது. பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம். சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து அடுத்து உள்ள சந்திப்பு. இங்கு இருந்துதான் சென்னையின் ரயில் வழி மூன்று வழியாக பிரிகிறது. முதல் வழி ஆவடி, திருவள்ளூர் மார்க்கம் செல்லவும், இரண்டாவது வழி எண்ணூர், சூலூர்பேட்டை மார்க்கம் செல்லவும் மற்றும் மூன்றாவது வழி வண்ணாரப்பேட்டை, வழியாக சென்னை கடற்கரையை அடைகிறது. அப்பொழுது இரண்டாவது பிளாட்பாரத்தில் சென்ட்ரலை நோக்கி செல்லும் ரயில் ஒன்று வந்தடைந்தது.
அதே வேளையில் ஐந்தாவது பிளாட்பாரத்தை நோக்கி சூலூர்பேட்டை ரயில் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. இந்த சென்ட்ரல் ரயிலில் வந்தவர்களில் எண்ணூர் நோக்கி செல்லும் மக்கள் அந்த சூலூர்பேட்டை ரயிலை பிடிக்க வேண்டிய அவசரத்தில், படிக்கட்டுகளில் செல்லாமல் ரயில் தண்டவாளங்களில் அவசர,அவசரமாக குதித்து கடந்து சென்றனர். சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல். ஒரு பெரியவர் தண்டவாளத்தில் இருந்து பிளாட்பாரத்தில் ஏறுவதற்குள் மிகவும் சிரமப்படார். இக்காட்சியை படிக்கட்டின் மேலே நின்றுக்கொண்டு சித்தார்த் பார்த்துக்கொண்டிருந்தான். ‘ஏ இவங்க இப்படி ஓடனும்? இப்படி இவங்களுக்கு வாழ்கையில என்னதான் அவசரம்? இப்படி வேலைக்காக ஓடி,ஒடி அப்படி என்னத்த தான் கண்டானுங்க. இந்த சென்னைல எல்லாரும் இப்படி பரபரப்பாக ஓடிக்கிட்டுதான் இருக்காங்க. இங்க எல்லாருக்கும் ஒரு வேல இருக்குது, என்ன தவிர.’
என மனதில் நினைத்துகொண்டே அவனது சாம்சங் கைப்பேசியை பேண்டில் இருந்து வெளியே எடுத்தான். ‘வண்ண நிலவே, வண்ண நிலவே வருவது நீதானா’ என்று அவனது காதுகளில் ஹேட்போன் மூலமாக பாடிக்கொண்டு இருந்த பாட்டை மாற்றினான். அடுத்த பாட்டு வந்தது. ‘ஆகாய வெண்ணிலாவே, கரைமீது வந்ததேனோ’ மறுபடி மாற்றினான். ‘போட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ மறுபடியும், ‘நிலவு பாட்டு, நிலவு பாட்டு’ என்ற பாடல் ஒலித்தது. வெறுப்புடன் ஹெட் போனை பிடுங்கி பையில் போட்டு விட்டு சற்று இறுக்கத்துடன் முதலாவது நடைமேடையை நோக்கி நடந்தான். அவன் வருவதற்கும் , அந்த பிளாட்பாரத்தில் ரயில் வருவதற்கும் சரியாக இருந்தது. எந்த ரயில் என்றெல்லாம் பார்க்கவில்லை. இந்த திருவள்ளூர் தண்டவாள வழியில் செல்லும் எல்லா வண்டியும் வில்லிவாக்கம் தாண்டித்தான் செல்லவேண்டுமென்பது அவனுக்கு தெரியும்.
