திருமதி ஒரு வெகுமதி

மனையறத்தை நல்லறமாய் மாற்றுகின்ற திறனோடு
துணையாகி துன்பத்தைத் துடைத்தென்றும் நின்றிடுவாள்
அணையாத விளக்காகி அன்பான நெஞ்சோடு
பனைபோலும் பலவிதமாய் பாசத்தைக் கொட்டிடுவாள்.

புகுந்தவீட்டின் பெருமைகளைப் பேணிநாளும் காத்திடவே
தகுந்தவற்றைச் செய்வதிலே தன்னையங்குப் பிணைத்திடுவாள்
பகுத்தறிந்து யாவினையும் பாங்குடனே செய்வதனால்
வகுத்தவழி எல்லாமும் வெற்றியென ஆகுமன்றோ ?

உறவுகளைப் பெருக்கிடவே உற்றதுணை ஆகிடுவாள்
வரவுதரும் விருந்தினரை வாய்மணக்க வைத்திடுவாள்
அறத்தோடு வாழ்கின்ற வழிபலவும் காட்டிடுவாள்
உரங்கொண்ட மனங்கொண்டு ஊழ்வினையை விரட்டிடுவாள்.

பெற்றெடுத்த பிள்ளைகளைப் புகழேணி ஏற்றிடவே
பற்றோடு என்றென்றும் பாசமழை பொழிந்திடுவாள்
சுற்றமெல்லாம் சுற்றிவந்து சுகங்கொண்டு வாழ்ந்திடவே
உற்றவொரு உறவாகி உரமாகி நின்றிடுவாள்.

பெரியோரை கண்போன்று காலமெல்லாம் காப்பதற்கே
உரிமையுடன் உற்றவற்றை ஊறின்றி காத்திடுவாள்
அரிதாகும் பெண்பிறப்பை அனைவருமே மதித்திடவே
பெரியனவாம் செயல்பலவும் பதறாமல் செய்திடுவாள் 1

கண்ணாக அவள்இருக்க குடும்பதும் சிறந்திருக்கும்
பண்பான பழக்கத்தால் பாசமழை பெய்திருக்கும்
எண்ணாத நலமெல்லாம் எழுந்தங்கு ஓடிவர
பெண்மணிதான் திருமதியாய் பெருமையுடன் வீற்றிருப்பாள்.
****************************************************************************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (26-Mar-18, 9:17 pm)
பார்வை : 109

மேலே