தேசிய ஊட்டச்சத்து வாரம் – மருத்துவர் திருமராஜிவ் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்

தண்ணீர் தினம், பெண்கள் தினம், ஆஸ்துமா தினம், குடும்ப நல வாரம், இது போன்ற பல சிறப்பு தினங்களும், சிறப்பு வாரங்களும் கடைபிடிப்பதற்கான காரணம், மக்களுக்கு அதனை சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடத்தின் செப்டம்பர் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் அந்த வாரத்தில் மக்களுக்கு ஊட்டச்சத்து சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய குறிப்பிட்ட கருத்தை எடுத்துக் கொண்டு அந்த வாரத்தை சிறப்பாக கடைப்பிடிப்பர். அந்த வகையில் இந்த வருடம் “பிறந்த குழந்தையின் ஆரோக்கியமும், குழந்தைகளுக்கு சிறந்த வகையில் உணவூட்டம் முறையும்” என்ற கருத்தை எடுத்துக் கொண்டு செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை நாடெங்கும் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது.



மருத்துவர் திரு.ம.ராஜிவ்

அதன் பங்காக, கோயம்புத்தூரில் உள்ள ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் திரு.ம.ராஜிவ் MS, FMAS, FACS, MRCS(Edin)., அவர்களிடம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பற்றி கழனிப் பூ சார்பாக சா. கவியரசன் நடத்திய நேர்காணல்

‘பிறந்த குழந்தையின் ஆரோக்கியமும், குழந்தைகளுக்கு சிறந்த வகையில் உணவூட்டும் முறையும்’ என்ற கருத்தை மையமாக வைத்து இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்படுகிறது. அதன் முக்கியத்துவத்தை விளக்கவும்.

இந்த ஊட்டச்சத்து வாரம் முக்கியமாக தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தையும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் நல்ல உணவு முறை பற்றி மக்கள் அனைவரும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடைபிடிக்கப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கட்டாயம் ஆறு மாதம் வரை கொடுக்க வேண்டும். தாய்ப்பால் தான் ஒரு குழந்தையின் எதிர்ப்பு சக்தி ஆற்றலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆறு மாதத்திற்கு பிறகும் தாய்ப்பால் கொடுக்கலாம். அடுத்து நம் நாட்டில் ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் பலர் இப்போது ஊட்டச்சத்து குறைப்பாட்டோடு இருக்கின்றனர். இந்த சிறு வயதில் வரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவர்களுக்கு மூளை வளர்ச்சி குறைகின்றது.

பள்ளிக்கூடத்தில் அவர்கள் படிப்பதில் தொடங்கி பிற்காலத்தில் எல்லா விதமான செயல்களிலும் அவர்கள் பின் தங்கி இருக்க நேர்கிறது.

எனவே சிறு வயதில் அவர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்வதில் மிக கவனம் கொள்ள வேண்டும், அதற்காக தான் இந்த ஆண்டு ‘குழந்தைகளுக்கு நல்லுணவு’ என்ற கருத்தில் ஊட்டச்சத்து வாரம் அனைத்து மாநிலங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது.





இப்போதைய இளம் பெண்கள் பலரும் இதே போன்று ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பதிக்கப்பட்டுள்ளனரே… அதை பற்றிய உங்கள் கருத்து ?

ஆமாம்… அடலசண்ட் (Adolescent) என்று சொல்லப்படும் 12ல் இருந்து 20 வயது உடைய பெண்கள் பலர் இந்த ஊட்டச்சத்து அளவீட்டில் பின்தங்கி இருக்கின்றனர். மூன்று வேளை சீராக உணவு பழக்கத்தை மேற்கொண்டாலே அதை தவிர்க்கலாம். இன்னொரு பக்கம் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் ஜன்க் ஃபுட்ஸ் (Junk foods) சாப்பிட்டு உடல் பருமனாகி அதிலிருந்து குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து, திடீர் ‘டயட்’ (Diet) என எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஏகப்பட்ட உடல் சிக்கல்கள் கட்டாயம் வரும். இதுவே இப்போதைய பல பெண்களிடம் உள்ள பிரச்சனை. அவர்களுக்கு பிடித்த ஆகாரங்களை அதிகமாக உண்ண வேண்டும் என ஆசை இருக்கும்; அதே சமயம், உடலை குறைக்க வேண்டும் எனவும் இருக்கும். அப்போது தான் இது போன்ற ‘டயட்’ பிரச்சனைகள் வரும்.

