காற்றுக் குழந்தை

காற்றுக் குழந்தை
===================
மூங்கில் முளைப்பதற்கு
முன்னதாகவே பிறந்திருந்தது
நாம் புல்லாங்குழல் செய்வோம்
என்று அறிந்திராத காற்று.
**
நம் சங்கீத ஸ்வரங்களுக்கு
முன்னதாகவே அவை
பாடியிருந்தன பாட்டு.
*
தென்றலாய் புயலாய் பல்வேறு
வடிவங்களில் பெயர்மாறி ஓரிடத்தில்
நில்லாதலைந்து திரியும்..
*
ஒரு கைதியைப்போல
அடைந்துகிடாக்காத காற்றை
வாடகைக்கு வாங்கிய நாம்
சொந்தமாக வைத்துக்கொள்ள
நினைக்கும் சுயநல பேராசைக்கு அது
அடிபணியாமல் தன்போக்கில்
தன் சுதந்திர பாதையில் போய்விட முடிவில்
நாம் மரணத்தின் வண்டியில் ஏறி
வேற்றுலகு செல்கிறோம்
*
கல்யாணம் கட்டிக் கைகழுவும்
காரியக்காரனையும்
காற்று கைகழுவின் அவன்
வாழ்தலில் நின்று
நிராகரிக்கப்பட்டவனாகிறான்,..
***
மூச்சுக்காக மூச்சுவிடாமல்
சண்டையிட்டு மூச்சைவிட்டுவிடும்
மூர்க்கத்தனத்துக்கு மனிதமென்று
பெயர்சூடிக்கொண்டு வாழவந்துவிடும் நாம்
காற்றும் காற்றும் சண்டையிட்டு
பூமியைவிட்டுப் போய்விட்டால்
காலமானவர்கள் என்று காலத்துக்கும்
அழியாத பேர்சூடிக்கொள்வோம் என்பதை
மறந்துவிடுகிறோம்.
***
காடுகளாய் கிடந்த பூமியில்
கலங்கமற்றுத் திரிந்த காற்றை
நாம் வளர வளர அழியவிட்டக் காடுகளால்
மரணம் கொள்ளச் செய்ய முயல்வதால்
தன் வெப்பத் தோழனை விட்டு
நம்மைக் கொல்கிறது காற்று..
***
மனிதனின் மரணத்தை சூறாவளியின்
கைகொண்டு தீர்மானிக்கும் காற்று தன்
புனிதத்தை மீளப்பெறும் காலம்வரை
தன் இலட்சியத்தை கைவிடுவதில்லை.
என்பதால் காற்றின் தோள்களில்
ஒரு நண்பனாய் கைபோட்டவண்ணம்
சின்னச்சின்ன காடுகளை பரிசளிப்போம்
==
காற்றையும் ஒரு குழந்தையாய் எண்ணி
அன்புசெய்வோம்..காலத்தால்
வளரும் குழந்தை நமக்குத் துணையாவதுபோல்
காற்றும் நமக்குத் துணையாகும்...
**
மெய்யன் நடராஜ் ..

எழுதியவர் : மையன் நடராஜ் (28-Apr-18, 2:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 125

மேலே