துயிலில் தொலைந்த துயில்

எழுதிய அசதியில்
உறங்கிப்போனேன்
தாளின் மீதே...
எவரோ கசக்கி எறிய
சிக்கிக்கொண்டேன்.
கோணல் கோணலாய்
புதிர் விடுத்த புதிராய்
தாளின் பாதைகள்
நீண்டு முடிந்து நீண்டன.
சொற்கள் ஒளிர்ந்து
உயிர் கிளம்பி ஓடின.
முன் வரியில் நின்றவை
பின் வரியில் தாவின.
ஒன்றன் அர்த்தம்
வேறொன்றில் செருகின.
பிடித்தும் இழுத்தும்
வரிசைப்படுத்த முயன்றும்
நிற்பது போல் நின்று
கால் வழி புகுந்து
முன் நின்ற சொற்களை
கடித்து விரட்டின.
எழுதிய கவிதை
தன்னைப்பிளந்தும்
தனக்குள் பரவியும்
எழுதிக்கொண்டே இருந்தது.
விழித்துப்பார்க்கையில்
கவிதையின் கனவில்
நான் உறங்கியிருந்தேன்.

எழுதியவர் : ஸ்பரிசன் (2-May-18, 6:30 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 292

மேலே