இன்னும் சிலர், வினோதமாக உடலை குறைப்பதற்காக சாப்பிட்ட உணவை தானாக வாந்தி ஏற்படுத்த முயற்சி செய்து வாந்தி எடுப்பர், இந்த நோயிற்கு ‘அனொரெக்ஸியா நெர்வோஸா’ (Anorexia nervosa) அல்லது ‘புலிமியா நெர்வோஸா’ (Bulimia nervosa) என்று பெயர். இது பெரும்பாலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தான் இருந்தது, இப்போது கடந்த சில வருடங்களாக இந்தியாவிலும் இந்த நோய் அதிகமாக காணப்படுகிறது.

இந்த ஊட்டச்சத்து அளவீடு சரியாக இருக்க, இளைஞர்கள் ஜன்க் ஃபுட்ஸ்களை தவிர்த்து, நாற்சத்து அதிகம் உள்ள பழ வகைகள், கீரைகள், கடலைகள், ஓட்ஸ், பேரீச்சம் பழம், பருப்பு வகைகள் என சரியாக எடுத்துக் கொள்ளும் போது சீராகும். மேலும் பழங்களை ஜூஸாக குடிப்பதைக் காட்டிலும் அப்படியே கடித்து சாப்பிடும் போது தான் அதிக அளவில் நாற்ச்சத்து கிடைக்கிறது. அந்த நாற்ச்சத்து சிறு குடல் பெருங் குடல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.



ஐந்து வயதுக்கு உட்பட்ட 43 சதவீத இந்திய குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் எடை அளவில் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு வறுமையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். எனவே ஊட்டச்சத்தை பெற பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கிறதா..?

ஐ.ஐ.டி கோரக்பூரை (IIT Koragpur) சேர்ந்த மாணவர் குழு, UNICEF குழுவுடன் இணைந்து 2017ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பொருளாதார நிலைமை மட்டுமே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுத்தாது என உறுதி செய்துள்ளனர். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை 15 கிலோ எடை இருந்தால் போதும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 1500 கிலோ கலோரிகள் இருந்தால் போதும், 20 கிராம் புரதச்சத்து போதும், இவை அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எளிய உணவு வகைகளிலேயே கிடைக்கிறது என்கின்றனர்.

அதாவது எளியவர்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் அரிசிக் கஞ்சி, எளிமையாக கிடைக்கும் கீரை வகைகள், பால், பருப்பு வகைகள், பொட்டுக் கடலைகள் என எல்லா உணவுகளிலும் சீரான, உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.

எனவே, அவர்கள் அதனை முறையாக எடுத்து வந்தாலே ஊட்டச்சத்து குறைப்பாட்டை தவிர்க்கலாம். பணம் என்பது பெரும் தடையாக இருக்காது. அவர்கள் அரிசி சாதத்தை குறைத்துக் கொண்டு High fiber content என்று சொல்லப்படும் நாற்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகமாக எடுக்க வேண்டும்.

நம் இந்திய நகர்புரங்களில் தேவையற்ற கொழுப்பால் உடல் பருமன் என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. அதனை பற்றி…

‘ஒபிசிட்டி’ (Obesity) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த உடல் பருமனால் இப்போது பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரான உடல் அளவை கணக்கிடும் BMI (பாடி மாஸ் இண்டக்ஸ்) 25 க்கு மேல் போனால் அவர்களுக்கு ‘ஓவர் வெய்ட்’ என்போம், 30 க்கு மேல் போனால் அதனை ‘ஒபிசிட்டி’ என்போம். அதுவே 40 க்கு தாண்டி போனால் ‘சூப்பர் ஒபிசிட்டி’ என்போம். இந்த உடல் பருமன் உள்ளவர்களுக்கு இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சனைகள், மூட்டு வலிகள் என பல உப பிரச்சனைகள் வரும். இதை குறைப்பதற்கு அவர்கள் செய்ய வேண்டியது ‘டயட்’டும் உடற்பயிற்சியும் தான். மூன்று வேலைகளும் அதிகமாக சாப்பிடுவதைக்காட்டிலும், ஒரே நாளில் அதிக வேலைகள் குறைந்த அளவில் சாப்பிட்டு வந்தால் உடலை சீரான அளவில் வைத்துக்கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். இவை அனைத்தும் செய்து உடலை குறைக்க முடியாமல் BMI 35 க்கு மேல் இருக்குமானால் அவர்களுக்கு வயதுக்கு தகுந்தது போல் அறுவை சிகச்சை செய்து சரி செய்ய முடியும். மேலும் அறுவை சிகச்சை செய்த பின்னும் அவர்கள் நாங்கள் சொல்லும் ஆகாரங்களை பின் பற்றினால் தான் உடல் அளவை சீராக வைக்க முடியும்.