‘இனிமே தமிழ் சினிமால யாராச்சும் நிலாவ வச்சி பாட்டு எழுதுனா, அவங்கள உண்டு இல்லன்னு ஆக்கிடனும். வண்ண நிலா, வெண்நிலான்னு எவ்ளோ பாட்டு. ஒன்னு நிலா இல்லைனா தென்றல், இந்த ரெண்டு வார்த்தையும் இந்த கவிஞர்கள் கைல மாட்டிகிட்டு படாத பாடு படுது.’ என்று முகநூலில் கோபத்துடன் ஒரு பதிவிட்டு விட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். மெதுவாக ரயில் புறப்பட்டது. சித்தார்த், ஒரு புவியியலாளன், வயது 24, சொந்த ஊர் சென்னையிலுள்ள புரசைவாக்கம். திருச்சி பெரியார் கல்லூரியில் பி.எஸ்.சி ஜியோலாஜி முடித்தவன். தனிப்பட்ட ஆர்வத்தில் அந்த துறையை தேர்ந்தெடுத்தான். இந்த உலகத்தின் மீது அவனுக்கு அவ்வளவு விருப்பம். மிதமான உயரம், இணைந்த புருவம், மாநிறம் , அடர்ந்த சிகை, ஒரு வாலிப உடல். நாகரிக உடை, பாஸ்ட் ட்ராக் வாட்ச். பணக்காரர்களுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடைப்பட்டது அவன் குடும்பம். வீட்டிற்கு ஒரே செல்ல பிள்ளை.
தற்போதைக்கு வேலையில்லை. கிடைத்த வேலைகளில் இவனுக்கு விருப்பமில்லை. ஆனால் இவனது ப்ரோபைலை இணைதளத்தில் பார்த்த வேதாந்த் என்றவர், இன்று காலை எட்டு மணிக்கு வில்லிவாக்கம் ரயில் நிலையம் வருமாறு அழைத்திருந்தார். மீண்டும் அவனது மன ஓட்டம் ஆரம்பித்தது ‘அது என்ன ரயில்வே ஸ்டேஷன் வர்றது? வழக்கமாக வேலைக்கு ஆபீஸ்க்குத்தானே கூப்டுவாங்க. இந்த வேதாந்த் கொஞ்சம் வித்தியாசமான ஆளா இருக்கானே, என்ன மாதிரி வேலைனும் சொல்லல! ஆனா ‘இந்த வேலைய நீங்க கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டிங்க மிஸ்டர் சித்தார்த், நேர்ல வாங்க நாங்க உங்கள பிக் அப் பண்ணிக்கிறோம்னு சொன்னாரே. அவர் பேச்சு நம்புற மாதிரிதான் இருக்குது, சரி... போய்தான் பார்போம்.’ அந்த இரயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. எதிரே ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். சற்று தள்ளி ஒரு பெண் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். மிகவும் அழகான குழந்தை!
அடுத்த பத்து நிமிடங்களில் வில்லிவாக்கம் வந்தது. ‘புரசவாக்கத்துலருந்து இங்க என் பைக்ல வந்திருந்தாலே கால் மணி நேரம்தான் ஆகியிருக்கும், ஆனா என் இவரு ட்ரைன்ல வர சொன்னாரு?’ என மனக் கேள்வியோடு வேதாந்த் முன்கூட்டியே கூறியபடி, தனது கைபேசியில் அவரை அழைத்தான். ‘ஹலோ, வேதாந்த் சாரா, சார், நான் வில்லிவாக்கம் வந்துதுட்டன் சார்’ ‘ஓகே அப்டியா, நல்லது. அப்படியே அந்த சென்டர் எக்சிட் வழியா வெளிய வாங்க சார். நான் என் ப்ளாக் கலர் ஜாகுவார்ல வெயிட் பண்றன்’ ‘ஓகே சார்,’ போனை கட் செய்தான். ‘என்னது ஜாகுவார்ரா!’ என சிந்தித்துக் கொண்டே அக்காரை அடைந்தான். அக்காரின் வெளியே கருப்பு கலர் கோட் சூட்டில் வேதாந்த் நின்றுக் கொண்டிருந்தார். ‘வாங்க சித்தார்த் உள்ள உக்காருங்க, மத்ததெல்லாம் ஆபீஸ்ல போய் பேசிக்கலாம்.’ சித்தார்த்தும் ஏதும் பேசாமல் காரில் ஏறினான். அந்த காரில் ஜன்னலில் இருந்து வெளியில் எதையும் பார்க்க முடியவில்லை. முன்பக்கமும் மூடி இருந்தது. வண்டி எங்கு போகிறது என்றே தெரியவில்லை!
