உள் உறைக்கும் எனப்பெரியோர் கண்டுகை விட்ட மயல் – நாலடியார் 43

’ய்’ ஆசிடையிட்ட இருவிகற்ப நேரிசை வெண்பா

தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி
பொ'ய்'க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல். 43

- தூய்தன்மை, நாலடியார்

பொருளுரை:

எப்பொழுதும் உணவுத் தொழில் உள்ளே அழுக்கை மிதக்கும் என்று பெரியோர் தெரிந்து விருப்பத்தைக் கைவிட்ட இவ்வுடம்பின் அழுக்கு, தக்கோலம் முதலிய மணப்பொருள்களை வாயில் மென்று, தலை நிரம்ப மணமலர் சூடி, செயற்கை அழகுகளைச் செய்து கொள்வதனால் நீங்கிவிடுமோ?

கருத்து:

செயற்கையாக எவ்வளவு மணப்பண்டங்கள் ஊட்டினாலும் உண்ணுந்தொழில் அழுக்கை மிகுத்துக் கொண்டே இருக்குமாதலால், இவ்வுடம்பின் மேல் விருப்பங் கொள்ளுதலிற் பயனில்லை.

விளக்கம்:

இயல்பல்லாத கோலம் பொய்க்கோலம் எனப்பட்டது. உறைத்தல் - தனது நிலையை மிகுவித்தல். மயல்: அழுக்கென்னும் பொருட்டு. ‘மயல் ஒழியுமே' என்று கூட்டிக்கொள்க. ஒழியாது என்றபடி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-18, 9:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21
மேலே