நிலவு மனிதன் - 6 ரோடியோ இன் கார்ப்

நிலவு மனிதன்

6

ரோடியோ இன் கார்ப்

'சவப் பெட்டி! ஆமா, சவப்பெட்டியேதான். அந்த விடுகதைக்கு பதில்! கண்டுபுடிச்சவனும் வச்சிருக்க மாட்டான். வாங்குனவனும் யூஸ் பண்ண மாட்டான். யூஸ் பண்றவன் டெட் பாடிங்குறதால அவனுக்கும் ஒன்னும் தெரியாது.' என சித்தார்த் தன் மனதில் நினைத்துக் கொண்டே அந்த ஜாகுவார் காரின் பின்புறம் அமர்ந்திருந்தான். இம்முறை அந்த காரின் முன்புறம் மற்றும் பக்கவாட்டின் மூலம் நன்றாக வெளியே பார்க்க முடிந்தது. வேதாந்த் காரை ஓட்ட, ஈ.சி.ஆர் ரோட்டில் அந்த கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.

நேற்று அவனுக்கு நடந்த பல நிகழ்வுகள் அவன் மூளையை குழப்பிக் கொண்டிருந்தன. அதுவும் அந்த இருபது லட்சம்..! அவன் வாழ்நாளில் அது போன்ற தொகை அவனுக்கு இனிமேல் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அவனுக்கும் அந்த பணத்தின் மீது ஒரு ஆசை பிறந்தது. அதற்காகவே அவர்களிடம் வேலையில் சேர அவன் மூளை உந்தியது.

இருந்தாலும் 'ஏன் நேத்து மயக்கம் வந்துச்சு? யார் இவனுங்க? நெறைய பணம் கொடுக்குறானுங்க. அதே நேரம் எல்லாத்தையும் ரொம்ப ரகசியமா செய்றானுங்க? இவனுங்கள நம்புறதா வேணாமா?' போன்ற கேள்விகள் எழுந்தன.

நேற்றிரவே அவனை வேதாந்த் மொபைலில் தொடர்பு கொண்டு "மிஸ்டர் சித்தார்த், நாளைக்கு காலைல எட்டு மணிக்கு எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் வந்து வெயிட் பண்ணுங்க. நான் வந்து உங்கள பிக்கப் பண்ணிக்கிறேன்." என்றார்.

"சார், எனக்கு என்ன ஆச்சு? நான் எப்படி அந்த பார்க்குக்கு வந்தன்?" என அவன் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்கும் பொழுதே வேதாந்த் இடைமறித்து "ஒரு நிமிஷம் மிஸ்டர் சித்தார்த் . கண்டிப்பா உங்க கேள்வி எல்லாத்துக்கும் நாளைக்கு நான் நிச்சயமா பதில் சொல்றன். என்னா நாம நாளைக்கு நம்ம ஆபீஸ்கு போக போறோம். அதுவரைக்கும் உங்க மனச போட்டு குழப்பிக்காம நிம்மதியா படுத்து தூங்குங்க. நாளைக்கு காலைல மீட் பண்ணுவோம். பாய். " என கூறினார். சித்தார்த் 'சரி சார்' என கூறியதும் அந்த தொடர்பு துண்டானது.

இப்பொழுது,

மாயாஜால் தியேட்டர் தாண்டி அந்த ஜாகுவார் சென்று கொண்டிருந்தது. "சார், பேசலாமா?".

வேதாந்த் திரும்பி பார்க்காமல் அவனிடம் பேசினார். "சொல்லுங்க சித்தார்த்."

"சார். எனக்கு நேத்து ஏன் மயக்கம் வந்துச்சு?"

"ஓஹ் அதுவா. நாங்க முன்னாடியே ஒரு வாசமான மருந்த அந்த ரூம்ல ஸ்ப்ரெ பண்ணிட்டோம். அந்த மருந்தால கரெக்டா கால் மணி நேரம் கழிச்சு மயக்கம் வரும். எங்க பாஸ் அவர் வீடு எங்க இருக்குனு யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நெனைப்பாரு. அதனாலதான் உங்கள மயக்கி அங்க இருந்து தூக்கிட்டுவந்து பார்க்ல தனியா உக்கார வச்சோம். நான்தான் உங்க ஷர்ட்ல அந்த டெபிட் கார்ட வச்சது. அப்புறம் என்னோட போன்ல இருந்து பின் நம்பர உங்களுக்கு வாட்ஸப் பண்ணன்." என்றார் வேதாந்த்.