அநேகமாக அது அண்ணா நகரில் ஒரு பகுதியாகத்தான் இருக்கவேண்டும். கார் கதவு வேதாந்த்தால் திறக்கப்பட்டது. அது ஒரு ஆபீஸ் அல்ல, ஒரு வீடு, அதுவும் பெரிய வீடு, அதாவது பங்களா! ‘என்னை பின் தொடருங்கள்’ என்று வேதாந்த கூறி விட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் முன் வாசலை நோக்கி நடந்தான். அவனும் பின் தொடர்ந்தான். அந்த பெரிய ஹாலில் நேராக முன் பகுதியில் இருந்த, கலைநயமிக்க படிக்கட்டுகளில் ஏறி, அந்த முதல் தளத்தில் இடது புறம் இருந்த அறையை காட்டி ‘அந்த ரூம்ல கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, நான் டூ மினிட்ஸ்ல வரேன்’ என்றார். சித்தார்த்தும் நடந்து அந்த அறையில் நுழைந்தான். எங்கும் ஆடம்பரம் நிறைத்திருந்தது. ஆனால் அங்கு யாரும் இல்லை. அந்த அறையில் குளிர்சாதன வசதியின் குளிர்ச்சியுடன் சேர்த்து ஒரு தூய, நறுமணமிக்க காற்றை பரப்பியிருந்தது. அங்கு ஒரு கரும்பலகை அளவிற்கு ப்ரொஜெக்டர் ஸ்க்ரீன் ஒன்றிருந்தது.
அதில் வால்பேப்பராக பால்வளி அண்டத்தின் ஒரு படம் வைக்கப்பட்டு இருந்தது. விளக்கின் வெளிச்சத்தில் சற்று அப்படம் சற்று மங்கலாக தெரிந்தது. அவ்வறையில் ஒரு மரண அமைதி நிலவியது. அந்த குளிரிலும் சித்தார்த்துக்கு சற்று வேர்த்துதான் போயிருந்தது. யார் இந்த வேதாந்த்? ஏன் இப்படி விசித்திரமாக இருக்கிறார்? என யூகிப்பதற்குள் தீடிரென அந்த அறை இருட்டானது! இப்பொழுது அந்த ப்ரொஜெக்டர் ஸ்க்ரீன் நன்கு தெளிவாக பளிச்சென்று தெரிந்தது. அங்கு மேசையின் மீதிருந்த ஒரு ஸ்பீக்கரில் இருந்து ஒரு குரல் கேட்டது. ‘குட் மார்னிங் மிஸ்டர் சித்தார்த்’. அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. அது வேதாந்தின் குரல் அல்ல. அக்குரல் சற்று கம்பீரமாக இருந்தது . ‘உங்கள் மனதில் இப்பொழுது ஸ்பிக்கரில் பேசுவது யார்? ஏன் இவர்கள் என்னை இப்படி அழைத்து வந்தார்கள்? இவர்கள் எனக்கு என்ன வேலை கொடுக்கப் போகிறார்கள்? என்று பல கேள்விகள் இருக்கலாம். சற்று பொறுங்கள், எல்லாவற்றிற்கும் பதிலளிக்கிறேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. ‘இந்த பூமியை காக்க நீங்கள் தயாரா?’
அந்த பளிங்கு மாளிகை போல இருந்த கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து வருக்கோ அப்பெரிய மெல்லிய பிரதிபலிக்கும் கணினித்திரையை பார்த்து, என்ன நடக்கிறது என சில நொடிகளில் யூகித்துவிட்டு அக்கியை நோக்கி, ‘இளவரசே இங்கிருந்து சுமாராக 80,000 கிமீ தொலைவில் ஒரு விண்கல் வருகிறது. அதன் வேகம் மற்றும் கோணத்தை பார்த்தால் அது பூமியை மோத 60% வாய்ப்பிருக்கிறது.’ என்றார். ‘நமக்கு அருகில் வர எவ்வளவு நேரம் ஆகும்?’ ‘இரண்டு நாட்கள் ஆகும்.’ ‘அதன் விட்டம்?’ ‘8000 மீ மற்றும் பருமன் 11000 க.ச கிமீ’ ‘சரி, நான் பார்த்துக் கொள்கிறேன், வருக்கோ. இதற்கு எனது விண்கலத்தில் உள்ள வெடிபொருள் போதும்.’ அங்கு இருந்த ஆய்வாளர்களில் ஒருவன் அக்கியிடம் ‘தளபதியாரே, நீங்கள் அதை வெடித்துச் சிதறடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, நமது வெடி பொருட்களை அதன்மீது மோதவிட்டு தற்பொழுது அதன் பாதையிலிருந்து சில சென்டி மீட்டர்கள் நாம் நகர்த்தினாலே போதுமானது.
