இமை மூடி அருகில் வா
இரவில் உடையவிழ்ந்து நீராடும் நிலவை
இரகசியமாய் காணத் துடிக்கும்
மின்மினிக் கண்கள் உன் கண்கள்....
இமை மூடி அருகில் வா...!
உன் பார்வையின் இம்சையில்
என் கருவறை கனத்திடும்.....
எரிமலை தேகத்தை பனியுருக வைத்திடும்
சூத்திரம் கற்றது உன் இதழ்கள்...
பூவிதழினுள் ஊறியத் தேனை
இடமாற்ற வல்லது உன் முத்தம்....
எங்கேனும் இதழை மறைத்து வா....!
இதயம் வேண்டுகிறது சைவக் காதலை...
துளைவிழா மூங்கிலின் உள்ளே
பிறக்கத் துடிக்கும்
இராகம் உன் இதயம்...
மோகனத்தை துறந்து வா....!
இணைந்த இருவரிடை
மௌனராகம் இசைக்கட்டும்....
காத்திருக்கும் ஒவ்வொரு கணமும்
ஓராயிரம் யுகம் கடக்கும்
தவிப்பூட்டும் உன் காதல்.....
எட்டியே தொடர்ந்து வா....!
தொடரட்டும் இந்த இன்ப வேதனை....
வான்மழை நனைத்த மண்ணிடை
விரசாய் முளையிடத் தவிக்கும்
விதையின் உந்தம் உன் காமம் .....
விதையுறக்கம் பெற்று வா....!
காவியம் படைக்க சாதகம் வரும்வரை...
கவிதாயினி அமுதா பொற்கொடி