தலையாயார் தாம்உய்யக் கொண்டு நெடியார் துறப்பர் – நாலடியார் 53

நேரிசை வெண்பா

இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம்உய்யக் கொண்டு. 53

- துறவு, நாலடியார்

பொருளுரை:

இல்வாழ்வு, இளமை, எழுச்சி, அழகு, உயர்சொல், பொருள், வலிமை என்று இப்பேறுகள் எல்லாம் மெல்ல மெல்ல நிலையாமற் போதலை அறிந்து பெரியோர்கள் தாம் உய்யுங் கருத்துக்கொண்டு காலம் நீட்டியாதவராய் உடனே இருவகைப் பற்றுந் துறப்பர்.

கருத்து:

நிலையாமை உணர்ந்து துறவுள்ளங் கொள்வோரே துன்பங்களினின்றும் பிழைப்பவர்.

விளக்கம்:

எழில் இளமையின் கொழுந்து; அஃதாவது அதன் வளர்ச்சி நிலையாகிய தோற்றப்பொலிவு;

வனப்பு - உறுப்புக்களின் திருந்திய அமைப்பு;

மீக்கூற்றம் - மேம்பாடான சொல்; என்றது, தன் சொல் உலகத்திற் செல்லுதலை.

வலி - துணைவலி முதலியன. ஒவ்வொன்றாக நிலையாமற் போதலின் ‘மெல்ல நிலையாமை' யென்றார்.

தலையாயார் நிலையாமைக் கண்டு தாம் உய்யக் கொண்டு நெடியாராய்த் துறப்பர் என்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-18, 6:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37
மேலே