மயானத்தில் என் வீடு

நடுப்பகல் மௌனம்
ரசித்திருந்தேன்
கட்டிய லுங்கியில்
இழைந்த நிறங்களை.
சட்டென தெரிந்தது
சுவரோரத்தில்
நெளியும் சிறு பூராண்.
சின்னஞ்சிறு.....
பூராண் குட்டியா?
பூராண் குஞ்சா?
நெளிந்தது வேக வேகமாக
குடையமுடியாத சுவர்.
சுவரில் ஏறி ஏறி
வழிந்து விழுந்தது.
வேறு பாதைகளும்
அறிவது தெரியாமல்
அங்குலம் நகர்ந்து
பின்வாங்கி மீண்டும்
மோதி மோதி பார்த்து
சோர்வுடன் கிடந்தது...
பளபளத்த கருஞ்சிவப்பில்
சின்னஞ்சிறு விரல்கள்...
ஒரு நூறு இருக்கும்...
விஷம். சொட்டுத்தீயில்
முக்கியது போல் இருக்கும்.
அவ்வளவுதான்...
திரும்பவும் நகர்ந்தது.
குழப்பமடைந்தேன்.
என்ன வேண்டும்?
யாரை தேடுகிறது?
அலைச்சல் என்பது
பசியின் அழுகையா?
தனிமை கிழிக்குமோ?
தாய்ப்பால் குடிக்குமோ?
உறவுகள் தேடுகிறதா?
சற்று நகர்ந்தாலும்
வெயில் கருக்கி விடுமே?
இருக்கிப்பிடிக்க அது
இறந்துவிட்டால்...
என்ன செய்து எப்படி
காக்கவியலும்?
எதுவோ மனதில்
பட்டுப்பட்டு குமுறியது.
ஏதேனும் செய்யவேண்டும்...
நச்சென்று அடித்ததில்
பழைய செருப்பில்
சற்று நீருடன்
செத்துக்கிடந்தது...
சவத்து மூதி
வேலைக்கு வக்கில்லை
பூராணுக்க புடுங்கிரியா...
தந்தையின் செருப்பில்
தந்தை தெரிந்தார்.

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Apr-18, 7:16 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : mayanathil en veedu
பார்வை : 52

மேலே