ஆஸ்திரேலியாவில் நான் காணும்இலையுதிர்க் கால இயற்கை காட்சி
இங்கு, இப்போது
நான் வசிக்கும் ஆஸ்திரேலியாவில்
கோடை போய், இலையுதிர்க்காலம்
பங்குனியில் துடங்கி சித்திரை வரை
இங்கு இலையுதிர்க் காலமே
போனது , காய்க்கும் கோடை வையல்
வந்தது கார்க் காற்று, சில துளி மழையும்
அங்கும் இங்கும் அப்போதைக்கப்போது,
இங்கு பல மரங்களில் இன்னும்
பசுமைப்பொங்கும் இலைகள் அதன்
கிளைகளில் பாடும் 'மாக்பீ','குகுபர'
மைனா, பஞ்சவர்ணக்கிளி,பச்சைக்கிளி,
இன்னும் நம்மவூரு சிட்டுக்குருவி என்று
பார்வைக்கும், செவிக்கும் விருந்து,
இன்று நான் ஓர் பூங்காவிற்கு சென்றேன்
அப்பப்பா, அங்கு நான் கண்ட இயற்கையின்
எழிலை என்னவென்று சொல்வேன் ,எப்படி
கவிதை வரிகளில் கொணர்வேனென்று
இன்னும் தடுமாறுகின்றேன் அப்படியோர் எழில்
கண்டேன் ஆங்கு; அங்கோர் சிறு தடாகம்
அதில் பூத்துகுலுங்கி இருந்தன தாமரைப்பூக்கள்,
தடாகத்தைச் சுற்றி மூங்கில் புதர்கள்
வீசிய காற்றில் அதிலிருந்து கிளம்பிய ஒலியோ
வேய்ங்குழல் கீதம்போல் காதில் ஒழிக்க,
அங்கு நடைப்பாதை இரு மருங்கும்
வெள்ளை,சிவப்பு தேவதாரு மரங்கள்
அதன் இலைகளெல்லாம் பச்சை நிறம் மாறி
சிவப்பும், ஊதா, மற்றும் இளம்பச்சை என
மலராய் மாறியதுபோல் கிளை கிளையாய்
மரமெல்லாம் வானவிலாய் காட்சி தர
ஆங்காங்கே சில மொட்டை மரங்கள்
கிளைகளில் அந்தி வேளையில்
சாம்பல் போர்த்ததோ என்று காட்சி தர,
அந்த அந்தி மயங்கும் வேளையில்
இது என்ன இந்திரன் தோட்டத்திலா நாம்
இருக்கின்றோம் என்று எனக்குள் ஓர் பிரமை
அப்பப்பா, என்னே இந்த விந்தைதரும் இயற்கை