நீதி வேண்டும்

உன் பொன் பாதங்கள்
பாதை வந்த போது
வெண்மேகங்களை வீதிக்கு
கொண்டு வந்தேன்

துள்ளியாடி நீ மகிழும் போது
தூரம் நின்று
பார்த்து இரசித்தேன்

தேவதையாக என் இல்லத்தில்
நீ வந்து பிறந்தபோது
தெய்வத்தை வணங்கினேன்- வணங்கிய
தெய்வம் முன்பே
உன் வாழ்க்கை முடிந்தது ஏன்?
கதறிக்கொண்டு நீ அழுதது
கடவுளுக்கு கேட்கவில்லையா?

எதையோ கேட்க கடவுளிடம்
நீ சென்றாய்
கேட்டதை கொடுக்க முடியாத கடவுள்
இனி எதையும்
நீ கேட்க வேண்டாமென்ற நிலைக்கு
உன்னை கொண்டு சென்றுவிட்டதே

அண்ணனா?
தம்பியா?
அன்பானவனா? என
நீ அறியும் முன்னரே
அவர்களின் ஆசை
உன்னை அழித்து விட்டதே....

விளையாட ஓடிய உன்னை
வீதியோரம் தேடினேன்
வெகுநேரம் தேடினேன்
எங்கும் காணவில்லையென்று
கடவுளிடம் சென்றால்--- "அது"
அவள் இங்கே கிடக்கிறாள் என்றது


காலை வெயிலின் கண்பட்ட
வியர்வை துளிகள்
உன் கண்ணோரம் வந்தால்--- விழும்
துளிகளை என் விரல்களில் பற்றுவேன்...
இன்று
நீ இரத்த கறையில்
கிடக்கும் காட்சிகளைக் கண்டு
இரத்தம் கொதிக்கிறேன்....

இந்நிலையில் உன்னை தள்ளியவர்களை
தானே வீழ்த்தலாமென்று
ஆயுதம் ஏந்தினால்-- அதனை
கொலை என்று சட்டம் சொல்கிறது...

சாகடிக்கப்பட்ட உன்னை
இனி சட்டம் கொடுக்குமா?
இல்லை
உதிரத்தில் உறங்க வைத்த அவர்களுக்கு
உலகம் தண்டனையை கொடுக்குமா?...

வணங்கிய தெய்வமே
கல்லாக நின்றபோது
வழக்கிற்கு சென்றுள்ளேன்-- இனியோரு
மகளை இனிமேல்
மண்ணுக்கு உரமளிக்ககூடாதென்று...


(தண்டனைகள் அதிகமானால்தால் குற்றங்கள் குறையும். குற்றங்கள் அறவே ஒழிய அனைவரும் குரல் கொடுப்போம். எந்த ஒரு பூமகளையும் பூமிக்கு இறையாக்க வேண்டாம்.)

நிரந்தரமாக நீதி கேட்போம்...!
நிரந்தமாக நீதி கேட்கிறோம்...!!
நிரந்தரமாக நீதி வேண்டும்...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (21-Apr-18, 1:33 pm)
Tanglish : neethi vENtum
பார்வை : 332

மேலே