சிரிக்கும் அரும்பே

சிரிக்கும் அரும்பே!

பட்டுக் கண்ணே! உன் மொட்டுப் போன்ற கன்னத்தை நான் வருடியதை எண்ணி புன்னக பூரித்து விழி மலர்கின்றாயா?

நீ உதிர்க்கும் புன்னகை அரும்பில் எத்தனை எத்தனை வண்ண ஜாலங்கள் என் எண்ண அலைகளில் சிறகடித்துப் பறக்கின்றது பார்!

ஆயிரம் ஆயிரம் கதிரவனின் ஒளிச்சுடர்களை உன் விழிகளில் காண்கின்றேனடா என் கண்னே!

இரவிலோ, வெண்ணிலவு தன் தண்ணளியை உன் பொன்மேனியில் மிளிரச் செய்ய சற்றே எட்டி நின்று
உன் கருவிழி வண்டெனெத் திகழும் கண்களைக் காணப் பொறாமை கொண்டு தத்தளித்து விண்ணில் மறைவதைப் பார்!

என்ன விண்மீன்கள் அவை? உன் ஒளிவீசும் புன்னகை மலருக்கு ஈடாகுமா என்ன?

தென்றல் தவழும் பூங்காற்று நறுமண மலரின் வாசத்தினை நுகர்ந்து வந்து உனக்குப் பரிசம் போடக் காத்திருக்கிறது பார்!

கோடை வெயிலும் கூட உன் குளிரூட்டும் பார்வையில் மயங்கி
சிறிதும் சுடாமல் இதமளிக்கக் காத்திருக்கிறதே!

என் இதயக் கமலத்தில் பூத்துக் குலுங்கும் உன்னை - என் அனுமதியின்றி
எத்தனைக் கொள்ளையர் கவரக் காத்திருக்கின்றனர் பார்!

சின்ன சிட்டே! வண்ன மொட்டே! தேனினும் இனிமையடா உன் மெல்லிய குரலோசை

குழலின் கீதமும், வீணையின் நாதமும் உன்தன்
தீங்குரலுக்கு முன் எம்மாத்திரம்?

நந்தவனத்து நறுமண மலர்களை எல்லாம் உன் பட்டான பாதத்தில்
கொட்டிக் குவிக்கத்தான் ஆசை

சற்றே துயில் கொள்ள உன்னை விட்டுவிடலாமென்றாலும்
என் மனவெள்ளம்
உன்னைச் சுற்றியே அலைபாய்ந்து வருகின்றதே!
என் செய்வேன் என் செல்லக் கண்மணியே!

எதைநல்குவேன் உனக்கினிநான் என்னையே தந்தபிறகு?

வாயுரையாய் உன்னை வாழ்த்த மட்டும் தான் முடிகிறது என்னால்.

வாழ்க என் செல்வமே! வாழ்க நீ பல்லாண்டு.

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்‌ஷ்மி (18-May-18, 1:49 pm)
பார்வை : 47
மேலே