159 கற்பிலார் சொல்லும் கள்வர் சொல் ஒக்கும் – பரத்தமை 3

கலி விருத்தம்

(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அன்னிய(ர்) எம்இயை(பு) அன்றிச் சேர்ந்தனர்
என்னமின் னிடையவர் இயம்பல் சோரர்கள்
பொன்னையாம் வவ்விலேம் பொருள்வந் தெங்களை
முன்னைவவ் வியதென மொழித லொக்குமே. 3

– பரத்தமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மின்னல் போன்ற இடையை உடைய பெண்கள் அயலார் எங்களுடைய இணக்கமில்லாமல் எம்மைச் சேர்ந்துவிட்டனர் என்று சொல்வது, கள்வர்கள் பொன்பொருளை நாங்கள் களவு செய்து அபகரிக்கவில்லை. அப்பொருள்களே எங்களை வலிய முன் வந்து பற்றிக் கொண்டது என்று சொல்வதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

அன்னியர் - அயலார். இயைபு - இணக்கம்.
சோரர் - கள்வர். வவ்வியது - பற்றியது.

நிகழ் காலத்தில் பத்திரிகைகளில் பல பெண்கள் தங்களுக்கு அறிமுகமான ஆண்கள் பல நாட்கள் முதல் பல மாதங்கள் எங்கள் விருப்பமின்றி பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்று செய்திகள் வருவதையும், புகார் செய்வதையும் பார்க்கிறோம். தீவினை வருமுன் காப்பதும், எச்சரிக்கையாய் இருப்பதும் பெண்களுக்கு அவசியம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-18, 8:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே