மகிழாதோ உள்ளம்

வஞ்சத்தை நெஞ்சத்துள் வைத்தாலும், என்றும்
‘நெஞ்சத்துள் வைத்ததென்றும் வணங்கிடுவேன் ‘ என்பார்
துஞ்சாமல் துணையிருந்து துணிவோடு நாளும்
தொடர்ந்தென்றும் காத்திடலே கடமையெனக் கூறும்
வஞ்சகரின் வாய்மொழியை வாய்மையில்லை என்று
நெஞ்சத்தால் உணர்ந்திடுதல் வாழ்வினிலே உண்டோ ?
தஞ்சமேன்றே தணிந்திருப்பார் தாராளம் கொண்டு
தணல்கண்டு தள்ளிடிவார் தன்னலத்தை எண்ணி !

நல்லவராய் நாட்டினிலே நாளெல்லாம் சுற்றி
நாடகமே நடத்திடுவார் ! நம்பிடுவார் மக்கள்.
உள்ளமெல்லாம் வஞ்சனையாய் ஊரெல்லாம் சென்று
உள்ளவற்றைச் சுருட்டிடுவார் உறங்காமல் என்றும்.
எள்ளளவும் இரக்கமது நெஞ்சமதில் இல்லார்
எந்நாளும் பிறர்சொத்தை எடுப்பதிலே நிற்பார்!
கள்ளமுடன் காசுபணம் கணக்கின்றி சேர்த்து
கவனமுடன் பதுக்கிடுவார் புதைகுழிகள் தோண்டி !

உழைக்காமல வந்துவிட்ட பெருந்தொகையைக் கொண்டு
உத்தமர்போல் செலவிடுவார் ! ஊர்மக்கள் போற்ற !
சளைக்காமல் வலிக்காமல் அள்ளிஅள்ளி தந்து
சரித்திரத்தை மாற்றிடுவார் ! சங்கடங்கள் இன்றி !
நிலையற்றுப் போவதுதான் பணமென்று சொல்வர்
நிச்சியமாய் பாதாளம் வரையதுவும் பாயும்
விலைபேசி யாவினையும் வாங்கிடவே செய்யும்
விதியினையும் அதுமாற்றும் விளையாட்டு அல்ல !

கொட்டிகொட்டி கொடுத்துவிடின் கோபுரத்தில் ஏற்றும்
கோமகனாய் எண்ணியென்றும் கொண்டாட்டம் போடும்!
எட்டிஎட்டி போனாலும் ஒட்டிவந்து நிற்கும்
ஏமாந்த கூட்டந்தான் என்றாலும் வாழ்த்தும்.
வட்டிகட்டி வட்டிகட்டி வாழ்ந்திருக்கும் கூட்டம்
வருமானம் வருகுதென்றால் வாய்பிளந்து பார்க்கும்.
முட்டிமுட்டி உழைத்தபோதும் முளைக்காத காசு
முயலாமல் கிடைக்குமென்றால் மகிழாதோ உள்ளம்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (20-Mar-18, 10:20 pm)
பார்வை : 207

மேலே