"அப்ப வெல்கம்னு எஸ்.எம்.எஸ் அனுப்புனது?"

"அது எங்க பாஸ் ஜான்தான். அவர்கிட்டதான் நான் பி.ஏ வா வொர்க் பண்றன். அவர்தான் உங்களுக்கு அட்வான்ஸ் கொடுக்க சொன்னார். பை தி பை எங்க நம்பர்ஸ உங்க மொபைல சேவ் பண்ணிகோங்க." என்றான்.

"என்னது இவ்வளவு பெரிய பணம் அட்வான்ஸாஹ்....!" என மனதில் ஒருவித பூரிப்படைந்துக் கொண்டே உரையாடலை தொடர்ந்தான்.

"ஓகே. உங்க பாஸ் மிஸ்டர் ஜான் நேர்ல வரமாட்டாரா? என் ஸ்பீக்கர்லேயே பேசுனாரு?"

"அப்படிலாம் ஒண்ணுமில்ல. அந்த ரூம்ல மயக்க மருந்து இருந்ததாலதான் , அவரு வரல. மத்தபடி இன்னிக்கி ஆபீஸ்ல நீங்க அவரத்தான் பர்ஸ்ட் மீட் பண்ண போறீங்க."

"ஓஹ்...ஓகே. இப்ப நாம எங்க போறோம்?"

"இப்ப நாம முட்டுக்காட்டுல இருக்குற என்.எம்.டி.இக்கு போறோம். அங்க தான் நம்ம ஆபீஸ் இருக்கு."

சிறிது நேரத்தில் அந்த கார் முட்டுக்காட்டில் ஒரு வளாகத்திற்குள் நுழைந்தது. அங்கே ரோடியோ இன் கார்ப் (RODIO in Corp) என ஆங்கிலத்தில் அழகாக ஒரு நவீன பெயர் பலகை இருந்தது. அங்கு இருந்த ஒரு பார்க்கிங்கில் கார் போய் நின்றது. வேதாந்த் "பாலோ மீ." என கூறிவிட்டு வெளியே இறங்கி நடக்க ஆரம்பித்தான். சித்தார்த்தும் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்த படியே பின் தொடர்ந்தான். அங்கிருந்த அனைவரும் டீசன்டாக கோட் சூட் அணிந்திருந்தனர். பெண்கள் உள்பட. அனைவரது கழுத்திலும் ரோடியோ என டிசைனாக அச்சிடப்பட்ட ஒரு ஐ.டி கார்டு தொங்கியது.

அந்த பார்க்கிங்கில் இருந்து நடக்கையில் சற்று தூரத்தில் ஒரு எட்டு மாடி கட்டிடம் தென்பட்டது. வெளியில் இருந்து பார்க்கும்பொழுதே அதன் அழகும், ஆடம்பரமும் பளிச்சிட்டது. பெரிய பெரிய கண்ணாடிகாளால் அதன் சுவர் கட்டப்பட்டு இருந்தது. அதன் மேலேயும் ரோடியோ என பிரம்மாண்டமாக ஒரு பெயர்பலகை மின்விளக்குகளால் வைக்கப்பட்டு இருந்தது. சித்தார்த் மேல் நோக்கி அதைக்கண்டு வியப்படைந்தான்.

நுழைவாயிலை அடைந்ததும் வேதாந்த் தனது கோட் பாக்கெட்டில் இருந்து ஐ.டி கார்டை அந்த பச்சை நிற சென்சார் முன்பு காட்ட அந்த கண்ணாடி கதவு 'வெல்கம் மிஸ்டர் வேதாந்த்' என கூறி அவர்கள் இருவருக்கும் வழி விட்டது. நேராக அங்கிருந்த லிப்டை நோக்கி வேதாந்த் நடக்க அந்த இடத்தை சித்தார்த் நடந்துக்கொண்டே நோட்டமிட்டான்.

பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் போல பெரிய வராண்டா. எங்கும் ஆடம்பரம். சுவர்களில் கலைநயம். பளிங்கு கற்களால் மெருகூட்டப்பட்ட தரை. குளிர்காலத்தை நினைவுபடுத்தும் ஏ.சி காற்று. அங்கு வேலை செய்பவர்கள் பரபரப்பாக அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே சற்று பெரிய டிஜிட்டல் திரைகள். அதில் ரோடியோ, ரோடியோ என அந்த பெயர் மாறி மாறி ஸ்லைட் ஷோவில் வந்தது. லிப்ட் இப்பொழுது ஆறாவது தளத்தில் நின்றது.

இறங்கி நேராக இருவரும் நடந்து போகையில் ஒரு அறை தென்பட்டது. மூடியிருந்த அந்த கதவில் ப்ரொபசர் ஜான்சன் பெக் - சி.இ.ஓ (prof. Johnson peck – CEO) என்ற பெயர் பலகை இருந்தது. வேதாந்த் அந்த கதவை இரண்டு தட்டு தட்டிவிட்டு "ஓகே. உள்ள போய் மீட் பண்ணுங்க சித்தார்த். உங்க வாழ்க்கைல இது ஒரு பெரிய திருப்பமா அமையும். கங்கிராட்ஸ்." என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் வேதாந்த்.

சித்தார்த் அந்த கதவை மெதுவாக திறந்தான். "மே ஐ கம் இன் சார்?"

"எஸ்..."

"அதன் பின்பு என்ன ஆனது பாட்டி" என்று லாமு ஆர்வத்துடன் கேட்டாள்.

அதற்கு நுவாழி "பதுங்கியிருந்த அந்த ரிமுக்கள் இந்தமுறை வேறுவழியாக மறுபடியும் பூமியை நோக்கி வந்தன லாமு. ஆனால் இரண்டாவது முறையாக வெற்றி நமது வீரர்களுக்கே கிடைத்தது." என்றாள்.

"பிறகு அந்த ரிமுக்கள் பயந்து ஓடி விட்டார்களா? அத்துடன் முதல் சின்டா யுத்தம் முடிவடைந்ததா பாட்டி?" என்றான் கசன்.

"இல்லை. வரலாற்றின் படி இந்த யுத்தத்தில் மொத்தம் மூன்று படையெடுப்புகள். உனது தாத்தா நுராப்பின் அதிபயங்கர வீரமும், அதீத சாதுரியமும் இந்த மூன்றாம் படையெடுப்பில்தான் வெளிப்பட்டது."

உடனே குழந்தைகள் "தாத்தாவை வீரத்தை பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளோம். கூறுங்கள் பாட்டி" என்றன.

"நிச்சயமாக என் அன்பு குழந்தைகளே. ஆனால் நாளைக்கு. நேரம் கடந்துவிட்டதல்லவா. அனைவரும் வீட்டிற்க்கு செல்லுங்கள்."

இதைகேட்டதும் அந்த குழந்தைகளுக்கு சிறு ஏமாற்றம் அடைந்தாலும். நாளைக்கு தங்கள் பாட்டி முழு கதையும் கூறிவிடுவார்கள் என்ற மகிழ்ச்சியில் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். நுவாழி கசனையும், லாமுவையும் அழைத்துக்கொண்டு மிலாகா அரண்மணைக்குள் சென்றார். அப்பொழுது அக்கணம் அங்கிருந்த மின் விளக்குகள் சில நொடிகளுக்கு கண் சிமுட்டுவது போல விட்டு விட்டு எரிந்தன. நுவாழிக்கு திடீரென ஒரு பயங்கரமான உணர்வு தோன்றியது. உடனே அரண்மனைக்குள் அவசர அவசரமாக சென்றார். தனது கைக்கருவியில் இருந்து டேஹரியை அழைத்து "உடனே அவசர கூட்டம் ஏற்பாடு செய்." என்றார்.

-தொடரும்.

எழுதியவர் : அகரன் (16-May-18, 10:32 pm)
சேர்த்தது : அகரன்
பார்வை : 72
மேலே