பூமி தினக் கொண்டாட்டங்கள்

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் பத்தாவது உரை



விழிப்புணர்வை ஊட்டும் பூமி தினக் கொண்டாட்டங்கள்


ச.நாகராஜன்





உலகெங்கும் 192 நாடுகளில் ஏப்ரல் 22ஆம் தேதியை எர்த் டே (Earth Day)ஆக – பூமி தினமாகக் கொண்டாடுகிறோம்.

எப்படி பூமி தினம் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பாரா என்ற இடத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு 10000 கடல் பறவைகளை அழித்தது. 30 லட்சம் காலன் என்ற பெரிய அளவில் ஏற்பட்ட இந்த எண்ணெய்க் கசிவு மனித குலத்தைச் சிந்திக்க வைத்தது. இதனால் மனம் நொந்த அமெரிக்க செனேடர் கேலார்ட் நெல்ஸன் (Gaylord Nelson) பூமியைக் காக்க விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் முதல் பூமி தினத்தைக் கொண்டாடினார்.

இதனால் உலகெங்கும் ஏராளமானோர் விழிப்புணர்வு பெற்றனர்.

பல்வேறு நாடுகளிலும் கடந்த 47 ஆண்டுகளில் சுற்றுப்புறச் சூழலைக் காக்கப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மனித குலத்திற்கே தீங்கு விளைவிக்கும் பல இரசாயனப் பொருள்களின் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.



நீரைக் காக்க வேண்டிய அவசியத்தையும் காற்றைச் சுத்தமாகக் காக்க வேண்டிய அவசியத்தையும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதல் வயதானோர் வரை அனைவருக்கும் இந்த தினத்தில் விழிப்புணர்வூட்டும் பிரச்சாரம் நடைபெறுகிறது.



நூறு கோடி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் தீவிர இயக்கமாக பூமி தினக் கொண்டாட்டம் இன்று ஆகி விட்டது.

இதில் நாமும் பங்கு கொண்டு நம் பங்கிற்கு உரியதை ஆற்றுவது நமது கடமையாகும்.



ஆற்றிலிருந்து மண் வளம் சுரண்டப்படாமல் இருத்தல், நீரைச் சேமித்தல், பாதுகாத்தல், அசுத்தப்படாமல் வைத்திருத்தல், ஒளி மாசை அகற்றல், வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப்புகையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அவற்றை அறவே இல்லாமல் ஆக்குதல், ஒலி மாசைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், இயற்கை வளமான காட்டுச் செல்வத்தைக் காத்தல், அரிய விலங்குகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், அருகி வரும் இனமாக ஆகி விட்ட திமிங்கிலங்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு நலம் பயக்கும் திட்டங்களை ஏற்படுத்தவும் செயல்படுத்தவும் பூமி தினம் உதவுகிறது.



ஒவ்வொருவரும் இதில் இணைந்து வளம் வாய்ந்த பூமியை உருவாக்குவோம்; நிலை நிறுத்துவோம்!

***











Share this:

எழுதியவர் : (17-Mar-18, 3:10 am)
பார்வை : 104

மேலே