முதுமொழிக் காஞ்சி 47

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வாழாமல் வருந்தியது வருத்த மன்று. 7

- அல்லபத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், தன்னுயிர் நன்கு வாழ்வதை விரும்புவதை விட பிறவுயிர்கள் இன்புற்று வாழ்வதை வருந்தி வேண்டுவது அதற்காக உழைப்பதில் சிரமமும், வருத்தமும் இல்லை எனப்படுகிறது.

பதவுரை:

வாழாமல் - தன் உயிர் நன்கு வாழ்வதை வேண்டாமல் பிறவுயிர்கள் இன்புற்று வாழ்வதை வேண்டி,

வருந்தியது - ஒருவன் வருந்தலுற்றது, வருத்தம் அன்று - வருத்தத்திற் சேர்ந்த தாகாது.

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதா(து) உலகில்
நிறைஇருளை நீக்கும்மேல் நின்று. 10 - நன்னெறி

பொருள்:

நிலவானது தன்னிடமிருக்கும் கறையான இருளை நீக்கிக் கொள்வது பற்றி நினைக்காது, மேலே நின்று உலகில் படர்ந்திருக்கும் இருளைப் போக்கவே நினைக்கும்.

அது போலவே, உயர்ந்தோரும் தன் குறை நீங்குதலை நினையாது, பிறர்க்கு உண்டாகிய கடும் துன்பத்திற்கு மனம் இளகி அவற்றைத் தீர்த்து வைப்பர்.

ஆதலால், சமுதாய நன்மையை வேண்டி உழைப்பவர்க்கு அதிலுள்ள வருத்தம் வருத்தமாகத் தோன்றாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Mar-18, 9:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே