சலனம்
வாயு வெப்பத்தில் சலனம்
பேய் மழை பொழிந்தது...
குளிர் தெப்பத்தில் சலனம்
நீர்த் திவலை சிலிர்த்தது...
புவி மையத்தில் சலனம்
எரிமலை வெடித்தது
பழமையின் சலனம்
புதுமைக்கு வரவேற்பு தந்தது
மடமையின் சலனம்
பகுத்தறிவுக்கு வழி சமைத்தது
மனிதநேயத்தின் சலனம்
இறைமைக்கு சமாதி கட்டியது
மன திட்பத்தில் சலனம்
நம்பிக்கை பிடி தளர்ந்தது
மதி நுட்பத்தில் சலனம்
காரியத்தின் வீரியம்
தூர்ந்தது
இள இட்டத்தில் சலனம்
காதலெனும் உணர் துளிர்த்தது
கடமையில் சலனம்
தகுதியை எட்டி உதைத்தது
கண்ணியத்தில் சலனம்
களங்கமெனும் இருள் சூழ்ந்தது
கட்டுப்பாட்டில் சலனம்
பாதைகள் தடுமாறி ஓடியது
சலனக் கடல் அலையில்
நீந்துவதே வாழ்க்கைப் படகு
சலனமற்ற நித்திய அமைதி
கல்லறைக்குள் இறுதி உறைவு.....!
கவிதாயினி அமுதா பொற்கொடி
Image may contain: 1 person, close-up