கனவசைத்த உன் கொடி

கனவசைத்த உன் கொடி
*********************************

நீ செல்லாத நாட்களில் எல்லாம்
குறித்த நேரத்தில் வருவதுமில்லை
போவதுமில்லை
உன் வழித்தட பேருந்துகள்

*

கோடையில் மழை வந்தால்
வீதியே உன் வீடு பார்த்து கை எடுக்கிறது
உன் வீட்டுக்கு பின்னால்
கோவில் இருப்பது இருக்கட்டும்
கோவிலுக்கு முன்னால் உன் வீடு
இருப்பது தானே நிஜம்

*

மேகம் மறைக்க மறைக்க தெரிவதுதான்
நிலாவுக்கு அழகு
கோலம் மறைக்க மறைக்க தெரிவதுதான்
உன் விரல்களுக்கு அழகு

*

நான் பந்து விளையாடிக் கொண்டிருப்பேன்
நீ நீர் சேந்திக் கொண்டிருப்பாய்
எல்லாரும் மாறி மாறி நம்மை பார்த்துக்
கொண்டிருப்பார்கள்

*

நேரம் காலம் தெரியாமல்
முத்தம் கேட்கிறேன் என்கிறாய்
சரி நேரம் காலம் தெரிந்தே கேட்கிறேன்
முத்தம் தா....

*

தேநீர் தயாரிக்கிறாயா
தேவதை தயாரிக்கிறாயா
சமையலறைக்குள்ளிருந்து வரும்
புகையில் எல்லாம் சிறகுகள்

*

குளிக்க வந்தாலும் சரி நீ
துவைக்க வந்தாலும் சரி
வளையும் நியதிகளோடு
நதி செய்கிறது என் பாறை

*

நீ சாமி கும்பிட்டு செல்லும் போது
எல்லாரும் வேண்டுவது ஒன்று தான்
கடவுளை விட்டு செல்

*

சிரித்து முடிக்கையில் எல்லாம்
சிலிர்த்து மடக்குகிறது
உதட்டு மேற்பரப்பில் உருட்டும் பூனைமுடி

*

நெற்றி விழும் முடியை தூக்கி தூக்கி
விட்டு கொள்கிறாய்
நீ நிற்கும் வரிசைக்கே
வரம் கொடுக்க கடவுளின் சமிக்கை அது

*

முதலில் கை அசைத்தது
பிறகு கால் அசைத்தது
அதன் பிறகு உடலைக் கூட அசைத்தது
எல்லாரும் காற்றசைத்த துணி என்றார்கள்
நான் தான் கனவசைத்த உன் கொடி என்றேன்

*

மலை எல்லாம் உன் நகல்
மேகத்தை பார்....நீண்டு மடங்கும்
என் சிகை

*

நீ பொம்மையை
பார்த்துக் கொண்டிருந்தாய்....
துணிக்கடையில் எல்லாரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்

*

ஈரம் சொட்ட தலை துவட்டிக் கொண்டிருந்தாய்
தாகம் சொட்ட காகம் கரைந்து கொண்டிருந்தது
நிமிர்ந்து பார்க்கையில் காகமா கத்தியிருக்கும்
சொல் இப்படிக்கு எதிர் வீட்டு நான்

*

நீ சைக்கிள் ஓட்டி கத்துக் கொண்ட போது
என் மேல் மூன்று முறை மோதியிருக்கிறாய்
டூ வீலர் ஓட்டிய போது 4 முறை
போர் வீலர் ஓட்டிய போது 2 முறை
நடந்து போன போது ஒரே ஒரு முறை தான்
அப்போது தான் இதயம் நின்றது எனக்கு

*


கவிஜி

எழுதியவர் : கவிஜி (17-Apr-18, 1:31 pm)
பார்வை : 251

மேலே