இருப்பினும் உன் உள்ளங்கை உறவில்

சற்று முன் மலர்ந்த அந்த
சிவப்பு ரோஜாவின் மென் இதழ்களை
போல்தான் உன் உள்ளங்கை இருந்தது !

காற்றில் அங்கும் இங்குமாய் பறந்து
வந்த அந்த பறவையின் ஒற்றை இறகை
போல இன்னும் மென்மையாய் தான் இருந்தது !

வெப்ப சூட்டில் சற்றே மிதமாய் இருந்த
என் தேகத்தின் சூடு இன்னும் அதிகரிக்க
தொடங்கியதை என்னால் எளிதாக உணர
முடிந்தது !

இன்னும் நெருக்கமாய் நிற்கிறேன் ஆயினும்
என் மூச்சுக்காற்றை வழக்கம்போல் விடுவது
எனக்கு சங்கடத்தை தந்தது !

சற்று மூச்சுக்காற்றின் வெப்ப சூடு
உன் மலர் தேகத்தில் சிறு சலனத்தை
தந்து விடுமோ என்ற அச்சம் வேறு !


உன் கூர்வாள் விழிகளை அவ்வப்போது மட்டுமே
தரிசிக்க முடிகிறது என்னால்
நான் இயல்பான நிலையில் இல்லை என்பது
என்னால் உணர முடிகிறது !

இருப்பினும் உன் செவ்விதழ்கள் தரும் இம்சை
இதயத்தின் துடிப்புகளை அதிகரித்து
பாடாய் படுத்துவதையும் எனக்குள் உணர்கிறேன் !

மென்மையாய் இன்னும் மென்மையாய்
என் உள்ளங்கையை பற்றிக்கொண்டே இருக்கும்
உன் உள்ளங்கையை எப்பொழுது விட்டு விடுவாயோ
எனும்
ஏக்கமும் !
தவிப்பும் தான்

என்னை பாடாய் படுத்தியது !

இருப்பினும் உன் உள்ளங்கை உறவில்
இன்னும் சிறிது நேரம் இருந்து இருக்கலாம் !

எழுதியவர் : கவிஞர் முபா (31-Mar-18, 11:16 am)
பார்வை : 142

மேலே