இதன்மூலம் அது நம்மை நோக்கிய பாதையில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் விலகியிருக்கும்.’ என்றார். ‘தெரியும், நான் அதை திசை திருப்புகிறேன்.’ என்று கூறிக் கொண்டே அக்கி வேக வேகமாக மொட்டை மாடியை நோக்கி சென்றான். அவனது கையில் இருந்த கருவியில் அரசர் டெஹரி தொடர்பு கொண்டார். ‘அக்கி விண்கல் விஷயத்தை கேள்விப்பட்டேன், தனியாகவா செல்கிறாய்?’ ‘ஆம் மன்னா.’ ‘எதற்கும் நிலாங்கி படைகளை கூப்பிடலாமே.’ ‘இந்த சின்ன விஷயத்திற்கு எதற்கு படை அண்ணா, என்னால் சமாளிக்க முடியும். நமது விண்கலத்தில் சென்றால் இரண்டு மணி நேரத்தில் அவ்விடத்தை அடைந்து விடுவேன். மேலும், சாதாரணமாக ஒரு 100 அல்லது 150 மீ விட்டமுள்ள விண்கல் என்றால் அது பூமியை அடையும் முன்பே அதன் மேற்பரப்பு வெப்ப சலனத்தில் சாம்பலாகி விடும். ஆனால் அக்கல் சற்று பெரியது என்பதால் இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று அதை நமது வெடிபொருட்களால் தாக்கி அதன் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்துவது. மற்றொன்று அதை சுக்கு நூறாக உடைப்பது.’
‘வெற்றியோடு திரும்பு தம்பி, நான் தங்கையிடம் சொல்லி விடுகிறேன்.’ ‘நன்றி அரசே’ என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டு அவனது விண்கலத்தை அடைந்தான். ‘ஒர்ர்ர்ர்ர்’ என்ற மெல்லிய அதே நேரம் நிலையான சத்தத்துடன் அதிவேகமாக அவ்விண்கலம் வானில் அந்த விண்கல்லை நோக்கி சீறிப்பாய்ந்தது. பகலாக்கை தாண்டி இரு ஜோடி மலைகளின் உச்சத்தின் வழியாக விண்வெளியை சில நிமிடங்களில் அடைந்தது. அக்கியின் கலத்தில் உள்ள கருவிகளில் அவ்விண்கல் எங்கு இருக்கிறது. கலத்திற்கும் அதற்கும் உள்ள தூரம் மற்றும் அவ்விடத்தை அடைய ஆகும் நேரம் என எல்லாம் மிகத்தெளிவாக தெரிந்தது. அக்கி சற்று திரும்பி பூமியை ஒரு பார்வை பார்த்தான். இன்றுதான் உருவானது போல் அழகாகவும், செழிப்பாகவும் இருந்தது! மறுபடி அவன் சிந்தனைகள் சிதற ஆரம்பித்தன.
‘இந்த சாதாரண விண்கல்லுக்காகவா, என் உடம்பு இப்படி சிலிர்த்தது. இதற்கு முன்பு இப்படி ஆனதில்லையே. நாம் புராணங்களில் படித்தது போல கற்டவுக்கு மட்டுமே பூமிக்கு ஏதேனும் பெரிய ஆபத்து வந்தால், அவரது உடம்பு முன்கூட்டியே சிலிர்க்கும். அப்போது நம் தந்தை கூறியது உண்மைதானா. அப்படியென்றால்,... நமக்கு கற்டவு ஆவதற்கு தகுதிகள் உள்ளனவா என யோசித்துக்கொண்டே விண்கலத்தின் வேகத்தை கூட்டினான். அவன் கலத்தில் இருந்து பார்க்கும் பொழுது நிலவு சிறிது, சிறிதாக சுருங்கி ஒரு புள்ளி போல் ஆகி மறைந்துவிட்டது. அவனை சுற்றிலும் கருப்பு திரையில் ஓட்டிய வெள்ளி பொட்டுகள் போல நட்சத்திரக் கூட்டம் மட்டுமே இருந்தது. தற்பொழுதும் அவனது உள்ளுணர்வு அவனுக்கு கூறியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது,
“பூமிக்கு ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கிறது!!”

-தொடரும்.

எழுதியவர் : அகரன் (11-Mar-18, 10:06 pm)
சேர்த்தது : அகரன்
பார்வை : 103

மேலே