நம்முடைய அரசு, தாய்ப்பால் கொடுப்பது பற்றி விழிப்புணர்வு அளிப்பது, ஃபோலிக் ஆசிட் கொடுப்பது, இரும்புச்சத்துள்ள மாத்திரை கொடுப்பது என பல முயற்சிகளை ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதை பற்றிய உங்களது கருத்த்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆம்…தாய்ப்பால் கொடுக்கும் வாரமாக ஆகஸ்ட் முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சரியான முறையில் தாய்ப்பால் கொடுத்து வந்தால் ஒரு வருடத்தில் இரண்டரை லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளாக இருக்கும். மேலும் தாய்ப்பால் மூலமாகவே குழந்தைக்கும் அம்மாவிற்கும் உள்ள நெருக்கம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தாய்ப்பால் கொடுப்பதென்பது ஒரு தாயின் உடல் நலத்திலும் முக்கிய பங்கு வகுக்கிறது, அது கொடுக்காத பொழுது அவர்கள் உடலுக்கே பல தீங்குகள் ஏற்படுகின்றன. அடுத்து குழந்தைக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தண்டு வளைவு சீராக இருப்பதற்காகவும் கருவுரும் பெண்களுக்கு ஃபோலிக் ஆசிட் கொடுக்கிறார்கள். இதை ஒவ்வொரு ஊர்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலுமே கொடுக்கிறார்கள், ஆனால் பெண்களுக்கு இதனை பற்றி பெரிதாக விழிப்புணர்வு இல்லை. கருவுருவதற்கு இரண்டு மாதம் முன்பிருந்தே இந்த ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்வதென்பது முக்கியம். மிகவும் எளிமையாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று கருவுற்றிருப்பதை பதிவு செய்துவிட்டால் போதும், அங்கிருப்பவர்களே என்றைக்கு நாம் திரும்ப அதனை எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற அட்டவணையை கொடுத்துவிடுவர். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களும் இதனை எளிமையாக செய்யலாம். அனைத்து பெண்களும், தங்களது குழந்தையின் ஊட்டச்சத்தை கருத்தில் கொண்டு இதில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

இப்போது இந்த கழனிப்பூ வலைதளம், வேளாண் மாணவர்களால் தொடங்கப்பட்டது. சிறந்த வேளாண்மையே சிறந்த சத்தான உணவுக்கு வழிவகுக்கும். அப்படியிருக்கையில் உங்களைப் போன்ற மருத்துவ வல்லுனர்களுக்கு வேளாண் அறிஞர்கள் எந்த வகையில் பயனாக இருப்பார்கள்?

முதலில், நான் ஒரு விவசாயின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன். என்னால் விவசாயம் செய்ய முடியாமல் போனதை எண்ணி வருத்தமும் கொள்கிறேன். ஒரு ஊட்டச்சத்து உள்ள பொருள் மலிவாக கிடைக்கும் போது தான் அனைத்து தரப்பினரும் அதனை பாகுபாடின்றி பயன் அடைய முடியும். அதற்கு அங்கு வேளாண்மை ஆராய்ச்சி நன்றாக இருக்க வேண்டியது மிக அவசியம். செயற்கை உரங்கள் அல்லாமல் இயற்கை விவசாயம் செய்து அதிக உற்பத்தி அடைவதன் மூலம் நம் நிலமும் நலம் பெறும், உடலும் நலம் பெறும். மண்புழு உரம் போன்றவற்றை அதிகரிக்க வேண்டும். இயற்கை முறையில் அதிக உற்பத்தி செய்ய வேளாண் அறிஞர்களின் பங்கு எங்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் இன்றியமையாதது தான்,

சொல்லப்போனால் எங்களைப் போன்று, வேளாண் படித்தவர்களும் அக்ரிக்கல்ச்சுரல் கன்சல்டன்சி (Agricultural consultancy) அதிகமாக தொடங்க வேண்டும்.

நல்ல வேளாண்மை மற்றும் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த மக்கள்… நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கங்கள்.

– சா.கவியரசன்

எழுதியவர் : (23-Mar-18, 4:11 am)
பார்வை : 147

சிறந்த கட்டுரைகள்

மேலே