முதுமொழிக் காஞ்சி 51

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மக்கட் பேற்றிற் பெறும்பே றில்லை. 1

- இல்லைப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் புதல்வரைப் பெறும் பேற்றிற் பெறும் பேறில்லை.

பதவுரை:

ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம் - மனிதர் எல்லாருக்கும்,

மக்கள் பேற்றின் - புத்திரரைப் பெறுவதைக் காட்டிலும்,

பெறும்பேறு - பெறத்தக்க பாக்கியம், இல்லை -வேறில்லை.

மக்கட்பேறு - புத்திர பாக்கியம். மக்கட்பேற்றின் – புத்திர பாக்கியம் போல என்றும் பொருள்படும். 'பெரும்பேறு' என்று பாடங் கொண்டால், பெரியபாக்கியம் என்பதுபொருள்.

மனிதர் பெறத்தக்க பாக்கியங்களில் புத்திர பாக்கியத்தைக் காட்டிலும் சிறந்தது வேறில்லை.

'பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற' - திருக்குறள்

மக்களாப் பிறக்கும் பிறவியைக் காட்டிலும் பெறும் பேறில்லை எனினும் அமையும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Mar-18, 11:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே