மேலாங்கோட்டு அம்மன்
தெற்றிப்பூ வாசத்திலே தெவிட்டாத செண்பகமே.
பிச்சிப்பூ வாசத்துக்கு பித்து கொண்ட நீலியம்மா.
கண்டாலே பயமாமே கறுப்பி உன்னுருவம்,
கொண்ட மாலை குடலாமே குழந்தையுள்ள ஒக்கலுக்கு,
முகமுழுசும் நாக்காமே முடியாத சடைக்காரி.
காலகாலர் ரத்தினமே
கைகாரி உன் அருளால்
காலன் வருவதையும்
கண்ணியமாய் சொல்லுவாயே.
நீலி நீ திரிசூலி நீங்காத பொட்டுடையாய்.
காவலுக்கு வார நீயும் கண்ணிரண்டில் சேலுடையாய்.
இயக்கி அம்மை நீயும் என்னுயிரை காத்திடுவாய்.
கேணியருகில் என்னை கீழ்வீழாது காத்தவளே.
பாணி அடித்தாலே பறந்தோடி நீ வருவாய்.
உறுமி உறுமினாக்கோ உருண்டோடி வந்திடுவாய்.
பம்பை ஓசையிலே பாடம் மகற்கெடுப்பாய்.
உன்னை நினைத்திடவே ஒரு சென்மம் போதாதே.
மஞ்சனை வாசமுடன் மனமகிழ்ச்சி தருபவளே.
உருட்டு பார்வையிலே ஊரடக்கி காப்பவளே.
தண்டை காண்கையிலே உந் தாள் பணிய தோணுதம்மா.
அம்மான்னு விளிச்சாலே அடுத்த கணம் வருவாயே.
தாயேன்னு சொன்னாக்கோ எந்தயக்கம் தீர்ப்பாயே.
ஒங்கையி புள்ளை என எனக்கும் கேட்டதுக்கு நா வாரேன் புள்ளையான்னு யேன்
இல்லம் வந்தவளே.
உன்னை ஆராதிச்சா ஊருலகம் போற்றுதம்மா.
எல்லேர் செண்பகமே
என்னைநீ காத்ததுபோல் எங்குலமும் காக்க வேணும்.
என் மகளாய் என்றுமே நீயிருக்கே.
உனக்கு சீர்தரவே உன்னை கேட்கின்றேன்.
பழவூரில் நீலி நீயே.
வேளிமலை ரத்தினமே.
காலகாலர் காலடியில் கை நீட்டி காப்பவளே.
குலசேகரன் சொல்கேட்டு எங்குலங் காத்து வருபவளே.
எனக்கென்ன பயமிருக்கு எங்கம்மை நீயிருக்க.
துணைக்கு வருவாயே துன்பம் எனக்கிருந்தா.
பணியும் வரம்வேணும் இனியும் நாம்பொறந்தா.