முதுமொழிக் காஞ்சி 44

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
சோராக் கையன் சொன்மலை யல்லன். 4

- அல்லபத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் பிறர்க்கு ஒன்றை உதவாத கையையுடையோன் புகழைத் தாங்கமாட்டான்.

சோர்தல் - நெகிழ்தல். சோராக்கையன் - கைநெகிழ்ச்சி இல்லாதவன் - ஒன்றுங் கொடாதவன்,

சொல் - புகழ். சொன்மலை - மலை போன்ற புகழ்: மிக்க புகழுடையவன்.

பதவுரை:

சோரா(த)கையன் - பிறர்க்கு ஒன்றுங் கொடாதவன்,

சொன்மலை அல்லன் - மலைபோன்ற புகழை உடையவனாகான்.

உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்(று)
ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 புகழ்

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

‘சோரக் கையன்' என்ற பாடத்தைக் களவு செய்யும் கையையுடையவன் புகழுக் குரியவன் ஆகான் எனப் பொருத்துகின்றனர்.

சோரம் - களவு, கை - ஒழுக்கம்; சோரக் கையன் - களவொழுக்கம் உள்ளவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Mar-18, 3:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே