மனசுக்குள் பெய்யும் மழை நூல் ஆசிரியர் கவிஞர் திருமலை சோமு நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

மனசுக்குள் பெய்யும் மழை!


நூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு!



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம், காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202.
பக்கம் : 96, விலை : ரூ. 100

******

‘மனசுக்குள் பெய்யும் மழை’’’ நூலின் பெயரே கவித்துவமாக உள்ளது. நூலைப் படிக்கும் வாசகர்கள் மனசுக்குள் கவிமழை பெய்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் திருமலை சோமு அவர்கள் தினமணி நாளிதழின் உதவி ஆசிரியராகவும், தினமணி கவிதைமணி இணையத்தின் பொறுப்பாசிரியராகவும் இருந்து வருகிறார். மூன்று ஆண்டுகளாக வாராவாரம் தலைப்பு தந்து கவிஞர்கள் அனுப்பும் கவிதைகளை இணையத்தில் ஏற்றி வருகிறார். வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் எழுதுகின்றனர். தமிழ்ப்பணி செய்து வருவதுடன் கவிதைப் பணியும் செய்துள்ளார்.


வானிலிருந்து வரும் அமுதம் மழை. உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் வழியில் வான்சிறப்பு பாடி உள்ளார். மழை குறித்து ஆய்வு நடத்தி பல்வேறு கோணங்களில் கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். இத்தகவலை மதுரைக்கு நேரில் வந்து உலகத் தமிழ்ச்சங்கத்திற்கு அரங்கேற்றத்திற்கு வழங்கிச் சென்றார். பழகுவதர்கு மிகவும் இனிமையானவர், பண்பாளர், பத்திரிக்கையாளர் என்ற எந்தவித கர்வமும் இல்லாத எளிமையாளர்.


இனிய நண்பர் பதிப்பாளர் கவிஞர் வதிலை பிரபாவின் பதிப்புரை, முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், தேனிசை தென்றல் தேவா, திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.கே. ராசராசா, பாடலாசிரியர் சீவன் மயில் ஆகியோரின் அணிந்துரையும் நூலிற்கு அழகு சேர்த்து உள்ளன.


மழையையும் மனித மனங்களையும் நேசிக்கும் நெஞ்சங்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு. தூறல், மழை, சாரல் என்று மழை தொடர்பான தலைப்புகள் நன்று.


குடை!

வானம் பூமிக்கு அருளிய கொடை
மழை! மனிதா நடுவில் ஏன் பிடிக்கணும் குடை!


குடையை மழைக்குக் காட்டும் கருப்புக்கொடி என்பார் கவிப்பேரரசு வைரமுத்து. அவரது வழியில் இவரும் குடை வேண்டாம் என்கிறார். குடையின்றி மழையில் நனைவதும் ஒரு சுகம் தான்.


கோடை மழை

மொட்டை மாடியில்

வெயிலில் காயும்
பூந்தொட்டிக்கு

வரமென வந்தது

கோடை மழை!


காய்ந்து வறண்டு இருந்த பூந்தொட்டியின் மீது மழை விழுந்ததும் துளிர்த்து விடும் உயிர் வந்து விடும். அதனைக் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார்.


ஓட்டுக்குள் ஒழுகும் மழை!

மழை எனக்குள் எரிச்சலூட்டவும் செய்கிறது
ஓர் இரவில்

என் வீட்டு ஓட்டுக்குள்
ஒழுகும் போது மட்டும்!


ஒரே மழை பலருக்கு மகிழ்வையும் சிலருக்கு எரிச்சலையும் தந்ததை கவிதையாக்கியது சிறப்பு.


பாவம்! எல்லா பாவங்களையும் தொலைக்க நதியில் நீராடச் சொன்னார்கள்! நதிகளைத் தொலைத்த பாவத்தை எப்படித் தீர்ப்பது!


ஆற்றுமணல்களைக் கொள்ளையடித்து, ஆறுகளை மலடாக்கி, ஆறு செல்லும் வழிகளையும் அடைத்து, ஆறுகளையே இழந்து வரும் அவலத்தை வருங்கால சமுதாயத்திற்கு வறட்சியை மட்டுமே மிச்சமாக்கும் நாட்டுநடப்பை உணர்த்தியது சிறப்பு.


