நமது பெண்மணிகளை மெல்லக் கொல்லும் விஷங்கள் ---------------------------சநாகராஜன்

சுமார் 25 ஆண்டுகள் இருக்கலாம், பெல்ஜியத்திற்கு அலுவலக விஷயமாகச் செல்ல நேர்ந்தது.

ரோஸலேர் என்று ஒரு அழகிய சிற்றூர். அங்கு சென்றேன்.

எங்கள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்த படி நண்பர் ஒருவர் தங்குமிடம் உள்ளிட்டவற்றை அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்.





அவருக்கு ஒரு ஆசை – என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று.

அழைத்தார். எதற்கு அவருக்கு சிரமம் என்று மறுத்தேன்.

வற்புறுத்தினார். சம்மதித்தேன்.

எனது சக நண்பர்களுடன் அவர் வீட்டிற்குச் சென்றோம்.

இரவு சுமார் ஏழரை மணி.

வீட்டில் மணியை அடித்தார். கதவைத் திறந்தது அவர் மனைவி.

எங்களை நண்பர் அறிமுகப்படுத்த அவர் புன்னகையுடன் வரவேற்றார்.





ஒரு நிமிடம் தான், அவசரம் அவசரமாக உள்ளே ஓடினார்.

பிறகு சுமார் 30 நிமிடங்கள் ஓடின.

நண்பருக்கும் எம்பராஸ்மெண்ட்.

ஏதேதோ பேசினோம்.

30 நிமிடங்களுக்குப் பின்னர் அவசரம் அவசரமாக உள்ளேயிருந்து வந்தவர் மன்னிப்புக் கேட்டார்.

என்ன விஷயம் என்று கேட்டேன்.

ஒரு டி.வி. சீரியல்.





சில மாதங்களாக ஓடிக் கொண்டிருந்தது அன்று முடிவுக்கு வந்தது.



அதைப் பார்க்க உள்ளே போனேன்.மன்னிக்கவும் என்றார்.

“மன்னிப்பே கேட்க வேண்டாம்.எங்கள் வீட்டுப் பெண்மணிகளும் கூட இப்படித்தான்.போன் வந்தால் கட் பண்ணி விடுவார்கள்.

அரை மணி நேரம் கழித்துக் கூப்பிட்டு ஒரு மணி நேரம் பேசுவார்கள். வெவ்வேறு ஊர்களில் இருக்கும் அம்மா, பெண்ணும் கூட இப்படித்தான்.“ என்றேன்.





அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

பிறகு நல்ல உணவைப் பரிமாறினார்.

விடை பெற்றோம்.

நல்ல அனுபவம் இது!



உலகெங்கும் டி.வி.சீரியல்களின் தாக்கம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் போலும்!



தமிழ் டி.வி. சீரியல்களைப் பற்றி என்னால் சொல்ல முடியும். விருப்பமில்லாவிட்டால் கூட அதன் சில சீன்கள் என் பார்வையில் திணிக்கப்படும்.



எப்படி ஒருவரை கொலை செய்வது? கேஸைத் திறந்து விட்டு.. தலைகாணியை வைத்து அமுக்கி. பல்வேறு விஷங்களைப் பல்வேறு விதமாக ஜூஸில் கலந்து…

எப்படி ஒருவரை உபத்திரவப் படுத்துவது?



பல்வேறு உபாயங்களைக் கையாண்டு கை கால்களை உடைப்பது, கடத்துவது, காட்டு பங்களாவில் அல்லது பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைத்து அடிப்பது, மிரட்டுவது…

போலீஸ் கேஸ்களில் தவறாக மாட்டி விடுவது.. இத்யாதி, இத்யாதி.



கேவலமான சீன்கள் முடிவில்லாமல் தொடர்கதையாக நீளும்.

இப்படி ஒரு சீரியல் மட்டும் இல்லை, ஏராளமான சீரியல்கள்!

காலை முதல் இரவு 10.30 வரை இப்படி சீரியல்களின் தொடர்ச்சிகள். எல்லாம் இப்படித் தான்!

இதைப் பார்க்கும் நம் வீட்டுப் பெண்மணிகள் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும். மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க முடியும்?





நெகடிவ் எண்ணங்களினால் மூழ்கடிக்கப்பட்டு “நாசமாய்ப் போவதற்கு”த் தயாராகத் தானே வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் மரணக்காட்சிகள், நல்ல நாட்களில் கோரமான கொலைகள் . – இப்படிப் பார்த்தால் வாழ்க்கை எப்படி நன்கு அமையும்?





சீரியல் எபிசோட்களை அமைப்பவர்கள் எப்படி நல்ல வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியும்?

கர்ம பலன் விடாது. லட்சக் கணக்கானோருக்கு தீய காட்சிகளை இடைவிடாது காண்பிக்கக் காரணமான இவர்கள் எப்படி நலமுடன் வாழ முடியும்?



பெரிய பெரிய நிறுவனங்கள் – தொலைக்காட்சித் தொடர்களை அளிப்பவர்கள் – அதன் பொறுப்பாளர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.



தேவன் எழுதாத நாவல்களா?

கல்கியின் கதாநாயக, நாயகியர் அனுபவிக்காத அவஸ்தைகளா?

சமூகப் பொறுப்புடன் எழுதிய நல்ல எழுத்தாளர்கள் அல்லவா இவர்கள்?



ராஜாஜி சமூகத்தை உன்னத நிலைக்குக் கொண்டு போகும் படி எழுத வேண்டுமென்று எழுத்தாளர்களுக்கு அறிவுரை பகன்றார்.

காஞ்சி பரமாசார்யாள் எழுத்தாளர்களுக்கு மாபெரும் பொறுப்பு உண்டென்றும், அவர்களின் பேனா முனையிலிருந்து வருபவை நல்லதையே எழுத வேண்டுமென்றும் அறிவுரை அருளினார்.

இன்றைய தமிழ் டி.வி. சீரியல்கள் மெல்லக் கொல்லும் விஷங்கள்!





இவற்றிலிருந்து விடுபட்டவர்கள் பாக்கியசாலிகளே!

வேலைக்குப் போகும் பெண்மணிகள் சற்று பிழைத்தவர்க்ளே என்று சொல்லலாம்!





மாலை நேரங்களில் கோவிலுக்குச் செல்லல், நல்ல பாடல்களை, கீர்த்தனைகளை இசைத்தல், அர்த்தமுள்ள அரட்டை அடித்தால் – இவையெல்லாம் எங்கு போயின?





நமது பெண்மணிகள் சற்று யோசிக்க வேண்டும்.

மெல்லக் கொல்லும் விஷங்கள் உங்களைக் கொல்ல்த் தயார்

உஷார், உஷார், தப்பித்துக் கொள்ளுங்கள்!

***

Share this

எழுதியவர் : (21-Mar-18, 7:56 pm)
பார்வை : 104

சிறந்த கட்டுரைகள்

மேலே