440 அழுது வருந்தினாரே பேரின்பம் அடைவர் – துன்பம் 6

கலித்துறை

உழுது புண்செயப் புன்செயும் நன்செயா முயர்பொன்
முழுதுந் தீயினிற் சுடச்சுட வொளிருமால் மொழியும்
பழுதின் மாமணி தேய்பட வொளிமிகும் படர்கொண்டு
அழுது நொந்தவர்க் கன்றிமற் றவர்க்கற மரிதே. 6

- துன்பம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”புண்ணாக்குவது போல உழுது மண்ணைக் கிளறக் கிளறப் புன்செயும் நன்செய்யாகும்.

உயர்ந்த தங்கத்தை முழுவதும் தீயினில் புடம் வைத்துச் சுடச்சுட ஒளிவிட்டு மாற்று உயரும்.

புகழ்ந்து சொல்லப்படும் குற்றமற்ற பெரிய ஒளிக்கல் சாணையிற் பட்டுத் தேய்வுற ஒளி மிகுந்திருக்கும்.

இது போல, துன்புற்று அழுது வருந்தியவர்களுக்கு அல்லாமல் மற்றவர்க்கு இன்பத்திற்கு ஏதுவாகிய நன்மையை அடைய முடியாது” என்கிறார் இப்பாடலாசிரியர்.

புன்செய் - வானம் பார்த்த விளைநிலம்.
படர் - துன்பம். அறம் - நன்மை. அரிது - முடியாது.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267 தவம், திருக்குறள்

நெருப்பில் புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வும் ஞானமும் மிகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-18, 3:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே