நெற்றிக் கண் சூடான தோசை சுவைமிகு சிங்கப் பெருமாள் கோவில்---------------------------- லண்டன் ஸ்வாமிநாதன்

கோவில் என்றவுடன் கடவுளின் பெயர், சந்நிதிகள், சிலைகள் என்று வருணிக்கத் துவங்கி விடுவர். எனது அணுகு முறை வேறு: முதலில் ‘புல்லட் பாயிண்ட்ஸ்’- பின்னர் விரிவான விளக்கம்; நானும் என் தம்பியும் மார்ச் முதல்வாரத்தில் சிங்கப் பெருமாள் கோவில் பெருமாளைச் சேவித்தோம். இதோ முதலில் அதிசய மற்றும் சுவையான செய்திகள்:




1.நெற்றிக் கண் பார்க்கலாம்!

2.அதிசய அழிஞ்சில் மரம் காணலாம்
சூடான தோசைப் பிரஸாதம் சாப்பிடலாம்
4.பாரீஸ் நகர லவ்வர்ஸ் லாக் LOVERS LOCKS போல இங்கே பிராப்ளம் லாக்

PROBLEM LOCK சுவாமிக்கு சார்த்தலாம்

5.நரசிம்மர் சிலையின் மேல் சூரிய ஒளி விழுவதை சில மாதங்களில் காணலாம்



தலைப்புச் செய்திகளைக் கொடுத்துவிட்டேன் இனிமேல் விரிவான செய்திகள்:



சிங்கப் பெருமாள் கோவில் காஞ்சீபுர மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள நரசிம்மர், பாடலாத்ரி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். பாடலாத்ரி என்றால் சிவப்பு மலை. ஜாபாலி முனிவருக்கு இறைவன் காட்சி கொடுத்த இடம்..



இங்கு ஒவ்வொரு முறை தீபாரதனை காட்டும் போதும், பட்டர் அவர்கள், நரசிம்மரின் நெற்றிக் கண்ணைக் காட்டுகிறார்.சிவ பெருமானுக்கே உள்ள இந்த அம்சத்தை இங்கே காணலாம் ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொன்றவுடன் கோபத்துடன் வந்த கோலம் இது. நரசிம்மாவதாரம், பத்து அவதாரங்களில் ஒன்று.



பேயாழ்வாரால் பாடப்பட்ட தலம்; 108 வைணவ திருப்பதிகளில் ஒன்று; இது சுமார் 1500 ஆண்டுப் பழமை வாய்ந்த பல்லவ குடைவரைக் கோவில்; ஒரு சிறிய குன்றின்மீது கோவில் அமைந்துள்ளது.



நரசிம்மப் பெருமாளைத் தரிசித்துவிட்டு கோவிலை வலம் வரும்போது, சூடான தோசைப் பிரசாதம் கிடைக்கும். விலை பத்து ரூபாய்; புளியோதரை சர்க்கரைப் பொங்கலும் விற்கிறார்கள். எங்கள் மதுரை அழகர் கோவில் அடை அளவுக்கு ருசி இல்லாவிடினும், பசிக்கு உதவும் அருமருந்து இது.



இன்னும் கொஞ்சம் நடந்தால் அழிஞ்சில் மரத்தைக் காணலாம். இது பற்றிய அற்புதச் செய்திகளை ஆதி சங்கரரின் சிவானந்தலஹரி மூலமும் ஆண்டாளின் நாச்சியார் மொழி மூலமும் ஏற்கனவே எழுதிவிட்டேன்.



கோவிலுக்கு வெளியே வந்தால் ஒரு நரசிம்மர் சந்நிதி உள்ளது; அங்கே பூட்டுகளாகத் தொங்கு கின்றன. பாரீஸிலும் பல ஐரோப்பிய நகரங்களிலும் ஆற்றுப் பாலங்கள் தோறும் பூட்டப்பட்ட பூட்டுகளும் அதன் மேல் காதலன்–காதலி பெயர்களும் இருக்கும்; இதன் தாத்பர்யம் என்னவென்றால் அந்த ஜோடி பூட்டு போல இணைந்திருக்குமாம் ( பூட்டைப் பூட்டிவிட்டு வீடு திரும்புவதற்குள், ஜோடிப்புறாவில் ஒன்று பறந்துபோனாலும் அதிசயமில்லை!!!)

நரசிம்மப் பெருமாள் கோவிலில் ஏன் இப்படிப் பூட்டு போடுகிறார்கள் என்று வினவியபோது கிடைத்த விடையில், பிரச்சினைகள் உள்ளோர் அது தீரும் வரை இப்படிப் பூட்டுப் போட்டு வைத்திருப்பராம்; பிரச்சனை தீர்ந்த பின்னர் அதை எடுத்துவிடுவராம்.

ஆண்டுதோறும் சில மாதங்களுக்கு நரசிம்ம மூர்த்தி மீது சூரிய ஒளி படுவதும் கோவிலின் சிறப்பு.



சாது சந்யாசிகள்



இந்தக் கோவிலுடன் இணைத்துப் பேசப்படும் முனிவர் ஜாபாலி என்பவர் ஆகும். ராமாயணத்தில் ஒரு ஜாபாலி உண்டு. ஆயினும் அவர்தான் இவர் என்று சொல்வதற்கில்லை. சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் கூட வால்மீகி உண்டு; அவர் ராமாயணம் எழுதிய வால்மீகி இல்லை. ஏனெனில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்துக்கு பல ஆயிரம் ஆண்டு முன்னர் நடந்தது ராமாயணம். அவர் ராமனின் சமகால முனிவர்.



எந்த ஆண்மகனின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் உண்டு- There is a woman behind every man’s success என்று சொல்லுவர்.

அது உண்மையோ இல்லையோ எந்தக் கோவிலின் மஹிமைக்கும் பின்னால் ஒரு முனிவர் அல்லது சித்தர் அல்லது ரிஷி உண்டு There is a Rishi or Saint behind every Hindu Temple என்பது உண்மையே; இந்தக் கோவிலில் ஜாபாலி முனிவர் தொடர்பு இருப்பது போல சித்தர்கள் சமாதி உள்ள கோவில்களும் முனிவர் தொடர்புள்ள கோவில்களும் தன ஆகர்ஷணமும் (பணம்) ஜன ஆகர்ஷணமும் (மக்கள் கூட்டம்) உடைத்தாய் இருக்கின்றன.






–சுபம், சுபம்–



Share this

எழுதியவர் : (21-Mar-18, 6:37 pm)
பார்வை : 32

மேலே