சிலையும் சில பலிகளும்
அந்தத்தெரு முனையில்
ஓரிரு உடல்கள்.
நான்கு கைகள்
மூன்று தலைகள்
ஏழு கால்கள்
சில அரிவாள்கள்
கொஞ்சம் ஈக்கள்
நாக்குடன் நாய்கள்
காய்ந்த குருதி திட்டுகளும்
ரத்ததுளிகளும் நீரும்...
புரியாத மொழியில்
கிழிக்கப்பட்ட ஆடைகள் கூட.
தெரு அப்படியே இருந்தது.
தெருவில் இருந்த அந்த
அபத்தமான சிலை
ஓரமாய் சின்னதாய்
உடைந்துபோய் இருந்தது.
ஒரு அசட்டு கொத்தனார்
அரைமணிகூரில் சரி செய்வார்.
சரி செய்து விட்டார்.
திமிர் பிடித்த தெருவோ
காமத்தில் முடங்கியதாய்
அப்படியே இருந்தது
எல்லாம் மறந்தது போல்.