வாழ்தல் பெரிது!


வானம் பெரிது, நிலம் பெரிது, கடல் பெரிது –

இந்த சிறுமனம் படைத்த மானுடர்களுக்கிடையில்

வாழ்தலும் பெரிது!


உண்மை தான் உயிரினங்களில் உயர்ந்த இனம் மனித இனம். ஆனால் அப்படிப்பட்ட மனிதர்கள் சிறுமனம் படைத்து விலங்கிலும் கீழாக மோதி வீழ்வதை நினைத்து வடித்த கவிதை நன்று.


மனசுக்குள் பெய்யும் மழை! என்ற நூலின் தலைப்பிலான நெடிய கவிதை நன்று. 17 பக்கங்கள் உள்ளன.


சன்னல் ஓர் தூவானத்தை

ரசிக்கவும்
தோட்டத்து இலைகளில்

தேங்கிய துளிகளில்
நனையவும்

யாருக்கும் இப்போது நேரமில்லை!


உண்மைதான்! இயந்திரமயமான இன்றைய நவீன உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். இயற்கையை ரசிக்க மழையை ரசிக்க நேரமும் பொறுமையும் இருப்பதில்லை.


இடியின் ஓசை

காதுகளில்

கேட்கும் போதெல்லாம்
காகித்த்தில் கப்பல் செய்து

காத்திருந்த்து ஒரு காலம்!


காகிதக் கப்பல் செய்து விட்டு மழையை ரசித்த மலரும் நினைவுகளை வாசகர்களுக்க் மலர்வித்து வெற்றி பெறுகின்றார். இப்படிக்கு மழைநேசன்! என்று நெடிய கவிதையை முடித்துள்ளார். மழைநேசனாக இருந்தால் தான் மழை பற்றி இத்தனை கவிதைகள் வடிக்க முடியும்.


காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை. காதலைப் பாடாதவர்கள் கவிஞரே இல்லை என்பதற்கு ஏற்ப கவிஞர் திருமலை சோமு அவர்களும் பாடி உள்ளார்.


நல்லதோர் வீணை!


பின் ஏனோ!

பேச்சில் வழக்கில்

பள்ளிப்பாட ஏட்டில்
திரை இசைப் பாட்டில்

தமிழர் தம் பெயரில் என
அனைத்திலும் மெல்லத் தமிழினி சாகும் வகை செய்தோம்.
நல்லதோர் தமிழ் செய்து – அதை

நலங்கெட
நாமும்

வீதியில் விடலாகுமோ!


எங்கும் தமிங்கிலம் எதிலும் தமிங்கிலம் என்ற இந்நிலை தொடர்ந்தால் தமிழ் அழிந்து விடும் என்று எச்சரிக்கை செய்த்து சிறப்பு.


முற்செடிகளாய் உன் நினைவு!


முட்செடிகளாய் முளைத்து

வெற்றிடங்களை நிரப்பி
என் கனவுகளையும்

நேரங்களையும்
குத்தி குத்தி ரணமாக்குகிறது

உன் நினைவு !


நினைவுகள் அழிவதில்லை. இறுதி மூச்சு உள்ளவரை மூளையின் ஒரு மூலையில் நினைவுகள் நிலைத்தி இருக்கும் என்பதை கவிதையாய் உணர்த்தியது சிறப்பு!


திருக்குறளே தேசிய நூல்!


காலத்துக்கு அப்பாலும்

நிலை பெற்றிருக்கும்
திருக்குறளே தேசிய நூல்

மனித குலத்துக்கான
மேன்மைமிகு நெறிகளை

ஒன்றரை அடி வரிகளுக்குள்
வார்த்து தொகுத்த

தெய்வப் புலவரின்

திருக்குறளே தேசிய நூல்!


நடுவணரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இன்னும் சிந்தித்து வருவது வேதனை!


நூலாசிரியர் கவிஞர் திருமலை சோமு அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, மழைச்சாரல் படங்கள் என அனைத்தும் மிக நேர்த்தி. பதிப்பாளர் கவிஞர் வதிலை பிரபா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (13-May-18, 4:37 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 820

மேலே