உப்பளத்தின் கண்ணீர்

கடல்காற்றின் கோபங்கள்
கண்ணுக்குள் தீ பிடிக்க...
கதிரவனின் கை பட்டு
கனலாக கால் கொதிக்க...
உடல் உழைப்பின் உச்சத்தில்
உப்பு வயல் உருவாகும்..!

செய்யும் தொழில் தெய்வமென்று
செருப்பை காலில் அணியாமல்...
செய்ய முடியா வலியிருந்தும்
செயலில் வேகம் குறையாமல்...
விரிசல் விழுந்த பாதத்தோடு
வியர்வை சிந்தும் விதியாகும்..!

காயங்கள் ஆறுவதில்லை
கவலைகளும் தீர்வதில்லை
கருமேகம் வரும் நேரம்
கண்ணீரும் குறைவதில்லை..!

இலாபங்கள் ஏதுமில்லை
இராப்பகலாய் தூக்கமில்லை..!
அரசு சொல்லும் விலையினில்
அணுஅளவும் கருணையில்லை..!

ஆயிரம் கிலோ
உப்பின் விலை
ஐநூறு ரூபாயை தாண்டவில்லை..!

ஆறாத புண்ணும்
அயராத வலியும்
ஆயுள் முழுதும் தொடர்ந்திடுமோ..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (16-Mar-18, 9:09 pm)
பார்வை : 770

மேலே